Published:Updated:

`இனி உயிர் பிழைக்க மாட்டோம்னு நினைச்சேன்!’ - ஆனைவாரி நீர்வீழ்ச்சியின் திக்... திக்... நிமிடங்கள்!

``என்னையும் குழந்தையையும் மீட்டு மேல அனுப்புனாங்க. அதுக்கடுத்த விநாடியே அவங்க ரெண்டுபேரும் தண்ணியில விழுந்துட்டாங்க. அவங்க வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போனதைப் பார்த்ததும் எனக்கு மயக்கமே வந்துடுச்சு” –ஆனைவாரி நீர்வீழ்ச்சி விபத்தில் சிக்கிய இளம்பெண்.

``தீரத்தில் மனித நேயம் ஒளிர்கிறது!”

சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு அருகே முட்டல் கிராமத்தை ஒட்டியபடி கல்வராயன்மலையின் தொடர்ச்சியில் அமைந்திருக்கிறது முட்டல் ஏரி மற்றும் ஆனைவாரி நீர்வீழ்ச்சி. சுற்றுலாத்தலமான இந்தப் பகுதி தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடந்த அக்டோபர் 24-ம் தேதி ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அங்கு சுற்றலாவுக்குச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் சிக்கிக்கொண்டார். அப்போது அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் நீந்திச் சென்று அவர்களைக் காப்பாற்றிய இரண்டு சுற்றுலாப்பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி
ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி

ஆனால் அதன் பிறகு அந்த இருவரும் நீச்சலடித்துப் பாதுகாப்பாகக் கரைசேர்ந்துவிட்டனர். சுற்றுலாப்பயணி ஒருவரால் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களின் மனதைப் பதறவைத்தன. அதன் தொடர்ச்சியாக `தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரம்மிக்க செயல் பாராட்டுக்குரியது. அவர்கள் அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர்காக்கத் துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயம் ஒளிர்கிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

எட்டு மாதக் கைக்குழந்தையுடன்...

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட இளம்பெண் சிவரஞ்சனியை கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூரிலுள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம். சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல் நம்மிடம் பேசிய அவர், ``கொரோனாவால ரெண்டு வருஷம் வீட்டைவிட்டு எங்கேயும் போக முடியலை. அதனால போன ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 24) நான், எங்க வீட்டுக்காரர் மூர்த்தி, அண்ணன் சிவா, அண்ணி சவுந்தர்யா, அவங்களோட ரெண்டு குழந்தைங்க எல்லாரும் பக்கத்துல இருக்கற ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்குப் போனோம். அவங்க எல்லாரும் அங்க குளிச்சதால அண்ணனோட எட்டு மாதக் கைக்குழந்தை சுஜினாஸ்ரீயை நான்தான்வெச்சுக்கிட்டிருந்தேன். பாப்பா அழுததால தண்ணியில மிதந்துவந்த மீன்களை அதுக்கு காட்டிக்கிட்டே அந்தப் பக்கம் போனேன்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

அப்போ கணுக்கால் வரைக்கும்தான் தண்ணி இருந்துச்சு. வெள்ளையா வந்துக்கிட்டிருந்த தண்ணி கலர் கொஞ்ச நேரத்துல செம்மண் கலர்ல மாறிடுச்சு. தண்ணியோட அளவு அதிகமாகி முழங்காலைத் தாண்ட ஆரம்பிச்சுது. தண்ணி வேகமா வர வர, நான் கொஞ்சம் கொஞ்சமா பாறைகள் மேல ஏறிக்கிட்டே இருந்தேன். ஒருகட்டத்துல நான் நின்னுக்கிட்டிருந்த பாறை முழுசா தண்ணிக்குள்ள மூழ்கிட்டதால, இன்னும் கொஞ்சம் மேலே ஏற முயற்சி பண்ணினேன். ஆனால் கையும் காலும் வழுக்குனதால அவ்ளோ ஈசியா என்னால மேல போக முடியலை. அப்போ, ‘பயப்படாதீங்க. பத்து நிமிஷத்துல வெள்ளம் நின்னுடும். உங்களைக் காப்பாத்திடுவோம்’னு எல்லாரும் கத்துனாங்க. ஆனால் வெள்ளத்தோட வேகம் கொஞ்சம்கூட குறையவே இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்களைக் காப்பாத்துன ரெண்டு பேரும் தண்ணியில விழுந்துட்டாங்க...

