Published:Updated:

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்கவைத்த பெண் தொழிலாளர்களின் போராட்டம்! - நடந்தது என்ன?!

பெண்கள் போராட்டம்
News
பெண்கள் போராட்டம்

சுங்குவார் சத்திரத்தில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 17.12.2021 அன்று இரவு முதல் விடிய விடிய சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் பெண் தொழிலாளர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் 5,000 பெண், ஆண் தொழிலாளர்கள் வேலை பார்த்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொழிற்சாலையின் சார்பில் பூந்தமல்லியிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விடுதியில் உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. உடனே அவர்களுக்கு அருகிலுள்ள பூந்தமல்லி அரசு மருத்துவமனை மற்றும் நேமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இதையடுத்து அன்றே (16.12.2021) விடுதியின் முன்பு பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் நலம் விசாரித்து, சம்பந்தப்பட்ட விடுதி, தொழிற்சாலை நிர்வாகம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

சாலைமறியல்
சாலைமறியல்

சிகிச்சைக்குச் சென்ற பெண்களின் நிலை என்ன என்பதை அறிய முடியாத நிலையில், விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் தொழிற்சாலை அமைந்துள்ள சுங்குவார் சத்திரத்திலுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 17.12.2021 அன்றைய தினம் இரவு முதல் விடிய விடிய சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு நேரில் வந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், ``சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்களில் சிலர் குணமடைந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். சிலருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார். சிகிச்சை பெற்று நலமாக இருக்கும் பெண் ஒருவரிடம் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெண்கள் முன் காட்டினார். மேலும், ``மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அனைத்து தனியார் தொழிற்சாலைகளின் விடுதிகளிலும் அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர் பற்றி ஆய்வு செய்யப்படும். இது குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விரைந்து முடிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி
மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி

மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததை அடுத்து பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது, ``ஒவ்வோர் அறையிலும் 30 பேர் வரை தங்கவைக்கின்றனர். கொரோனா காலத்தில்கூட இந்த நிலைதான். சுகாதாரமான உணவோ, குடிநீரோ வழங்கப்படுவதில்லை. இதனால் இங்கு உணவருந்தவே பயமாக இருக்கிறது. மருத்துவத் தேவைகளுக்காகக் காப்பாளரிடம் சொன்னால் அதை ஒரு பொருட்டாகவே அவர் எடுத்துக்கொள்வதில்லை. தங்கள் அவசர தேவைகளுக்காகச் சொந்த ஊருக்குக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது. தங்களைச் சந்திக்க பெற்றோர்கள் வரும்போது அவர்களை வெளியிலிருந்து பார்த்துப் பேசிவிட்டு அப்படியே திருப்பி அனுப்பிவிடுகின்றனர், விடுதிக் காப்பாளர்கள். ஒரு வாரமாக இந்த உணவு பிரச்னையால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெண்கள் சாலைமறியல்
பெண்கள் சாலைமறியல்

மூன்று நாள்களாகச் சிகிச்சைக்குச் சென்ற பெண்கள் தொழிற்சாலைக்கு வேலைக்கே வரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்துக் கேட்டால் எங்களையே மிரட்டுகின்றனர். மேலும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்களின் விவரங்களைத் தர மறுக்கிறார்கள். எனவேதான் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென முடிவெடுத்தோம். அவர்களின் நிலை என்ன என்பது பற்றி வெளிப்படையாக எங்களுக்கு அறிவிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை” எனத் தெரிவித்தனர்.