Published:Updated:

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்?! தடதடக்கும் தமிழிசை

எம்.புண்ணியமூர்த்தி
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்?! தடதடக்கும் தமிழிசை
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்?! தடதடக்கும் தமிழிசை

'ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், சசிகலா குடும்பத்தினர் செய்திருக்கும் ஊழலைப் பார்த்து வியந்துபோயிருப்பார்' என்று பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

கோவை விமான நிலையத்தில், இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ’தமிழக ஆளுநர் ஆய்வு நடத்துவது  ஆரோக்கியமான நகர்வு. திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த நடவடிக்கை  உதவிகரமாக இருக்கும். இதை தமிழகத்துக்கான அடுத்தகட்ட நகர்வாகத்தான் பார்க்க வேண்டும். இங்கு,  எதிர்கட்சிகள் உண்மையாக இல்லை. அதனால்தான், ஆளுநர் ஆய்வை அவர்கள் விமர்சிக்கின்றனர்.

குடியரசுத் தலைவர்  சட்டவிதிகளுக்கு உட்பட்டு, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால்  பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார். ஆளுநர் ஆய்வை முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்மூலம் மக்களுக்கு நல்லது நடக்கும்.  ஆளுநர்  ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர் அல்ல. காங்கிரஸில் இருந்து வந்தவர். ஆளுநர் நடவடிக்கைகுறித்து
கவலைப்பட வேண்டியவர்கள் கவலைப்படவில்லை. ஆனால், கவலைப்பட வேண்டாதவர்கள்  கவலைப்படுகிறார்கள். 

அனைத்து மாவட்டங்களுக்கும் ஆளுநர் ஆய்வுக்குச் செல்வது ஆரோக்கியமானது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்டாலின் கூறுவதால், நிறுத்திவிட முடியாது. தமிழகத்தில் நேர்மறையான முறையில் பி.ஜே.பி., கட்சியைப் பலப்படுத்திவருகிறது. நாங்கள், நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம். ஆளுநரை வைத்து ஆளவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கட்டுமானத் தொழில், விவசாயம் உள்ளிட்ட விவகாரங்களில் அத்தியாவசிய நடவடிக்கை எடுக்க, மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் . ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், சசிகலா குடும்பத்தினர் செய்துள்ள ஊழலைப் பார்த்து அவரே வியந்துபோயிருப்பார்.
டி.டி.வி. தினகரன், போலி துணிச்சலுடன் இக்கிறார். அவர்கள் மீது தப்பில்லை என்றால், எதற்காக பதற்றம் அடைய வேண்டும்? தமிழகத்தில், அரசியலைத் தாண்டி தவறு செய்யும் அனைவரையும் வருமான வரிச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்’ என்றார்.