Published:Updated:

`பரிசோதனைக்குப் பயந்து தப்பி ஓடிய 21 தொழிலாளிகள்' - அதிர்ச்சியில் உறைந்த மானாமதுரை போலீஸார்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மானாமதுரை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தப்பிச் சென்றவர்களில் 11 பேரைப் பிடித்தனர். அவர்களுக்கு உணவு வழங்கியதுடன், தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

ஊரடங்கு உத்தரவினால் கொல்கத்தாவில் வேலையின்றி தவித்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனை அச்சத்தினால் நடுவழியில் பேருந்தில் இருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் 14 பேர் பிடிபட்ட நிலையில் மேலும் 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பேருந்தில் வந்த தொழிலாளர்கள்
பேருந்தில் வந்த தொழிலாளர்கள்

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த 50 நாள்களாக வேலையின்றியும், உணவுக்கு வழியின்றியும் இவர்கள் தவித்து வந்தனர். மேலும், இவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் 28 பேர் தனி பேருந்தில் இன்று காலை சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்தப் பேருந்து சிவகங்கை மாவட்ட எல்லைக்கு வந்த நிலையில் அங்கிருந்த சுகாதாரத்துறை மற்றும் போலீஸார், சிவகங்கையைச் சேர்ந்த 7 பேரை கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றனர்.

தொழிலாளர்கள் வந்த பேருந்து.
தொழிலாளர்கள் வந்த பேருந்து.

இதைக்கண்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளிகள், ராமநாதபுரம் மாவட்டம் எல்லையான பார்த்திபனூர் சோதனைச் சாவடியில் தங்களையும் தனிமைப்படுத்த அழைத்துச் சென்று விடுவார்கள் எனக் கருதியுள்ளனர். மேலும், தனிமைப்படுத்தல் முகாமுக்குச் செல்லாமல் இருக்க திட்டமிட்ட இவர்கள், தாங்கள் வந்த பேருந்து வழியில் நிறுத்துப்படும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளனர்

இந்த நிலையில், மானாமதுரை ரயில்வே கேட் அருகே காரில் வந்த ஒருவர் பேருந்தை வழிமறித்துள்ளார். டிரைவர் பேருந்தை நிறுத்தியவுடன் அதில் இருந்த 3 பெண்களை அந்த நபர் தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளார். இந்நேரத்தில் மற்றவர்களும் பேருந்தில் இருந்து இறங்கித் தப்பியுள்ளனர். இதனால் செய்வது அறியாது தவித்த டிரைவர் இதுகுறித்து மானாமதுரை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மானாமதுரை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தப்பிச் சென்றவர்களில் 11 பேரைப் பிடித்தனர். இதன்பின் அவர்களுக்கு உணவு வழங்கியதுடன், தனிமைப்படுத்துதல் முகாமுக்குச் சென்று சோதனைக்கு ஒத்துழைக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதேபோல் காரில் அழைத்துச் செல்லப்பட்ட 3 பெண்களும் போலீஸாரிடம் பிடிபட்டனர். இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய மேலும் 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தப்பிய தொழிலாளர்களை பிடித்த போலீஸார்.
தப்பிய தொழிலாளர்களை பிடித்த போலீஸார்.

இந்தச் சம்பவம் குறித்து மானாமதுரை டி.எஸ்.பி கார்த்திகேயன் நம்மிடம், ``வெளிமாநிலங்களிலிருந்து பேருந்து மூலம் அழைத்து வரப்பட்டவர்களில் சிவகங்கையைச் சேர்ந்த 7 பேர் கொரோனோ மருத்துவ சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். மானாமதுரை ரயில்வே கேட் அருகே பேருந்தை நிறுத்திய ராமர் என்பவர் பேருந்தில் வந்த தனது உறவுக்கார பெண்கள் 3 பேரைத் தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இதனால் நம்மையும் தனிமைப்படுத்திவிடுவார்கள் என அஞ்சிய தொழிலாளர்கள் பேருந்தில் இருந்து இறங்கி நடந்தே ராமநாதபுரம் சென்றுள்ளனர். இவர்களில் 11 பேரைப் பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். மற்றவர்களை ராமநாதபுரம் போலீஸார் தேடி வருகிகிறார்கள். பேருந்தை வழிமறித்து டிரைவரை மிரட்டி 3 பெண்களை அழைத்துச் சென்ற ராமர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு