Published:Updated:

`சரக்கை வெச்சுட்டு உசுருக்குப் போராடுறோம்’ -ரூ.1 கோடி மதிப்பிலான பாட்டில்களோடு குமுறும் ஓட்டுநர்கள்

பீர் லாரிகள்
பீர் லாரிகள்

கோவாவில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள பீர் பாட்டில்களை ஏற்றிவந்த தங்கள் லாரிகளை புதுச்சேரிக்குள் அனுமதிக்கவில்லை என்றால் தீக்குளித்துவிடுவோம் என்று ஓட்டுநர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மது வகைகளுக்குப் பெயர்பெற்ற புதுச்சேரியில் சில மது வகைகள் அங்கேயே உற்பத்தி செய்யப்பட்டாலும், கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து அதிகமாக மது வகைகள் இறக்குமதி செய்வது வழக்கம். அதன்படி ரூ.1 கோடி மதிப்புள்ள பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி கோவாவில் இருந்து புதுச்சேரியை நோக்கிக் கிளம்பிய 11 லாரிகள், மறுநாள் 25-ம் தேதி இரவு தமிழகத்தின் எல்லையான ஓசூர் பகுதியை வந்தடைந்தன. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக லாரிகளைத் தமிழகத்திற்குள் அனுமதிக்க மறுத்தது கிருஷ்ணகிரி காவல்துறை.

புதுச்சேரி எல்லை
புதுச்சேரி எல்லை

அதனால் ஏப்ரல் 14-ம் தேதிவரை லாரிகள் அங்கேயே நின்றதால் மது ஏற்றிச் செல்வதற்கான பர்மிட் தேதி முடிவடைந்தது. அதையடுத்து புதிய பர்மிட் வாங்கிக்கொண்டு புதுச்சேரிக்குக் கிளம்பிய லாரிகள் கடந்த 18-ம் தேதி புதுச்சேரி எல்லை பகுதிக்கு வந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் வெளிமாநில வாகனங்களை அனுமதிக்க முடியாது என்று புதுச்சேரி போலீஸ் கைவிரித்துவிட்டது.

அதனால் வேறு வழியின்றி புதுச்சேரி எல்லையை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியில் 11 லாரிகளும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 1 மாதமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் கடைகளை உடைத்து மதுபாட்டில்களைத் திருட ஆரம்பித்துவிட்டனர். அதேபோல ரூ.50 விலையுள்ள ஒரு குவார்ட்டர் பாட்டிலின் விலை ரூ.600க்கும், ரூ.400 விலையுள்ள ஒரு ஃபுல் பாட்டிலின் விலை ரூ.6,000 வரை கள்ளச்சந்தையில் விற்கப்பட்டது.

அதனால் தங்களின் உயிருக்கும் சரக்குக்கும் பாதுகாப்பு அளிக்கும்படியும், லாரிகளை புதுச்சேரிக்குள் அனுமதிக்கும்படியும் கோரிக்கை விடுத்தனர் ஓட்டுநர்கள். ஆனால் லாரிகளின் பர்மிட் காலம் முடிவடைந்துவிட்டதால் அவற்றை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண். இந்நிலையில் லாரி ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி தமிழகக் காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தியது புதுச்சேரி காவல்துறை தலைமை.

``பயமா இருக்கு சார்!” - 1 கோடி மதிப்புள்ள பீர் பாட்டில்களுடன் போக்கிடமின்றி தவிக்கும் 11 லாரிகள்

ஆனால், ”விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்திருப்பதால் அந்த லாரிகளை அனுமதிக்க முடியாது என்றும் 2 நாள்களில் புதுச்சேரிக்குள் செல்லவில்லை என்றால் அனைத்து லாரிகளையும் பறிமுதல் செய்வோம்” என்று எச்சரித்தார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்.

தர்ணா போராட்டத்தில் பீர் லாரி ஓட்டுநர்கள்
தர்ணா போராட்டத்தில் பீர் லாரி ஓட்டுநர்கள்

இந்நிலையில்தான் நேற்று இரவு லாரி ஓட்டுநர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், ``டாஸ்மாக்கை மூடிட்டதால கடைகளை உடைச்சி சரக்கைத் திருட ஆரம்பிச்சிட்டாங்க. இந்த நேரத்துல ரூ.1 கோடி மதிப்பிலானபீர் பாட்டில்களை வச்சிக்கிட்டு நாங்க எப்படி இருக்கறது. எங்க உசுருக்கு என்ன உத்தரவாதம். நைட் நேரத்துல சரக்கு குடுனு கேட்டு ரவுடிங்க கத்திய காட்டி மிரட்டுறாங்க. லாரிகளைப் புதுச்சேரிகுள்ள அனுமதிக்கலைன்னா நாங்க தீக்குளிச்சிடுவோம்” என்று குமுறினார்கள். இன்று இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு