Published:Updated:

`மகனைக் கொன்னுட்டாங்க, நிர்க்கதியாய் நிற்கிறோம்!’ - மாற்றுத்திறனாளி மகள், பேத்தியை நினைத்து தாய் கண்ணீர்

விஜயலெட்சுமி
விஜயலெட்சுமி ( ம.அரவிந்த் )

மகளின் வாழ்கையில் மாற்றம் வராதா எனக் கண்ணீர் வடிக்கும் மாற்றுதிறனாளி தாய்...

தஞ்சாவூரை சேர்ந்த வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் மூளை வளர்ச்சி குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான தன் மகளைக் காப்பதற்குப் பல்வேறு துயரங்களைக் கடந்து போராடி வருகிறார்.

விஜயலெட்சுமி
விஜயலெட்சுமி

இவர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரே நபரும் பிரச்னை ஒன்றில் கொல்லப்பட்டுவிட இனி எதிர்காலத்துக்கு என்ன செய்யப் போகிறோம். எப்படியாவது தன் மகள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படாதா எனக் கண்ணீரும் கம்பலையுமாக வேதனையில் தவித்து வருவது காண்போரை கலங்க வைக்கிறது.

தஞ்சாவூர் அருகே உள்ள மருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலெட்சுமி. இவர் வாய் பேச முடியாத, காதுகள் கேட்காத மாற்றுத்திறனாளி பெண். இவருக்கு 14 வயதில் பரமேஸ்வரி என்ற மகள் இருக்கிறார். இதில் பெரும் சோகம் என்னவென்றால் பரமேஸ்வரியும் மூளை வளர்ச்சி குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளி பெண் என்பதுதான். பிறந்ததிலிருந்தே இவருக்கு கை, கால்கள் செயல்படவில்லை. மேலும், இடுப்புக்கு கீழே எந்த அசைவும் இல்லை. அவரின் தாய்தான் அவரை கவனித்து வருகிறார். விஜயலெட்சுமியின் கணவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இதில் அவருக்குப் போதிய வருமானம் இல்லை. மாற்றுத்திறனாளிகளான மனைவி, மகளைக் கவனித்துக் கொள்வதற்கு அவருக்கு மனமும் இல்லை.

விஜயலெட்சுமி
விஜயலெட்சுமி

இந்த நிலையில் இருவரையும் தாய் ஸ்தானத்தில் இருந்து கவனித்து வந்துள்ளார் விஜயலெட்சுமியின் தம்பி ஆனந்த்பாபு. சமூக ஆர்வலரான இவரை தண்ணீர் பிரச்னையைத் தட்டி கேட்டதற்காகச் சிலர் அடித்துக் கொன்றுவிட்டனர். தனக்கும் தன் பெண்ணுக்கும் ஆதரவாக இருந்த தம்பி இறந்துவிட விஜயலெட்சுமி தன்னையும் காத்து தன் மகளையும் காக்க போராடி வருகிறார். வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் ரணமாக நகர்வதாக அந்த ஏழை மாற்றுத்திறனாளி தாய் தன் மகளை நினைத்து உருகுவது கல் நெஞ்சம் படைத்தவரையும் கலங்க வைக்கிறது.

இது குறித்து பேசுவதற்கு விளார் கிராமத்தில் உள்ள ஆனந்த்பாபு வீட்டுக்குச் சென்று விஜயலெட்சுமியைச் சந்தித்தோம். எந்த அசைவும் இல்லாமல் தரையில் கிடத்தப்பட்டிருந்த தன் மகளின் தலையை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தார் விஜயலெட்சுமி. அப்போது அவரை அறியாமலே அவர் கண்களில் சொட்டு சொட்டாகக் கண்ணீர் கொட்டியது. அந்தக் கண்ணீர் பரமேஸ்வரியின் கன்னத்தில் விழ தாயின் கண்ணீரைக்கூட துடைக்க முடியாதபடி என்னை ஆண்டவன் படைத்துவிட்டானே என அவரின் கண்களில் நீர் கசிய அவர் பார்த்த பார்வை அவற்றை உணர்த்துகிறது.

பரமேஸ்வரி
பரமேஸ்வரி

சைகையின் மூலம் விஜயலெட்சுமியிடம் பேசினோம். தன் கையாலேயே, வார்த்தைகள் வெளிவராத நிலையிலும் அவர் படும் வேதனையை வலியை கண்ணீரோடு நம்மிடம் சொன்னார். ``எனக்கு வாழ்க்கையில் எதுவும் வேண்டாம். ஆனால், என் பொண்ணு குணமாகி நல்லா வாழ வேண்டும்'' என தன் மகளை கட்டிக்கொண்டு கலங்கினார்.

பின்னர் பரமேஸ்வரின் பாட்டி சாந்தாவிடம் பேசினோம். ``என் பெண்ணுக்குப் பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாது. காதும் கேட்காது. அவளுக்குப் பிறந்த பிள்ளையையும் கை, கால்கள் செயலற்று மூளை வளர்ச்சி குறைபாடுடைய பெண்ணாகப் பிறக்க வைத்துவிட்டான் ஆண்டவன். இவர்கள் இரண்டு பேரையும் வச்சுகிட்டு என் பொண்ணோட புருஷனால வாழ முடியவில்லை. அதனால் எங்க வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு போய்ட்டார். எங்களோடு சேர்த்து இவர்கள் இரண்டு பேரையும் என் மகன் ஆனந்த்பாபு தான் அப்பாவுக்கு அப்பாவாக தாயுக்கு தாயாக இருந்து கவனிச்சுகிட்டான். உடம்பில் ஊனம் இருந்தாலும் அதை மனதுக்குத் தெரியாத அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருந்தான். எப்படியாவது பரமுவின் நோயை மட்டும் குணப்படுத்திடணும்மா என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான்.

சாந்தா
சாந்தா

இந்த நிலையில் தண்ணீர் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் பாவிகள் சிலர் என் மகனை அடித்துக் கொன்று விட்டனர். எங்க குடும்பத்துக்கே ஆலமரமாய் இருந்தவன் சாய்ந்துவிட நாங்கள் எல்லோரும் நிர்க்கதியாய் நிற்கிறோம். எல்லோரையும் காப்பாத்துவதுக்கு தன் உடம்பில் வலு இல்லையே என்பதை நினைத்து வயதான என் கணவர் கண்ணீர் வடிக்காத நாள்களே இல்லை. பெத்த புள்ளைங்க இப்படி இருக்க, எப்படி நிம்மதியாக வாழ முடியும். ஆனாலும், எங்க வாழ்க்கை இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது. நாங்கள் இருக்கும் வரை என் மகளையும் பேத்தியையும் பார்த்துக்குவோம். ஆனால் எங்களுக்கு பிறகு இரண்டு பேரையும் யார் பார்த்துக் கொள்வார்.

கணவன் கவனித்துக் கொள்ளாததால் வாய்பேச முடியாத நிலையிலும் அவ்வப்போது வேலைக்குச் சென்று தன் மகளுக்கு வேண்டியதை செய்து கொடுப்பாள் விஜயலெட்சுமி. அப்படி ஒரு நாள் வேலைக்குப் போனப்ப வீட்டில் தனியாக இருந்த பரமேஸ்வரியிடம் தப்பாக நடந்து அவளை சீரழித்துவிட்டான் காமுகன் ஒருவன். வேலை முடிந்து வந்ததும் மகளின் நிலையை பார்த்த நிலை குலைந்து போய் அப்படியே உட்கார்ந்த விஜயலெட்சுமியைத் தேத்த வார்த்தைகள் இல்லை.

Vikatan
கணவன் கவனித்துக் கொள்ளாததால் வாய்பேச முடியாத நிலையிலும் அவ்வப்போது வேலைக்குச் சென்று தன் மகளுக்கு வேண்டியதை செய்து கொடுப்பாள் விஜயலெட்சுமி.

நாங்களும் அவளை ஆரம்பத்தில் அரசு மருத்துவமனைகளில் காண்பித்து வந்தோம். எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு தனியார் மருத்துவமனையில் காண்பிச்சப்ப முதுகுத் தண்டில் ஒரு ஆபரேஷன் செய்தால் ஓரளவுக்குக் குணமாக வாய்ப்பிருப்பதாகச் சொன்னார் டாக்டர்.

ஆனால், எங்களிடம் பணம் இல்லை. ஒரு பிள்ளை இப்படி இருப்பது எந்தத் தாயாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. வாய் பேச முடியாத என் பொண்ணு என்ன செய்வாள். கண்களில் வழிகின்ற நீரோடுதான் ஒவ்வொரு நாளும் கழிகிறது இவர்களுக்கு. இதைத் தீர்ப்பதற்கு ஒரு வழியும் பிறக்கவில்லை'' என்றார்.

விஜயலெட்சுமி
விஜயலெட்சுமி

விஜயலெட்சுமியோ அலங்கோலமாகக் கிடக்கும் என் பொண்ணு வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டால் போதும். வேறு எதுவும் எனக்கு வேண்டாம்'' எனத் தொண்டைக்குழியில் இருந்து ஒரு சத்தம் வருகிறது. அவை நமக்கு புரியவில்லை. ஆனால், அந்த ஏழைத் தாயின் கண்கள் அவற்றைப் புரிய வைக்கின்றன.

பின் செல்ல