Published:Updated:

`லைக்கிற்கு ஆசைப்பட்டு போலீஸ் சீருடையில் டூயட் வீடியோ!'- சிக்கிலில் துணை நடிகை

போலீஸ் சீருடையில் துணை  நடிகை
போலீஸ் சீருடையில் துணை நடிகை

லைக்கிற்கு ஆசைப்பட்ட துணை நடிகை ஒருவர், போலீஸ் சீருடையில் டூயட் பாடும் டிக்டாக் வீடியோக்களைத் தொடர்ந்து வெளியிட்டுள்ளார். தற்போது அவருக்குச் சிக்கல் எழுந்துள்ளது.

டிக்டாக்கில் வீடியோ வெளியிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதில் சிலர் லைக்கிற்கு ஆசைப்பட்டு வெளியிடும் சில வீடியோக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வில்லங்கத்தை ஏற்படுத்துவதுண்டு. குறிப்பாகக் காவல் துறையினரை விமர்சித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டவர்கள் சிக்கலில் சிக்கிய சம்பவங்களும் உண்டு. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சீரியல் நடிகை நிலானி, போலீஸ் சீருடையில் காவல்துறையை விமர்சித்த வீடியோ வெளியிட்டிருந்தார். அதுதொடர்பாக வடபழனி போலீஸார், நிலானியைக் கைது செய்தனர்.

டிக்டாக்கில் துணை நடிகை
டிக்டாக்கில் துணை நடிகை

காவல்துறையை விமர்சித்து வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாத டிக்டாக் பிரியர்கள், வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதைப் போல டிக்டாக்கில் விபரீத வீடியோக்களைப் பதிவு செய்துவருகின்றனர். சமூக வலைதளத்தில் போலீஸ் சீருடையில் ஆண் காவலரும் பெண் காவலரும் டூயட் பாடும் வீடியோக்கள் வைரலாகின. அந்த வீடியோக்களைப் பதிவு செய்தது யாரென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் ராதிகா என்ற ஐடியிலிருந்து அந்த வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டதை சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து போலீஸ் சீருடையில் இருக்கும் அந்தப் பெண் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அந்தப் பெண், நர்ஸாக வேலை பார்த்தவர். தற்போது துணை நடிகையாக நடித்துவருகிறார். பெண் காவலர் கதாபாத்திரத்தில் அவர் நடித்தபோதுதான் டூயட் வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் பதிவு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்தத் துணை நடிகை மற்றும் அவருடன் போலீஸ் சீருடையில் நடித்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, இனிமேல் காவல்துறையினரை விமர்சிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிடக்கூடாது என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

போலீஸ் சீருடையில் துணை நடிகை
போலீஸ் சீருடையில் துணை நடிகை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``போலீஸ் சீருடையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டவர் துணை நடிகையாக உள்ளார். படப்பிடிப்பின்போது அவர் இதுபோன்ற வீடியோக்களை எடுத்துள்ளார். டிக்டாக் வீடியோ பிரியரான அந்த துணை நடிகை பதிவு செய்யும் வீடியோக்களுக்கு அதிகளவில் லைக்குகள் வரவில்லை. அதனால் அதிக லைக்கிற்கு ஆசைப்பட்டு போலீஸ் சீருடையில் டூயட் வீடியோக்களை அந்த நடிகை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பார்ப்பவர்கள் உண்மையான போலீஸார் என்றே கருதி அந்த வீடியோக்களை அதிகளவில் ஷேர் செய்துவருகின்றனர். அதனால்தான் இனிமேல் டிக்டாக்கில் போலீஸ் சீருடையில் வீடியோக்களை வெளியிடக்கூடாது என்று சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு