Published:Updated:

புதைகுழிக்குள் தந்தை; சிறைக்குள் தாய்; பரிதவிக்கும் பிள்ளைகள்! - மதுவால் சீரழிந்த குடும்பம்

மதுவால் சீரழிந்த குடும்பம்

தினமும் மது குடித்துவிட்டு வந்து தாக்கிய கணவனைக் கல்லைப்போட்டுக் கொன்றிருக்கிறார் பெண் ஒருவர். தந்தை புதைகுழிக்குள்ளும், தாய் சிறைக்குள்ளும் சென்றதால், பள்ளிக்குச் செல்லும் 2 குழந்தைகள் பரிதவிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.

புதைகுழிக்குள் தந்தை; சிறைக்குள் தாய்; பரிதவிக்கும் பிள்ளைகள்! - மதுவால் சீரழிந்த குடும்பம்

தினமும் மது குடித்துவிட்டு வந்து தாக்கிய கணவனைக் கல்லைப்போட்டுக் கொன்றிருக்கிறார் பெண் ஒருவர். தந்தை புதைகுழிக்குள்ளும், தாய் சிறைக்குள்ளும் சென்றதால், பள்ளிக்குச் செல்லும் 2 குழந்தைகள் பரிதவிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.

Published:Updated:
மதுவால் சீரழிந்த குடும்பம்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் உரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன், வயது 38. சவுண்டு சர்வீஸ் கடை நடத்திவந்த இவர், தெருக்கூத்து நாடகங்களில் மிருதங்கம் வாசிக்கும் தொழிலையும் செய்துவந்திருக்கிறார். சீராளனின் மனைவி சோபனா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் அருகிலிருக்கும் அரசுப் பள்ளியில் படித்துவந்தனர். இந்த நிலையில், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் சீராளன், குடும்பம் நடத்தப் பணம் தராமல் இருந்திருக்கிறார். இதனால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. நேற்று முன்தினம் இரவும் மதுபோதையில் தள்ளாடியபடி வந்த சீராளன், மனைவியிடம் தகராறு செய்ததோடு, தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

சீராளன்
சீராளன்

இதனால் ஆத்திரமடைந்த சோபனா, வீட்டுக்குள் இருந்த 3 அடி நீள கடப்பாரையை எடுத்து வந்து, கணவனின் பின் மண்டையில் தாக்கியிருக்கிறார். சுருண்டு வீட்டுத் திண்ணையில் விழுந்த கணவனைப் பார்த்தும், ஆத்திரம் அடங்காமலிருந்த சோபனா, கருங்கல்லை எடுத்து தலைமீது போட்டிருக்கிறார். பலத்த காயமடைந்த சீராளன் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கணவனைக் கொன்ற பின்னர், தன் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியில் வசிக்கும் தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

நேற்று காலை சீராளன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக தக்கோலம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். போலீஸார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை தொடர்பாக, அவரின் மனைவியைத் தேடினர். இதற்கிடையே, தாய் வீட்டுக்குச் சென்று பதுங்கியிருந்த சோபனா, தன் உறவினர்களிடம் நடந்ததைக் கூறி அழுதிருக்கிறார்.

சோபனா
சோபனா

பின்னர், தன் தங்கையிடம் இரண்டு பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ளும்படி ஒப்படைத்துவிட்டு மப்பேடு காவல் நிலையத்துக்குச் சென்று சரணமடைந்தார். மப்பேடு போலீஸார் மூலம் தகவல் கிடைத்தவுடன், தக்கோலம் போலீஸார் அங்கு சென்று சோபனாவைக் கைதுசெய்து அழைத்துவந்தனர். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சோபனா, சிறையில் அடைக்கப்பட்டார். தந்தை புதைகுழிக்குள்ளும், தாய் சிறைக்குள்ளும் சென்றதால், பள்ளிக்குச்ச் செல்லும் விவரமறியாத இரண்டு குழந்தைகள் பரிதவிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். மதுவால் ஒரு குடும்பமே சீரழிந்திருக்கும் சம்பவம், அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.