அப்போதான் நாம வெள்ளத்துல மாட்டிக்கிட்டோம்னும், பிழைக்கறதே கஷ்டம்னும் புரிஞ்சுது. ஆனாலும் நமக்காக இல்லைன்னாலும் குழந்தைக்காகத் தப்பிக்கணும்னு முடிவெடுத்து, இன்னும் கொஞ்சம் மேலே ஏறி ஒரு பாறையைக் கெட்டியா புடிச்சுக்கிட்டேன். அப்போ அந்தப் பக்கம் இருந்த எங்க அண்ணன் வெள்ளத்துல குதிச்சு இந்தப் பக்கம் வந்தாரு. அதுக்குள்ள அந்தப் பக்கம் இருந்த யாரோ ரெண்டு பேர் அந்த வெள்ளத்துல குதிச்சு, இந்தப் பக்கம் வந்து என்னையும் குழந்தையையும் மீட்டு மேல அனுப்புனாங்க. அங்கே இருந்த எங்க அண்ணன் எங்களை பத்திரமா மேலே கூட்டிக்கிட்டு போயிட்டாரு.

குடும்பத்தினருடன் சிவரஞ்சனி
குடும்பத்தினருடன் சிவரஞ்சனி

நாங்க பாதுகாப்பா மேல வந்த அடுத்த விநாடியே எங்களை காப்பாத்துன ரெண்டுபேரும் தண்ணியில விழுந்துட்டாங்க. அவங்க வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போனதைப் பார்த்ததும் எனக்கு மயக்கமே வந்துடுச்சு. அதுக்கப்புறம் அவங்களுக்கு ஒண்ணும் ஆகலைன்னு சொன்னப்புறம்தான் நிம்மதியா ஆச்சு. அப்புறம்தான் அவங்க பேரு அப்துல் ரகுமான், லட்சுமணன் அப்படிங்கறதும், அவங்க தப்பிச்சுட்டாங்கனும் தெரியவந்தது. முன்ன பின்ன தெரியாதவங்களுக்காகத் தங்களோட உயிரைப் பணயம்வெச்ச அவங்கதான் கடவுள்” என்கிறார் கண்கள் கலங்கியபடி.

பிழைப்பேனா என்பதுகூடத்  தெரியவில்லை...

இவர்களை காப்பாற்றியவர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் என்பவர் ஆத்தூர் கொள்ளம்பட்டறை பகுதியில் தமிழ்நாடு என்ற பெயரில் மருந்தகம் ஒன்றை நடத்திவருகிறார். அவரிடம் பேசினோம். “கண்ணுக்கு முன்னாடி கைக்குழந்தையோட ஒரு பொண்ணு ஆபத்துல நின்னுக்கிட்டிருக்காங்க. அங்கிருந்த எல்லாரும் அவங்களைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல், அதை செல்போன்ல வீடியோ எடுத்துக்கிட்டிருக்காங்க.

லட்சுமணன் - அப்துல் ரகுமான்
லட்சுமணன் - அப்துல் ரகுமான்

வெள்ளத்தில் இறங்கினால் நான் பிழைப்பேனா என்பதுகூட அப்போ எனக்குத் தெரியவில்லை. ஆனா அவங்களை எப்படியாவது காப்பாத்திடணும்னு முடிவெடுத்தேன். எனக்கு முன்னாடியே நயினார்பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன்னு ஒருத்தர் வெள்ளத்துல குதிச்சுப் போயிட்டிருந்தாரு.

திக்... திக்... நிமிடங்கள்

ஆனால் அவர் எதையும் எடுத்துக்கிட்டுப் போகலை. அதனால் இங்கிருந்த ரெண்டுபேரோட சுடிதார் ஷாலையும், ரெண்டு துண்டையும் வாங்கிக்கிட்டு வெள்ளத்துல இறங்கினேன். தண்ணியோட அசுர வேகத்துக்கு ஈடுகொடுக்கறது சிரமமாத்தான் இருந்துச்சு. எப்படியோ போராடி அந்தப் பக்கம் போயிட்டேன். எங்களுக்கு முன்னாடியே அந்தக் குழந்தையோட அப்பா அங்க போயிட்டாரு. ஷால், துண்டையெல்லாம் ஒண்ணா முடிச்சுப்போட்டு அவரை மரத்துல கட்டச் சொன்னோம்.

`இரண்டு உயிர்கள்... திக் திக் நிமிடங்கள்... தாயின் ஆனந்தக் கண்ணீர்!' - டாக்டரான ஆச்சர்ய குழந்தை

அதுக்கப்புறம்தான் அவங்க ரெண்டு பேரையும் பத்திரமா அனுப்பிட்டு, நாங்க மேல ஏற முயற்சி பண்ணினோம். அப்போ அந்த ஷாலும் துண்டும் கிழிஞ்சுட்டதால நானும் லட்சுமணனும் வெள்ளத்துல விழுந்துட்டோம். ஆனால் கொஞ்ச தூரத்துலேயே நாங்க ரெண்டு பேரும் நீச்சலடித்து தப்பிச்சிட்டோம்” என்றார்.

மனிதம் தழைக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு