Published:Updated:

இணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள்! - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது

அதியமான் ப
சுபாஷ் ம நா
இணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள்! - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது
இணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள்! - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது

சேலம் ரயில்வே கோட்டத்தில் `ஆபரேஷன் தண்டர்' சோதனை நடவடிக்கையில் இணையத்தில் முறைகேடாகப் பயணச்சீட்டுகளை எடுத்து அதிக விலைக்கு விற்ற 5 போலி முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் போலி டிக்கெட் விற்பனையைக் கண்டுபிடிக்க `ஆபரேஷன் தண்டர்' என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோடைக்காலங்களில் பயணிகள் அதிகளவில் பயணித்து வருவதால் ரயில்களில் பயணச்சீட்டுகளின் முன்பதிவானது அதிகமாக இருக்கும். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு போலி டிக்கெட் முகவர்கள் சிலர் இந்திய இரயில்வே இணையதளமான ஐ.ஆர். சி. டி. சி. இணையத்தில் மூலம் பயணச்சீட்டுகளை எடுத்து, அதை அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து பயணிகளுக்கு முறையாகப் பயணச்சீட்டு கிடைக்கவும், போலி டிக்கெட் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆபரேஷன் தண்டர் என்ற நடவடிக்கையைச் சேலம் ரயில்வே கோட்டம் எடுத்தது. இதில் வணிகப் பிரிவு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். 

இணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள்! - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது

ரயில்வே பாதுகாப்பு படையினர் எட்டுக் குழுக்களை அமைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் சந்தேகத்திற்குரிய 30 நபர்களின் பெயரிலான ஐ.ஆர்.சி.டி.சி. இணையப் பயனாளர் முகவரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்தச் சோதனையில் கோவையில் மூன்று பேரும், ஈரோடு மற்றும் சேலத்தில் தலா ஒருவரும் என மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1.30 லட்சம் மதிப்பிலான இணையப்பதிவு செய்யப்பட்ட 128 பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 இதுதொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே துறையில் அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே பயணச்சீட்டு முகவர்களிடமோ அல்லது பயணிகள் நேரடியாகவே பயணச்சீட்டு எடுக்கலாம். மாறாக அங்கீகரிக்கப்படாத போலி பயணச்சீட்டு முகவர்களிடம் பயணச்சீட்டு எடுக்க வேண்டாம். மேலும் ரயில்வே இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயணச்சீட்டு முகவர்களின் விவரங்கள் உள்ளது. சோதனையின்போது போலி முகவரிடம் வாங்கிய பயணச்சீட்டாக இருந்தால் ரத்து செய்யப்படும். போலி முகவர்கள் சரியான மொபைல் எண்களைப் பயன்படுத்த மாட்டார்கள். அதேபோல பயணச்சீட்டு ரத்து செய்யப்படும் தகவலும் பயணிகளுக்குச் செல்லாது. எனவே அங்கீகரிக்கப்படாத முகவர்களிடம் பயணச்சீட்டு எடுக்கக் கூடாது. குறிப்பாகப் போலி பயனாளர் முகவரி மூலம் ரூ.500 முதல் ரூ.1,000 வரை அதிக விலைக்குப் பயணச்சீட்டுகளை விற்பனை செய்கின்றனர். பயணிகள் தனியாக தங்களுக்கான பயனாளர் முகவரியை இணையத்தில் பதிவு செய்து அதன் மூலம் பயணச்சீட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.