Election bannerElection banner
Published:Updated:

`முதல்வர் சொல்லியே 42 நாள் ஆச்சு!’ - கலங்கும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்

முடிதிருத்தும் தொழிலாளர்கள்
முடிதிருத்தும் தொழிலாளர்கள்

‘‘கடனில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், சலூன் கடைகளைத் திறந்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும்’’ என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஊரடங்கில், அனைவரது வாழ்வாதாரமும் முடங்கியிருக்கிறது. குறிப்பாக, பியூட்டி பார்லர், ஸ்பாக்கள், முடிதிருத்தும் மையங்கள், டீக்கடைகளைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொழில்களைச் சார்ந்திருக்கும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அடுத்த வேளை உணவுக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர்.

முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம்
முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம்

அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், நான்கு பேரை மட்டும் மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர். கலெக்டரை சந்திக்க அனுமதி கிடைக்காத காரணத்தினால், வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியில் கோரிக்கை மனுவைப் போட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘கொரோனா தொற்று காரணமாக, மார்ச் 24-ம் தேதி அடைத்த சலூன் கடைகளை இதுநாள் வரை திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்.

`சார்.. Zoom பண்ணாதீங்க ப்ளீஸ்..!' - பிரான்ஸின் சலூன் கடை சங்கடங்களைப் பகிரும் தமிழர் #MyVikatan

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, `நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும்’ என்று அறிவித்தார். அவர் அறிவித்து 42 நாள்களாகியும் அந்த நிதி கிடைக்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாகக் கடை வாடகை, தினசரி தண்டல், சீட்டு, வட்டி, மின் கட்டணம், குடும்பச் செலவு போன்ற அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. கடனில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘கடந்த மே 19-ம் தேதி முதல் விதிமுறைகளைப் பின்பற்றி சலூன் கடைகளைத் திறந்துகொள்ளலாம்’ என்று சுகாதாரத்துறை அறிவித்தது.

முடிதிருத்தும் தொழிலாளர்கள்
முடிதிருத்தும் தொழிலாளர்கள்

ஆனால், வேலூர் மாவட்ட நிர்வாகம் சலூன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கவில்லை. எங்கள் நிலையில் இருந்தால்தான் கஷ்டமும் நஷ்டமும் தெரியும். எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கிறது. எனவே, சலூன் கடைகளைத் திறந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில், பேரிடர் கால நிவாரணமாக ரூ.15,000 வழங்க வேண்டும். மன உளைச்சலில் இருக்கிறோம். தயவுகூர்ந்து கடைகளைத் திறக்க அனுமதி கொடுங்கள். தனிமனித இடைவெளி, கிருமி நாசினி, கையுறை, முகக் கவசம், தரை பகுதி சுகாதாரம் போன்ற பாதுகாப்புடன் தொழில் செய்கிறோம்’’ என்றனர் கண்ணீர் தோய்ந்த முகத்துடன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு