Published:Updated:

தண்ணீருக்குத் தவிக்கும் தலைநகர மக்கள்... மெட்ரோ வாட்டரில் விளையாடும் அரசியல்!

ஆர்.பி.

உண்மையில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் ஒவ்வொரு ஏரியாக்களிலும் உள்ள அ.தி.மு.க பிரமுகர்களுக்குத் தண்ணீர் லாரி அனுப்புவதில் முன்னுரிமை காட்டுகிறார்கள். சாமான்ய மக்கள் தண்ணீரின்றி அவதிப்படும்போது ஆளும்கட்சிகாரர்களுக்குச் சலுகைகாட்டுவது எந்தவகையில் நியாயம்..?

தண்ணீருக்குத் தவிக்கும் தலைநகர மக்கள்... மெட்ரோ வாட்டரில் விளையாடும் அரசியல்!
தண்ணீருக்குத் தவிக்கும் தலைநகர மக்கள்... மெட்ரோ வாட்டரில் விளையாடும் அரசியல்!

நாளுக்குநாள் மோசமாகி வருகிறது, நிலைமை. தி.மு.க ஆட்சிக்காலத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது, மின்வெட்டு இல்லாமலிருப்பது, கூவம் உள்ளிட்ட நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துவது என `சென்னைக்கு மட்டும் வெண்ணை; மற்ற பகுதிகளுக்கு சுண்ணாம்பு’ என்கிறரீதியில் தமிழகத்தின் மற்ற பகுதி மக்கள் புகார் தெரிவித்ததுண்டு. போராட்டங்களும் நடத்தியதுண்டு. ஆனால் அ.தி.மு.க காலத்தில் தலைநகரமே தண்ணீரின்றித் தவிக்கிறது.

சென்னைப் பெருநகரத்தில் பல்வேறு பகுதிகளில் தினமும் குடிநீர் கேட்டு சாலைமறியல் காட்சிகள் அரங்கேறிவருகின்றன. முக்கியமான ஏரியாக்களில் இயங்கிவந்த ஓட்டல்களில் சிலவற்றை தண்ணீர்த் தட்டுப்பாட்டைக் காரணம்காட்டி மூடிவிட்டனர். மாநகரின் முக்கியக் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் புழல்ஏரி... இவை அனைத்தும் வறண்டுவிட்டன. 

தண்ணீருக்குத் தவிக்கும் தலைநகர மக்கள்... மெட்ரோ வாட்டரில் விளையாடும் அரசியல்!

* சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாகிறது. நீரின் விலையானது தங்கம் விலைக்கு இணையாக உயர்ந்துவருகிறது. தலைநகர் சென்னை வறண்ட நகரமாக மாறிவரும் நிலையில், 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்களின் விலை 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

* இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் லிட்டர் வரை லாரிகளில் தண்ணீரை வாங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் கிட்டத்தட்ட செயல்படும் நேரத்தைக் குறைத்து வருகின்றன. எதிர்காலத்தில், தண்ணீர்ப் பஞ்சத்தால் மூடும் நிலைக்குக்கூடத் தள்ளப்படலாம். 

* சென்னை ஓ.எம்.ஆர் மற்றும் ராமாவரம் போன்ற ஏரியாக்களில் ஐ.டி கம்பெனிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அங்கே, பல்லாயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் தண்ணீரை லாரிமூலம் விலைக்கு வாங்கி வந்தன. தற்போது நிலவும் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, வீட்டிலிருந்தே பணிபுரியும்படி (work from home) அறிவுறுத்தியுள்ளனர்.

* சென்னை நகரிலும் சுற்றுவட்டாரங்களிலும் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் முற்றிலும் வறண்டுகிடப்பதால் நகருக்குள் நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. கடற்கரையையொட்டியுள்ள பல ஏரியாக்களில் நிலத்தடிநீரில் கடல்நீர் உள்ளே புகுந்து கடுமையான உப்புத்தண்ணீரே வருகிறது. இவற்றைப் பயன்படுத்தவே முடியாதநிலையில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஏற்கெனவே போடப்பட்ட போர்வெல்களில் தண்ணீர் இல்லை. அதற்கு மேலும் 400-லிருந்து 500 அடி ஆழத்திற்கு போர்வெல் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை. அத்தோடு, சென்னையில் பல்வேறு கடற்கரையையொட்டியுள்ள ஏரியாக்களில் கடல்நீர் புகுந்துவிட்டது. போர்வெல்களில் உப்பு நீர்தான் வருகிறது. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்களின் வீடுகளில் இருந்த கிணறுகளிலும் தண்ணீர் ஊற்று முற்றிலும் வற்றிக்கொண்டிருக்கிறது. 

தண்ணீருக்குத் தவிக்கும் தலைநகர மக்கள்... மெட்ரோ வாட்டரில் விளையாடும் அரசியல்!

ஓர் அசாதாரணமான சூழல் நிலவும்நிலையில், சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் தினமும் 900 லாரிகள் மூலம் 6,500 இலவச ட்ரிப்புகளும், 3,000 ட்ரிப்புகள் கட்டண அடிப்படையிலும் சப்ளை செய்வதாகக் கணக்குச் சொல்கிறது. உண்மையில் இப்போதைய தேவை, இதற்கு இருமடங்காக இருக்கிறது. ஆனால் மெட்ரோ வாட்டர் நிறுவனமும் எங்கு தண்ணீர் எடுப்பது என்று தெரியாமல் அல்லது முன்கூட்டியே திட்டமிடாமல் தவிக்கிறது.

மெட்ரோ வாட்டர் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் ஒருபுறம்.. இன்னொரு புறம்... கட்டண அடிப்படையில் தண்ணீர் லாரி கேட்டு அடாவடி செய்யும் அரசியல் வி.ஐ.பி-க்கள், அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் எனப் பல தரப்பிலும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளைத் தண்ணீர் கேட்டுத் துளைத்து எடுக்கிறார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற நீதித்துறை பிரமுகர்கள், சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் இருக்கும் வி.ஐ.பி-க்கள் என இவர்களை நச்சரிப்பவர்களின் பட்டியலைப் பெரிதாக வாசிக்கிறார்கள் இவர்கள்.

மத்தளத்துக்கு இருபுறம் இடிபோல, இவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். உண்மையில், இத்தகைய சூழ்நிலையை முன்கூட்டியே கணித்து, தேவையான நடவடிக்கையை எடுக்காதது இவர்களின் தவறுதான். 

ஆங்காங்கே மெட்ரோ வாட்டர் ஊழியர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மோதல் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. மெட்ரோ வாட்டர் இன்ஜினீயர் ஒருவர் கூறும்போது, ``நாங்கள் பொதுமக்களுக்காகப் பணிபுரிய வேண்டுமா அல்லது வி.ஐ.பி-க்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டுமா என்று தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஜெயித்த பிறகு, ஏரியாவில் உள்ள அந்தக் கட்சியின் நிர்வாகிகள் எங்களை மிரட்டுகிறார்கள். பொதுமக்களுக்காக என்று சொல்லிக்கொண்டு அவர்களின் சுயதேவைக்காகத் தண்ணீர் லாரி கேட்டு தொல்லைசெய்கிறார்கள். இல்லாவிட்டால், சாலை மறியல் செய்வோம் என்று கோஷம்போடுகிறார்கள். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தி.மு.க வி.ஐ.பி. ஒருவர் அந்த ஏரியா பெண் இன்ஜினீயரைத் தாறுமாறாகத் திட்டிவிட்டார். சென்னையின் மையப்பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகரை மெட்ரோ வாட்டர் அதிகாரி அறையில்வைத்துப் பூட்டிவிட்டனர். போலீஸுக்குத் தகவல் சொல்லி, அவர்கள் வந்து நிலைமையைச் சமாளித்தனர். தி.மு.க-வினர் மட்டுமல்ல... ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள செல்வாக்கு  படைத்த அரசியல்வாதிகள் யாரும் எங்களிடம் அடாவடியாகத்தான் பேசுகிறார்கள். கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும்போது எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பலதரப்பிலும் நெருக்கடிகளும் மிரட்டல்களும் தொடர்வதால் விரைவில் மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் கவன ஈர்ப்புப்போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகிறோம்’’ என்றார்.

இவர்கள் இப்படிச் சொன்னாலும் மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும் தகவல்கள் வேறுமாதிரியாக இருக்கின்றன. 

தண்ணீருக்குத் தவிக்கும் தலைநகர மக்கள்... மெட்ரோ வாட்டரில் விளையாடும் அரசியல்!

``கோடை வந்துவிட்டாலே மெட்ரோ வாட்டர் அதிகாரிகளும் ஊழியர்களும் குஷியாகிவிடுவார்கள். ஏனெனில், இதுதான் அவர்களுக்கு அறுவடைக்காலம். ஒவ்வொரு டிரிப்பிலும் தண்ணீராய்க் காசு கொட்டும். யாருக்கு எந்த டிரிப் என்பதை முடிவுசெய்யும் அதிகாரிகள் ஒருபக்கம் காசு பார்ப்பார்கள். மெட்ரோ வாட்டர் தண்ணீரைச் சுமந்துசெல்லும் லாரிகளின் டிரைவர்கள் சிலரும் ரகசியமான முறையில் லாரி டிரிப்பை வேறு திசைக்குத் திருப்பி கமர்ஷியல் நிறுவனங்களுக்கும் விற்றுவிடுவார்கள். இந்த ஆண்டில் இது இன்னும் அதிகமாகிவிட்டது’’ என்றனர்.

இதை மறுக்கும் மெட்ரோ வாட்டர் ஊழியர்கள், ``ஒருசிலர் தவறு செய்யலாம். ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டுவதை ஏற்கமுடியாது. பொதுமக்களும் இந்த விஷயத்தில் தவறு செய்கின்றனர். சில குடியிருப்புகளிலும் வணிக நிறுவனங்களிலும் குடிநீர் இணைப்புக்குழாய்களில் மோட்டாரைப் பொருத்தி நீரை உறிஞ்சிவிடுகின்றனர். இவர்களைப் பொறிவைத்துப் பிடிக்கும் விஜிலென்ஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகக்குறைவுதான். இதனால் சட்டவிரோதமான முறையில் குடிநீர் உறிஞ்சுகிறவர்கள் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே வருகிறார்கள்’’ என்றனர். 

மெட்ரோ வாட்டர் நிறுவன ஊழியர்களை ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர் எனப் பலதரப்பினரும் மிரட்டுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. இதுபற்றிக் கேள்விப்பட்ட அவர், ``பொதுமக்களுக்கு முன்னுரிமையளித்து மெட்ரோ வாட்டர் சப்ளை செய்யவேண்டும். வேறு யாராவது வி.ஐ.பி. போர்வையில் மெட்ரோ வாட்டர் ஊழியர்களிடம் வம்பு பேசினால் போலீஸிடம் சொல்லி நடவடிக்கை எடுங்கள்’’ என்று கறாராகச் சொல்லிவிட்டதாகவும் தலைமைச் செயலக வட்டார அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதன் எதிரொலியாகக் குடிநீர் விநியோகத்தில் காவல் துறையும் இப்போது தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.

மெட்ரோ வாட்டர் ஊழியர்களை தி.மு.க-வினர் மிரட்டுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி வடசென்னை தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, ``மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் பொய் சொல்கின்றனர். பிரச்னையைத் திசை திருப்பப் பார்க்கின்றனர். எங்கள் கட்சியைச் சேர்ந்த ஓரிருவர் அப்படி ஏதாவது மிரட்டியிருக்கலாம். உண்மையில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள அ.தி.மு.க பிரமுகர்களுக்குத் தண்ணீர் லாரி அனுப்புவதில் முன்னுரிமை காட்டுகிறார்கள். சாமான்ய மக்கள் தண்ணீரின்றி அவதிப்படும்போது ஆளும்கட்சிகாரர்களுக்குச் சலுகைகாட்டுவது எந்தவகையில் நியாயம்..? இதைத் தட்டிக்கேட்டால், போலீஸைவிட்டு மிரட்டுகிறார்கள். நடுநிலையுடன் மெட்ரோ அதிகாரிகள் செயல்படவேண்டிய தருணம் இது. அதை அவர்கள் மீறும்போது மக்கள் ஆவேசமடைகிறார்கள். இதுதான் உண்மை’’ என்றார்.

தண்ணீர் என்பது அத்தியாவசியத் தேவை. அதில் அரசியலும் வியாபாரமும் செய்வது அசிங்கம்!

Vikatan