Published:Updated:

`கடன் இரண்டரை லட்சம்; கந்துவட்டி ரூ.7 லட்சம்!’ -நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை அதிரவைத்த 2 பெண்கள்

தற்கொலைக்கு முயன்ற பெண்கள்
தற்கொலைக்கு முயன்ற பெண்கள்

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. காவல்துறையினரின் உதவியுடன் கந்துவட்டி கும்பல் எங்களை வீட்டில் குடியிருக்கவிடாமல் தொந்தரவு செய்கிறார்கள்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். அவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும் ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளனர். சொந்தமாக சோடா தயாரிக்கும் தொழில் செய்து வந்தனர். 

கலெக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள்
கலெக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள்

முருகனின் தம்பி, புகழ் சேட். அவரது மனைவி பாமா. இவர்களும் முருகனுடன் சேர்ந்து சோடா கம்பெனியில் வேலை செய்து வந்தனர். தொழில் செய்வதற்காக இவர்கள் உள்ளூரைச் சேர்ந்த இரு நபர்களிடம் ரூ.2,50,000 கடன் வாங்கியுள்ளனர்.

சோடா கம்பெனியில் இழப்பு ஏற்பட்டபோதிலும், தொடர்ந்து வட்டி கட்டி வந்த நிலையில் அசலைச் செலுத்த முடியவில்லை. அதனால் வட்டிக்குக் கொடுத்தவர்கள் உடனடியாகப் பணத்தைக் கொடுக்குமாறு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.  

மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட பாமா
மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட பாமா

வாங்கிய கடனுக்கு இதுவரை ஏழு லட்சம் ரூபாய் வட்டியாகச் செலுத்திய நிலையில், அசல் தொகையைக் கேட்டு நெருக்கடி கொடுத்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தவர்கள் காவல்துறையிலும் இவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். போலீசாரும் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் மனநெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து கடந்த மாதத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் முறையிட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. அதனால் மனம் உடைந்த முருகனின் மனைவி கிருஷ்ணவேணி, புகழ் சேட் மனைவி பாமா ஆகியோர் இன்று நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளேயே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

விசாரணை நடத்தும் டி.ஆர்.ஓ
விசாரணை நடத்தும் டி.ஆர்.ஓ

இதுபற்றித் தற்கொலைக்கு முயன்ற கிருஷ்ணவேணி கூறுகையில், ``நாங்கள் வட்டிக்குப் பணம் வாங்கியது உண்மைதான். அதற்கான வட்டியை இப்போது வரை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், எங்களைத் தொழில் செய்ய விடாமல் நெருக்கடி கொடுக்கும் கந்துவட்டிக் கும்பல், காவல்துறையினரின் துணையுடன் எங்களை மிரட்டுகிறார்கள்.

`கந்துவட்டி கடனுக்காக அடிச்சே கொன்னுட்டாங்க!' - ஆட்சியரிடம் கலங்கிய ஏரல் இளைஞரின் உறவினர்கள்

களக்காடு காவல்துறையினர் எங்களை அழைத்து விசாரித்துவிட்டு, `இன்று மாலைக்குள் பணம் கொடுக்காவிட்டால் ஏதாவது வழக்குபோட்டு உள்ளே தள்ளிவிடுவேன்’ என மிரட்டினார்கள். அதனால் வேறு வழிதெரியாமல் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தோம்’’ என்றார் கலங்கிய கண்களுடன்.

பெண்களிடம் குறை கேட்கும் ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்
பெண்களிடம் குறை கேட்கும் ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்

கந்துவட்டிக் கொடுமை காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு இசக்கிமுத்து என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதன்பின்னர் தீக்குளிக்க முயலும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், ’மனு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தீக்குளிக்க முயல வேண்டாம்’ என ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தீக்குளிக்க முயன்ற சம்பவம் பற்றி அறிந்த நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், இரண்டு பெண்களையும் அழைத்து விசாரணை நடத்தினார். கந்துவட்டி பிரச்னையிலிருந்து அவர்களுக்குத் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால் இரு பெண்களின் குடும்பத்தாரும் நிம்மதியடைந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு