Published:Updated:

`டி.என்.ஏ சோதனைக்கும் தயார்!' - தென்காசியில் கணவன் வீட்டை முற்றுகையிட்ட இளம்பெண்

கணவன் வீட்டு முன் போராட்டம் நடத்தும் தேன்மொழி
கணவன் வீட்டு முன் போராட்டம் நடத்தும் தேன்மொழி

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவன் வீட்டு முன்பாகப் போராட்டம் நடத்தி வருகிறார். தன் கணவர் கைக்குழந்தையுடன் தன்னைக் கைவிட்டுச் சென்றுவிட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள காட்டேறிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் முருகன். முருகனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகள் தேன்மொழிக்கும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. 

Vikatan

திருமணம் நடைபெற்ற 15 நாள்களில் முருகன், மார்ச் 1-ம் தேதி இந்தோனேசியாவில் உள்ள பேக்‌ஸ் ஒசேன் என்ற நிறுவனத்துக்கு வேலைக்காகச் சென்று விட்டார். கணவரின் வீட்டில் வசித்து வந்த தேன்மொழி, கர்ப்பமடைந்துள்ளதாக மார்ச் 8-ம் தேதி மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

தங்கள் மகன் முருகனுடன் இரண்டு வாரம் மட்டுமே குடும்பம் நடத்திய நிலையில், தேன்மொழி கர்ப்பமடைந்திருப்பதை முருகனின் பெற்றோர் ஏற்க மறுத்தனர். கருவில் வளரும் குழந்தைக்கும் தங்கள் மகனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்ததுடன், தேன்மொழியை வீட்டிலிருந்து விரட்டி விட்டனர். 

கைக்குழந்தையுடன் போராட்டம்
கைக்குழந்தையுடன் போராட்டம்

இந்தோனேஷியா சென்ற பின்னர் தொடர்ச்சியாக தேன்மொழியிடம் செல்போனில் பேசிவந்த முருகனும் பெற்றோரின் பேச்சைக் கேட்டுத் தொடர்பு கொள்வதை நிறுத்திக் கொண்டார். தேன்மொழியின் செல் நம்பரையும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் செய்துவிட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த தேன்மொழி, தன் கணவரைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் இயலவில்லை.

மன உளைச்சலடைந்த தேன்மொழி, கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில், நவம்பர் மாதம் 6-ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. தனக்குக் குழந்தை பிறந்திருக்கும் விவரத்தை கணவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தும் யாரும் பார்க்கக் கூட வரவில்லை. 40 நாள்கள் பொறுத்திருந்த அவர் 16-ம் தேதி சொந்த ஊரான காட்டேறிப்பட்டி வந்துள்ளார். 

டி.என்.ஏ சோதனை செய்தால் என் கணவர்தான் தந்தை என்பது உறுதி செய்யப்படும். அதற்கும் நான் தயார்.
போராடும் பெண் தேன்மொழி

கணவர் குடும்பத்தினர் தேன்மொழியையும் அவரது குழந்தையையும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அதனால் இன்று கணவர் வீட்டு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ``என் குழந்தைக்கு முருகன்தான் தந்தை. அவர் என்னையும் என் குழந்தையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு டி.என்.ஏ சோதனை மேற்கொண்டால் என் குழந்தைக்கு அவரே தந்தை என்கிற உண்மை புரியும்’’ என்றார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தேன்மொழியிடம் கடையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு