Published:Updated:

`தொப்புள் கொடியை அறுக்கக்கூட கத்தியில்லை..!’ - நடுரோட்டில் பிரசவம் பார்த்த பெண் காவலர்

ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் ஆபத்துதான்’ என்று அருகிலிருந்தவர் கூறினார். என்ன செயவதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தபோது, `வேறு வழியில்லை, பிரசவம் பார்த்தாக வேண்டும்’ என்று முடிவெடுத்தேன்.

chithra
chithra

சென்னை சூளைமேடு சௌராஷ்ட்ரா தெருவைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் கணவர் வசந்தகுமார். பானுமதிக்கு 13-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக வந்த சூளைமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ரா அந்தப் பெண்ணுக்கு நடுசாலையில் பிரசவம் பார்த்துள்ளார். அவரது இந்தச் செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ஆய்வாளர் சித்ராவைத்தொடர்புகொண்டு வாழ்த்துகளுடன் பேசத்தொடங்கினோம்.

baby
baby

``நான் 13-ம் தேதி அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அப்போது சூளைமேட்டு ஹைரோடு உள்ள சிக்னல் அருகே கர்ப்பிணிப்பெண் ஒரு பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கு அருகே வயதான பெண்மணி துணைக்கு நின்றுகொண்டிருந்தார். அவரின் கணவன் ஆட்டோ பிடிக்கச் சென்றிருந்தார். அந்தப் பெண்மணிக்கு அருகில் சென்றேன். ஜீப்பில் ஏற்ற முயன்றபோது, `நிலைமை மோசமாகிவிட்டது; ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் ஆபத்துதான்’ என்று அருகிலிருந்தவர் கூறினார். என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தபோது, `வேறு வழியில்லை, பிரசவம் பார்த்தாக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

உடனே நானும், என்னுடைய டிரைவர் பத்மாவும் இணைந்து, ரோட்டிலே அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தோம். தொடக்கத்தில் சற்று பதட்டமாகத்தான் இருந்தது. பின்னர், அடுத்த 10 நிமிடத்திலே அழகான ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. தொப்புள் கொடியை அறுக்க எங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. பழைய துருப்பிடித்த கத்தி ஒன்று இருந்தது. அதைக் கொடுக்கவும் மனமில்லை. சீக்கிரம் தொப்புள்கொடியை அறுத்தாக வேண்டிய கட்டாயம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அருகிலிருந்த எங்கள் ஜீப்பில் தேடிப்பார்த்தபோது, கயிறு ஒன்றில் இணைக்கப்பட்டு ஆஞ்சிநேயர் ஆடிக்கொண்டிருந்தார். `கடவுளாக பார்த்து உதவியதைப்போல அந்த ஆஞ்சநேயர் கயிற்றைத் தொப்புள் கொடிக்குள் சுற்றி அறுத்தோம்.

police commissioner honoring
police commissioner honoring

பிறகு ஆம்புலன்ஸ் வந்ததும், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்” என்றார் நெகிழ்ச்சியாக! ``இந்தச் சம்பவம் இப்படி வைரலாகும் என நான் நினைக்கவில்லை. என் டிரைவர் பத்மா, அவருக்குத் தெரிந்த வழக்கறிஞர் ஒருவரிடம் சொல்லியிருக்கிறார். பிறகு, அப்படியே பரவிவிட்டது. இதையறிந்த காவல் ஆணையர் எங்கள் இருவரையும் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் கொடுத்தார். ஏறத்தாழ 15 வருடங்கள் நான் காவல்துறையில் பணியாற்றி வருகிறேன். எனக்கு இதற்கு முன் பிரசவம் பார்த்த அனுபவம் இல்லை. கட்டாயம்தான் என்னை உந்தித்தள்ளியது” என்கிறார் சித்ரா.