Published:Updated:

கொரோனா: `உயிரிழந்த பெண் மருத்துவர்; முறைப்படி தகனம்!’ - நெகிழ்ந்த குடும்பத்தினர்

இறந்த பெண் டாக்டரின் உடல்
இறந்த பெண் டாக்டரின் உடல்

கொரோனாவால் இறந்த உடலை அடக்கம் செய்யும்போது அச்சத்தில் சில இடங்களில் மனித உடலுக்குரிய எந்த மரியாதையும் கொடுக்காமல், இறுதிச் சடங்கையும் செய்யாமல் உடலை தூக்கி வீசுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தன.

கும்பகோணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அந்த மருத்துவரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்காக இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தஞ்சாவூரிலிருந்து அவரின் உடலை எடுத்து சென்றதுடன் உரிய முறையில் இறுதிச் சடங்கை செய்து உடலை தகனம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவர்
கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவர்

கும்பகோணம் பக்தபுரி தெருவைச் சேர்ந்தவர் மகப்பேறு மருத்துவர் விஷ்ணுபிரியா (70) அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற இவர், தான் வசிக்கும் வீட்டின் கீழ்ப் பகுதியில் கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தார். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக மனித நேயத்துடன் மருத்துவம் பார்த்து வந்த இவர் கைராசிக்காரர் என்றும் பெயரெடுத்து திகழ்ந்ததுடன் சுமார் 2,000 பெண்களுக்கு மேல் பிரசவம் பார்த்துள்ளார். தன்னிடம் வரும் பெண்களுக்கு கனிவுடன் சிகிச்சை கொடுத்து வந்ததால் தஞ்சை, அரியலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்ட ங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இவரது கிளினிக்குக்கு வந்து செல்வர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகத் தஞ்சாவூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் நேற்று இறந்துவிட்டார். இதையடுத்து விஷ்ணுபிரியாவின் மகனான டாக்டர் ஹரி பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரான பாதுஷா என்பவரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததுடன் உடலை தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்துக்கு எடுத்து வந்து இறுதிச் சடங்கை நடத்தித் தருமாறும் கேட்டுள்ளனர்.

இறந்த பெண் டாக்டரின் உடல்
இறந்த பெண் டாக்டரின் உடல்

இதையடுத்து பாதுஷா தலைமையிலான த.மு.மு.க நிர்வாகிகள் உரிய பாதுகாப்பு கவச உடையும் அணிந்துகொண்டு ஆம்புலன்ஸுடன் தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். மற்றும் சிலர் கும்பகோணம் மயானத்தில் ஆக வேண்டிய வேலைகளைக் கவனித்து வந்தனர்.

மருத்துவமனை ஊழியர்கள் டாக்டர் விஷ்ணுபிரியாவின் உடலுக்கு கெமிக்கல் வைக்க வேண்டும் எனக் கூறியதையடுத்து அதையும் அவர்களே செய்தனர். பின்னர் கொஞ்சம் நேரம் கூட தாமதிக்காமல் உரிய பாதுகாப்புடன் டாக்டரின் உடலை பேக் செய்த அவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கும்பகோணத்துக்குப் புறப்பட்டனர்.

கொர்ரோனா பாதிப்பால் உயிரிழந்த டாக்டர் விஷ்ணுபிரியா
கொர்ரோனா பாதிப்பால் உயிரிழந்த டாக்டர் விஷ்ணுபிரியா
ம.அரவிந்த்

இந்நிலையில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் முஜிபு ரஹ்மான் தலைமையிலான த.மு.மு.க-வினர் இறுதிச்சடங்கை செய்வதற்காகத் தயார் நிலையில் கும்பகோணம் மயானத்தில் காத்திருந்தனர். பின்னர் விஷ்ணுபிரியாவின் உடலுக்கு இந்து முறைப்படி செய்யக்கூடிய சடங்கு செய்யப்பட்டது. இதையடுத்து ஏழை மக்களின் மருத்துவராகத் திகழ்ந்த விஷ்ணுபிரியாவின் உடலுக்கு உரிய மரியாதை செலுத்திய பின்னர் எரியூட்டும் மின் தகன மேடையில் வைத்து உடலை எரித்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த உடல் என்று தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாமல், எந்த அச்சமும் கொள்ளாமல் மனித நேயத்துடன் செயல்பட்ட த.மு.மு.க நிர்வாகிகளை டாக்டர் குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

கொரோனா
கொரோனா

த.மு.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், ``கொரோனாவால் இறந்த உடலை அடக்கம் செய்யும்போது தமக்கும் பரவி விடும் என்ற அச்சத்தில் சில இடங்களில் மனித உடலுக்குரிய எந்த மரியாதையும் கொடுக்காமல், இறுதிச் சடங்கையும் செய்யாமல் உடலைத் தூக்கி வீசுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தன.

அவை சமூக வலைதளங்களிலும் பரவியது. இறுதிச் சடங்கை செய்ய வேண்டும் என எங்களை அழைத்த உடனேயே எதைப் பற்றியும் கவலைப் படாமல் இறந்தவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்ததுடன், இறுதி வரை நின்று இந்து மதத்தில் செய்யப்பட்டும் சடங்குகளையும் செய்து அவரது உடலைத் தகனம் செய்தோம். இதனால் டாக்டரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். மனிதனுக்கு மனிதன்தான் உதவ முடியும். அந்த வகையில் நாங்க இதைச் செய்தோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு