Published:Updated:

அமைச்சர் வேலுமணி அவர்களே... நீங்கள் பரப்புவதுதான் வதந்தி! தொடரும் குடிநீர்ப் பிரச்னை!

தமிழ்ப்பிரபா

நம்மைச் சுற்றி நடக்கிற சம்பவங்களைப் பார்க்கையில் 'தண்ணீர் இருக்கிறது' என்பதைத்தான் ஒரு வதந்தியாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரப்ப முயன்று இருக்கிறாரோ எனச் சந்தேகம் எழுகிறது.

அமைச்சர் வேலுமணி அவர்களே... நீங்கள் பரப்புவதுதான் வதந்தி! தொடரும் குடிநீர்ப் பிரச்னை!
அமைச்சர் வேலுமணி அவர்களே... நீங்கள் பரப்புவதுதான் வதந்தி! தொடரும் குடிநீர்ப் பிரச்னை!

வ்வொரு கோடைக்காலத்திலும் சென்னையில் தண்ணீர்ப் பிரச்னையும் பற்றாக்குறையும் ஏற்படுவது வாடிக்கைதான் எனினும், இம்முறை அது ஏற்படுத்திய தாக்கத்தின் பாதிப்பு இதுவரை இல்லாதது. நாளுக்குநாள் தண்ணீருக்காக மக்கள் அங்கலாய்ப்பது அதிகரித்துக் கொண்டே போகிற சூழலில், 'அரசாங்கம் என்ன மாதிரியான முன்னெடுப்புகளை எடுக்க இருக்கின்றன' என எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, குடிநீர் விநியோகப் பணி குறித்த ஆய்வுக்கூட்டத்தைத் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நடத்தியிருக்கிறார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘‘சென்னையில் தண்ணீர்த்தட்டுப்பாட்டால் உணவகங்கள், ஐ.டி நிறுவனங்கள் மூடப்படுவதாகத் தவறான தகவல் பரப்பப்பட்டுவருகிறது. போதுமான தண்ணீர் இருப்புடன் உணவகங்கள் செயல்படுகின்றன. பள்ளிகள் இயங்குகின்றன. ஐ.டி நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டுக்குப் போகச் சொல்லவில்லை. வீட்டிலிருந்து பணியாற்றச் சொல்வது தகவல் தொழில்நுட்ப நிறுவங்களில் காலங்காலமாக இருந்துவரும் நடைமுறைதான். சென்னையில் தண்ணீர்ப் பற்றாக்குறை எனச் சொல்லப்படுவது வதந்தி மட்டுமே" என்றார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு, தண்ணீருக்காகத் தவிக்கும் சென்னை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கெங்கே, என்ன பிரச்னை என்பதை ஆய்வு செய்து, பிரச்னையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சரே, 'சென்னையில் தண்ணீர்ப் பிரச்னை இல்லை என்று சொல்வது கடும் கண்டனத்துக்குரியது' என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அமைச்சர் வேலுமணி அவர்களே... நீங்கள் பரப்புவதுதான் வதந்தி! தொடரும் குடிநீர்ப் பிரச்னை!

சென்னை கோயம்பேட்டில் ஹோட்டல் நடத்தும் ஒருவர் நம்மிடம், ‘‘தண்ணீர்ப் பிரச்னையால் ஹோட்டல்களை நடத்த முடியவில்லை என்பது உண்மைதான். தண்ணீருக்காகப் பெரும் தொகையைச் செலவிட வேண்டியுள்ளது. வியாபாரம் நன்றாக நடக்கும் ஹோட்டல்களில் இதைச் சமாளித்துவிடுவார்கள். எங்களைப் போன்ற சாதாரண ஹோட்டல்கள் நடத்துவோர் தற்காலிகமாக ஹோட்டலை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், தண்ணீர்த் தட்டுப்பாடே இல்லை என்பதைப்போல அமைச்சர் சொல்வதை ஏற்கவே முடியாது. தண்ணீர்ப் பிரச்னை தமிழகம் முழுக்க இருப்பதால்தான், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைச்சர் அனுப்பி அதற்கான நடவடிக்கைகளை அவசரமாக எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். மற்ற மாவட்டங்களிலேயே இந்தநிலை என்றால், மக்கள் தொகையும் ஜன நெருக்கடியும், வணிக நிறுவனங்களும் அதிகமுள்ள சென்னை மாநகரில் எப்படி இருக்கும் என்பதை அவர் யோசிக்க வேண்டும்!’’ என்றார்.

ஐ.டி நிறுவன நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக, ஐ.டி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களிடம் வீட்டிலிருந்தே பணி (work from home) என்பதை அதிகாரபூர்வமாகவும் வெளிப்படையாகவும் சொல்லவில்லையே தவிர, ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு வாய்மொழி உத்தரவாகச் சொல்லி, அதற்காகப் பரிந்துரை செய்யப்படுகிறார்கள். அலுவலகத்துக்குள் அனுப்பப்படும் மின்னஞ்சல்களில்கூட இந்தப் பிரச்னையை யாரும் குறிப்பிடுவதில்லை’’ என்றார்.

மழைவேண்டி, சென்னையில் பூஜை செய்த கோயில்களில்கூட தற்போது சாமிக்குப் பூஜை செய்ய போதிய நீரில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க இயலாமல் பதினைந்துக்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் மூடப்பட்டிருக்கின்றன. தண்ணீருக்காக மெட்ரோ வாட்டர் நிறுவனத்திடம் முன்பணம் செலுத்தினாலும் முறையாகத் தண்ணீர் வருவதில்லை என்பதால் ஒருகட்டத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் மூட வேண்டிய நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.

அமைச்சர் வேலுமணி அவர்களே... நீங்கள் பரப்புவதுதான் வதந்தி! தொடரும் குடிநீர்ப் பிரச்னை!

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மேன்ஷன்களில் குடிக்கவும் குளிக்கவும் தண்ணீரின்றி வாடும் இளைஞர்களின் கண்ணீர் கதைகள் ஏராளம். தற்போதைய நிலையே தொடர்ந்து நீடித்தால் எல்லா மேன்ஷன்களும் விரைவில் மூடப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தண்ணீரின்றி செயின்ட் தாமஸ் பகுதியிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கழிவறை மூடப்பட்டிருக்கிறது. பெரம்பூரில் ஒரு பள்ளியில், 'மாணவர்கள் வீட்டிலிருந்து வரும்போது வழக்கத்துக்கு மாறாக இரண்டு வாட்டர் பாட்டில்கள் கொண்டு வர வேண்டுமெனவும், கையால் சாப்பிடுவதற்குப் பதிலாக இனி ஸ்பூனில் சாப்பிட வேண்டும்; வீட்டிலிருந்து வரும்போது தவறாமல் ஸ்பூன் கொண்டு வர வேண்டும்' என்று மாணவர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.

தேனாம்பேட்டையிலும் நுங்கம்பாக்கத்திலும் உள்ள பிரபல உணவகங்கள் தண்ணீரின்றி கடந்த வாரம் மூடப்பட்டது ஊரறிந்த சேதி. இவையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச்சில உதாரணங்கள் மட்டுமே. தண்ணீருக்காக ஹோட்டலை, பள்ளிக்கூடத்தை, வணிக நிறுவனத்தை மூடுகிறோம் எனத் தெரிந்தால் தங்களுடைய சந்தை மதிப்பு போய்விடும் என்று கருதி, பலரும் பற்களைக் கடித்துக்கொண்டு பல மடங்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிச் சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள். சமாளிக்க முடியாமல் திணறுகிறவர்களில் வேறு சிலர், வெளியே சொல்லத் தயங்குகிறார்கள். இவர்கள் தவிர, குடும்பங்கள் தனிப்பட்ட முறையில் படும் இன்னல்களை எழுத ஆரம்பித்தால் அவை நீண்டுகொண்டே போகும். குடிக்க கேன் வாட்டரும் லாரியை வரவழைத்துக் குளிக்க, லாரி தண்ணீரும் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தவர்கள், தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் வேலுமணி அவர்களே... நீங்கள் பரப்புவதுதான் வதந்தி! தொடரும் குடிநீர்ப் பிரச்னை!

இப்படியொரு சூழலில் இருக்கும் சென்னை மாநகரில் தண்ணீர்ப் பிரச்னையே இல்லை என்பதுபோன்று அமைச்சர் வேலுமணி சொல்லியிருப்பது, யதார்த்தத்தை உணராத முரண்பாடாகத்தான் தெரிகிறது.  

'அரசாங்கம் முறையான நீர் மேலாண்மை நிர்வாகத்தைச் செய்யாதது ஒரு காரணம் என்றாலும், தற்போதைய சூழலில் தங்களால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்' என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காகத் தண்ணீர்ப் பிரச்னையே இல்லை. அதெல்லாம் வதந்தி எனச் சொல்வதெல்லாம் நீரின்றி அல்லலுறும் மக்களை அவமானப்படுத்துவது போலிருக்கிறது என்பதே சென்னைவாழ் ஏழை மக்களின் குமுறலாக இருக்கிறது. இனியாவது பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டு, அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் ஆரோக்கியமானது. அதை யார் உணராவிட்டாலும் அரசும் அமைச்சர்களும் உணர்வது அவசர அவசியம்.

Vikatan