Published:Updated:

கடலூர்: `ஆக்சிஜனை பிடுங்கிட்டுப் போயிட்டாங்க!’ - கணவரின் சடலத்துடன் மருத்துவமனையில் கதறிய பெண்

ராஜாவின் மனைவி கயல்விழி
ராஜாவின் மனைவி கயல்விழி

கடலூர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் ஆக்சிஜன் தொடர்பை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிச் சென்றதால் தன் கணவர் உயிரிழந்ததாகப் பெண் ஒருவர் கதறி அழும் வீடியோ காட்சி பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப் போட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் ஆக்சிஜன் இணைப்பைத் துண்டித்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தன் கணவர் உயிரிழந்ததாகப் பெண் ஒருவர் கதறி அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் அரசு மருத்துவமனை
கடலூர் அரசு மருத்துவமனை

மருத்துவமனைப் படுக்கையில் ஓர் ஆணின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. படுக்கையையொட்டி தரையில் அமர்ந்து கதறும் அவரின் மனைவியிடம், ``ஆக்சிஜனை யார் பிடுங்கியது?" என்று வீடியோ எடுப்பவர் கேட்க, ``அந்த டாக்டரு பேரு தெரியாது. கறுப்பா, உயரமா இருப்பான் மாமா அவன். ஒரு பேஷன்ட் உயிருக்கு ஆபத்துனு சொல்லி ஆக்சிஜனை புடுங்கிட்டார். அப்போ, இவரும்தானே உயிருக்குப் போராடுறாரு, மூச்சு விட சிரமப்படுறார்னு நான் சொன்னதைக் கேக்காம, என்னை தள்ளிவிட்டுட்டு இழுத்துட்டு போயிட்டாரு. ஐயோ போச்சே…" என்று அழுகிறார்.

தொடர்ந்து, ``கீழ இன்னொரு பேஷன்ட் சீரியஸா இருக்காரு. இவரு நல்லாத்தான் இருக்காருன்னு சொல்லி இவருகிட்ட இருந்த ஆகக்சிஜனை புடுங்கிட்டுப் போயிட்டாங்க மாமா. மூச்சுவிட முடியாம தவிக்கிறாருங்க, என்னங்க இப்படி போறீங்களேன்னு கேட்டேன். கையில் ஆக்சிஜன் அளவைக்கூட செக் பண்ணாம கழட்டிட்டுப் போயிட்டாங்க. என்னால மூச்சு விட முடியல, முடியலன்னு இவரு கத்துனாரு.

அதுக்கப்புறம் நானே பக்கத்துல இருந்த ஆக்சிஜனை எடுத்து வச்சிப் பார்த்தேன். என்னால முடியல. என் வாழ்க்கையையும் எம்புள்ளைங்க வாழ்க்கையையும் வீணாக்கிட்டுப் போயிட்டாங்க. எங்க வாழ்க்கை வீணாப் போச்சு. அதுக்கப்புறம் நானே அவரு நெஞ்சுல அடிச்சிப் பார்த்தேன். கொஞ்சம் பல்ஸ் வந்துடுச்சு. ஓடிப்போயி டாக்டருங்களைக் கூப்பிட்டேன். ஆனா நான் அவங்களைத் திட்டிட்டேன்னு யாரும் வரல. அவரில்லாம நான் எப்படி இருப்பேன்" என்று கதறுகிறார்.

கொரோனாவால் உயிரிழந்த கணவர் சடலத்துடன் கதறிய பெண்
கொரோனாவால் உயிரிழந்த கணவர் சடலத்துடன் கதறிய பெண்

உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா. கூலித் தொழிலாளியான இவருக்கு பத்து நாள்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரின் மனைவி கயல்விழி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் ராஜா நேற்று உயிரிழந்திருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்க கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ் பாபுவை தொடர்புகொண்டபோது, ``அந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ளும்படி மருத்துவக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அதில் மருத்துவர்கள் தவறு செய்திருப்பது உறுதியானால் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நான் விசாரித்தவரை, உயிரிழந்த ராஜா கடந்த 10 நாள்களாக முதல் தளத்தில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். நேற்று காலை அவர் ஆக்சிஜன் மாஸ்க்கை கழற்றிவிட்டு உணவருந்தியிருக்கிறார்.

India Covid 19 Outbreak -Representational image
India Covid 19 Outbreak -Representational image

அந்த நேரத்தில் கீழ்தளத்தில் வந்த கொரோனா தொற்றாளர் ஒருவருக்கு பொறுத்தப்பட்ட ஆக்சிஜன் சரியாகப் பொருந்தவில்லை. அதனால் ராஜாவிடம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை கீழே எடுத்து வந்து அந்த நோயாளிக்குப் பொருத்தியிருக்கின்றனர். அதேபோல, உடனே ராஜாவுக்கு வேறொரு ஆக்சிஜன் சிலிண்டரும் வைக்கப்பட்டுவிட்டது. இவை அனைத்தும் மூன்று நிமிடங்களில் முடிந்துவிட்டன. இதற்கிடைப்பட்ட நேரத்தில் நோயாளி ராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் `சசி’ மனித உரிமைக்கான செயல்பாட்டு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாபுவிடம் பேசினோம். ``கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் மருத்துவர்களும் செவிலியர்களும் காட்டும் அலட்சியம் குறித்து பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த சம்பவத்தைப் பார்க்கிறேன். மருத்துவமனையில் நாங்கள் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால்தான் ராஜா உயிரிழந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

’சசி’ மனித உரிமைக்கான செயல்பாட்டு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாபு
’சசி’ மனித உரிமைக்கான செயல்பாட்டு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாபு
கடலூர்: `அவரு முகத்தையாவது பாத்துடணும்’ - கணவரின் சடலத்துக்காக போராடும் அஞ்சலை

சமூக வலைதளங்களிலும் பத்திரிகைகளிலும் வந்த செய்திகளின் அடிப்படையில் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், முதல்வர் மற்றும் தமிழக உள்துறை செயலாளருக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன். `கொரோனா தொற்று விவகாரத்தில் அலட்சியம் காட்டும் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்' என்று இரண்டு நாள்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இச்சம்பவம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த 5-ம் தேதி ராஜா என்பவருக்கு கடும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்தது. ஆனாலும் நுரையீரல் பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்குப் பிறகு கடந்த 18-ம் தேதி அவரது நுரையீரலில் முன்னேற்றம் ஏற்பட்டதால், C-PAP கருவி மூலம் ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. ஆக்ஸிஜனும் 78 -80 என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி, உணவு உண்பதற்காக தாமாகவே மாஸ்க்கை கழற்றியுள்ளார் ராஜா.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

அந்நேரத்தில் மணிகண்டன் என்பவருக்கு ஆக்ஸிஜன் 30 அளவில் இருந்ததால் அவருக்கு ராஜாவின் C-PAP கருவி பயன்படுத்தப்பட்டது. உணவு அருந்திக் கொண்டிருந்த ராஜாவுக்கும் உடனடியாக C-PAP கருவி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் உணவு உட்கொள்ளும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ராஜா உயிரிழந்துள்ளார்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு