Published:Updated:

மக்களைத் தேடி முதல்வர் முகாம்... அமைச்சர் காலில் விழுந்து கதறிய பெண்! - நடந்தது என்ன?

அமைச்சர் அன்பில் மகேஷிடம்  குறையைக் கூறும் பெண்
News
அமைச்சர் அன்பில் மகேஷிடம் குறையைக் கூறும் பெண்

``எங்களுக்குச் சொந்தமான நிலத்தை, என் கணவரின் சகோதரர் அபகரித்துக்கொண்டு தர மறுக்கிறார். எங்க பகுதி வி.ஏ.ஓ லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்.”

தஞ்சாவூரில் நடைபெற்ற `மக்களைத் தேடி முதல்வர்' சிறப்பு முகாமில் பெண் ஒருவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காரை மறித்துக்கொண்டு நின்ற நிலையில், பெண் போலீஸார் அந்தப் பெண்ணை அப்புறப்படுத்த முயல, உடனே அவர் காரின் மீது தனது தலையை மோதிக்கொண்டார். இந்த நிலையில் அமைச்சர் வந்ததும், அந்தப் பெண் காலில் விழுந்து கதறினார். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் காலில் விழுந்து கதறிய பெண்
அமைச்சர் காலில் விழுந்து கதறிய பெண்

பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி `மக்களைத் தேடி முதல்வர்’ என்ற சிறப்பு முகாம் நடத்தப்படுவதுடன், பொதுமக்களின் குறைகள் மனுக்களாகப் பெறப்பட்டுவருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக, `மக்களைத் தேடி முதல்வர்’ சிறப்பு முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றார். அதன்படி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் மனுக்கள் பெற்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பின்னர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காருக்கு வருவதற்கு முன்பாக அவரின் காரின் முன்பகுதியில் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அங்கு பணியிலிருந்த பெண் போலீஸார், `அமைச்சர் வரப்போகிறார்’ எனக் கூறி அந்தப் பெண்ணை நகரச் சொன்னார்கள். அதற்கு அந்தப் பெண், `நான் நகர மாட்டேன்... இங்குதான் நிற்பேன்’ என்றார். பின்னர் பெண் போலீஸார், `அமைச்சர்கிட்ட மனு கொடுக்கலாம்’ எனச் சொல்லி அந்தப் பெண்ணை அப்புறப்படுத்த முயன்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷிடம்  குறையைக் கூறும் பெண்
அமைச்சர் அன்பில் மகேஷிடம் குறையைக் கூறும் பெண்

அப்போது, ``எனக்கு புருஷன் இல்லை. என் மகன் கூலி வேலை பார்க்குறான். எங்களோட சொத்தை அபகரிச்சுவெச்சுருக்காங்க. பல தடவை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 35 வருஷமாக அலையுறேன். இனிமேல் என்னால கஷ்டப்பட முடியாது. பிச்சை எடுக்க முடியாது’ என்று கதறியழுதபடி காரின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தேசியக்கொடியின் கம்பியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட மறுத்தார். பின்னர் தலையை காரின் மீது வேகமாக மோதிக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வந்தார். அப்போது அவர் காலில் அந்தப் பெண் விழுந்ததுடன், எழுந்திரிக்காமல் அழுதுகொண்டேயிருந்தார். அப்போது, தஞ்சை மத்திய மாவட்டப் பொறுப்பாளரும், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ-வுமான துரை.சந்திரசேகரன், `சேதியச் சொல்லும்மா... ஓவென அழுவுற’ என அந்தப் பெண் அழுத மாதிரியே அழுதுகாட்டி, `ஆளப் பாரு’ எனப் பேசியதாகத் தெரிகிறது. `எவ்வளவு வலியிருந்தா அந்தப் பெண், அமைச்சர் காருக்கு முன்னாடி விழுந்து கதறும்... அதோட வலியை உணர முடியாத எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன், அப்படிப் பேசியது சரியல்ல’ என சிலர் கருத்து தெரிவித்தனர்.

அமைச்சரிடம் புகார் அளித்த பெண்
அமைச்சரிடம் புகார் அளித்த பெண்

இதையடுத்து பெண் போலீஸார், அந்தப் பெண்ணைத் தூக்க முயன்றனர். முடியவில்லை. பின்னர் திமுக நிர்வாகிகள் சிலர் அந்தப் பெண்ணிடம் என்னவென்று கேட்டு, அமைச்சரிடம் பேசவைத்தனர். அப்போது அவர், ``என்னோட பேரு இந்திரா. ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் சொந்த ஊர். என் கணவர் இறந்துவிட்டார். மகன் கூலி வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் எங்களுக்குச் சொந்தமான நிலத்தை, என் கணவரின் சகோதரர் அபகரித்துக்கொண்டு தர மறுக்கிறார். எங்க பகுதி விஏஓ லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். மனு கொடுத்து பல வருடங்களாக அலைகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கிறாங்க.

எங்களுக்குச் சொந்தமான இடத்துல உள்ள வீட்டைச் சரிசெய்யச் சென்ற என் மகன்மீது பாப்பாநாடு போலீஸில் பொய்ப் புகார் அளித்தனர். என்னையும் அடித்தனர். என் மகன் நேரில் சென்று விளக்கம் அளித்த பின்னரும் போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. 35 ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்டதால், நான் தஞ்சையில் கூலி வேலை செய்து கஷ்டப்படுகிறேன். என்னால இனி முடியாது. உரிய நடவடிக்கை எடுத்து எனது பிரச்னையைத் தீர்க்க வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.