Published:Updated:

`தமிழ் மார்க்சியத்தைப் படைத்தவர்' - காலமானார் எழுத்தாளர் கோவை ஞானி

கோவை ஞானி
கோவை ஞானி

தமிழ்ப் பணிக்காகப் புதுமைப்பித்தன் `விளக்கு விருது’ (1998), கனடா - தமிழிலக்கியத் தோட்ட `இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய `பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையில் 1935-ல் பிறந்தவர் கோவை ஞானி (85). அவரது இயற்பெயர் கி.பழனிச்சாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றியவர். மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வந்தார். தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்ததன் மூலம் தமிழ் மார்க்சியத்தைப் படைத்தவர்.

கோவை ஞானி
கோவை ஞானி

கோவை ஞானி 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வந்தார். 'இடைவிடாது இயங்கிவரும் ஆய்வறிஞர் ஞானிக்குள் தமிழ் இயங்குகிறது' என்று இவரை வர்ணிப்பார்கள்.

Vikatan

மேலும், கோவை ஞானி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் `விளக்கு விருது’ (1998), கனடா - தமிழிலக்கியத் தோட்ட `இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய `பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவை ஞானி
கோவை ஞானி

நீரிழிவு நோய் காரணமாக, கண் பார்வை இழந்து பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். உடல் நலம் குறைந்தாலும், 1988-ம் ஆண்டு முதல் உதவியாளர் துணையோடு வாசிப்பு, எழுத்து என்று இயங்கி வந்தார்.

``தமிழோடுதான் தனக்கு வாழ்வு” என்ற நிலையில் கடைசிவரை உறுதியாக இருந்தார். சில நாள்களுக்கு முன்புவரை, தன் நண்பர்கள் வட்டாரத்தில் இலக்கியம் குறித்து உரையாடியுள்ளார். கோவை ஞானியின் மனைவி இந்திராணி 2012-ம் ஆண்டு உயிரிழந்தார். இந்தத் தம்பதிக்கு பாரிவள்ளல், மாதவன் என இரண்டு மகன்கள் உள்ளனர். கோவை ஞானி சில ஆண்டுகளாக இருதய நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார்.

கோவை ஞானி
கோவை ஞானி

இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. ``அவரது உயிரிழப்பு, தமிழ் சிந்தனைப் புலத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு” என எழுத்தாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு