Published:Updated:

`என்கவுன்டர் எமதர்மன்!' - வாகனச் சோதனையில் எழுத்தாளரை மிரள வைத்த காவலர்கள்

எழுத்தாளர் சோ.தர்மன்
எழுத்தாளர் சோ.தர்மன்

‘ரைட்டர்னு ‌முதல்லயே சொல்லவேண்டியதுதானே சார்!’ என்ற அந்தக் காவலர். ‘நான்தான் காரணத்தைச் சொல்லிவிட்டேன். அதெல்லாம் வெளியிலே சொல்லவேண்டிய விஷயமில்லையே!’ என்றேன். அடுத்து அவர் எழுப்பிய கேள்விதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலைத் தன் எழுத்துக்களால் பதிவுசெய்யும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர், சோ.தர்மன். நேற்று, அவருக்கு கடுமையான பல்வலி ஏற்பட்டிருக்கிறது. தனக்கு வழக்கமாக சிகிச்சை அளிக்கும் பல் மருத்துவருக்கு போன் செய்திருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த மருத்துவரோ, ‘உங்களுக்குத் தேவையான மருந்துகளை மெசேஜ் அனுப்புகிறேன். அதை வாங்கி சாப்பிடுங்கள்’ என்றிருக்கிறார்.

கோவில்பட்டியில் உள்ள மருந்துக் கடை ஒன்றிற்கு மருந்து வாங்கச் சென்றிருக்கிறார் சோ.தர்மன். அப்போது, காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அவர் கூறிய காரணங்களைக் காவலர்கள் ஏற்கவில்லை. பிறகு, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயன்ற காவலர்களிடமிருந்து ஒரு வழியாகத் தப்பிவந்துள்ளார். எழுத்தாளர்களுக்கு இந்தச் சமூகத்தில் கிடைக்கும் மரியாதை குறித்து தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருக்கிறார் சோ. தர்மன்.

சோ.தர்மன்
சோ.தர்மன்

எழுத்தாளர் சோ.தர்மனிடம் பேசினோம். “நேற்று இரவு ஏழு மணிக்கு மருந்து வாங்க மெடிக்கலுக்குச் சென்றபோது, காவல்துறையினர் என்னை மடக்கி விசாரணை செய்தனர். மருந்து வாங்கச் செல்கிறேன் என நான் சொன்ன காரணங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு, செல்போனில் உள்ள டாக்டரின் மெசேஜை காட்டினேன். அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மேலும், என்னுடைய இருசக்கர வாகனத்தைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டனர். ‘வீட்டுக்கு நடந்து போ… காலையில ஸ்டேஷனுக்கு வந்து வண்டிய எடுத்துக்கோ…’ என ஒருமையில் பேசினார்கள். அவர்கள் அனைவரும் இளம் வயது ஹோம்கார்டுகள். வேறுவழியில்லாமல், அறிமுகமான காவல் அதிகாரி ஒருவருக்குப் போன் செய்தேன். அவர் போனை அந்தக் காவலரிடம் கொடுக்கச் சொன்னார்.

நான் ஒரு ரைட்டர் என அந்த அதிகாரி காவலரிடம் சொல்லி இருக்கிறார். பிறகு ‘ரைட்டர்னு ‌முதல்லயே சொல்லவேண்டியதுதானே சார்!’ என்றார் அந்தக் காவலர். ‘நான்தான் காரணத்தைச் சொல்லிவிட்டேன். அதெல்லாம் வெளியிலே சொல்லவேண்டிய விஷயமில்லையே!’ என்றேன். அடுத்து அவர் எழுப்பிய கேள்விதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “கடைசியாக எந்த ஸ்டேஷன்ல சார் வேலை பாத்தீங்க?“ என்றார். நானும் ‘விளாத்திகுளத்தில் வேலைபார்த்து‌ ரிடையர்டு ஆகிவிட்டேன்’ என்றேன்.

எழுத்தாளர் சோ.தர்மன்
எழுத்தாளர் சோ.தர்மன்

பிறகு, பவ்வியமாக வண்டிச் சாவியைக் கொடுத்தார் அவர். தமிழக முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் என விஐபி-க்கள் எனக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கிற படங்களை அவருக்கு செல்போனில் காட்டினேன். அவற்றைப் பார்த்து வாயைப் பிளந்தவர், அப்போதும் நான் ஒரு எழுத்தாளன் என்பதை உணரவில்லை. பிறகு, ‘எல்லாமே என்னுடைய வீரதீரச் செயலுக்குக் கொடுக்கப்பட்டவை!’ என நானும் அள்ளிவிட்டேன். ‘அப்படியா சார்!’ என்றவர், என்னுடைய பெயரைக் கேட்டார். `என்கவுன்டர் எமதர்மன்' எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய திராவிட அரசுகள், எத்தனை இலக்கியவாதிகளைக் கௌரவப்படுத்தி இருக்கிறார்கள்? ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் எழுத்தாளர்கள் என்றால் தனி மரியாதை இருக்கிறது.
சோ.தர்மன்

தமிழ்நாட்டில் ரைட்டர் என்றால், பத்திரம் எழுதுபவர். இல்லையென்றால் போலீஸ் ரைட்டர் என நினைக்கிறார்கள். இந்தநிலையில், எழுத்தாளன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் எனக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். நவீன இலக்கியம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. அரசியல்வாதிகள்தானே அவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய திராவிட அரசுகள், எத்தனை இலக்கியவாதிகளைக் கௌரவப்படுத்தி இருக்கிறார்கள்? ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் எழுத்தாளர்கள் என்றால் தனி மரியாதை இருக்கிறது.

சோ.தர்மன்
சோ.தர்மன்

கேரளாவில் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் பினராயி விஜயன், எங்களுடன் சாப்பிடுவதை விரும்புகிறார். அங்கே, பேக்கரியில் கேக் வாங்கச் சென்றபோது, எங்களை அடையாளம் கண்டு கொண்ட அந்தக் கடைக்காரர், ‘எங்கள் கடைக்கு எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள்’ என அருகிலிருந்தவர்களிடம் சொல்லி மகிழ்கிறார். பரிசுப்பொருள் கொடுத்து அனுப்புகிறார். கேரள விடுதி ஒன்றில் நாங்கள் தங்கியிருந்தபோது, அதன் உரிமையாளரே நாங்கள் தங்கி இருக்கும் அறைக்கு காபி கொண்டுவந்து கொடுத்துக் கௌரவிக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில்தான் விருது வாங்கும் எழுத்தாளன்கூட வரிசையில் காத்திருந்து வாங்கவேண்டிய அவலம் இருக்கிறது“ என்றார் ஆதங்கமாக.

அடுத்த கட்டுரைக்கு