Published:Updated:

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணும் அறைக்குள்ளும் வெளியேவும் கலவரம் ஆரம்பித்தது இப்படிதான்!

ஜெ.அன்பரசன்
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணும் அறைக்குள்ளும் வெளியேவும் கலவரம் ஆரம்பித்தது இப்படிதான்!
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணும் அறைக்குள்ளும் வெளியேவும் கலவரம் ஆரம்பித்தது இப்படிதான்!

ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான 1,76,889 வாக்குகளில் 89,013 வாக்குகளுடன் டி.டி.வி.தினகரன் பெற்ற வெற்றியானது, அவ்வளவு எளிதானதல்ல. அவரிடம் ஆட்சியோ அதிகாரமோ கிடையாது. இரட்டை இலைச் சின்னமும் இல்லை. அவ்வளவு ஏன் சென்றமுறை அவருக்கு ஒதுக்கப்பட்ட தொப்பிச் சின்னம்கூட இந்தமுறை தினகரனுக்கு இல்லை. மிகக் குறுகிய காலத்துக்குள் தொப்பிச் சின்னத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றிவிட்டு, புதிய சின்னமான குக்கர் சின்னத்தை நிலைநிறுத்துவது என்பது அவ்வளவு சாதாரண வேலையும் கிடையாது. 

இதற்கிடையே மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யும் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க-வும் தினகரனுக்கு கொடுத்த நேரடி நெருக்கடிகள் சாதாரணமானவையல்ல. எப்போதெல்லாம் தினகரனின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் அவருக்குக் கொடுத்த நெருக்கடிகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். ஆட்சியையும் கட்சியையும் தங்கள் பக்கம் வைத்துள்ள எடப்பாடி - ஓ.பி.எஸ். தரப்பினரின் எண்ணம் ஒன்றுதான். ஆர்.கே.நகர் தொகுதியில் வேறு யார் வேண்டுமானாலும் வென்றுவிட்டுப் போகட்டும். ஆனால், தினகரன் நிச்சயம் வெற்றி பெறக் கூடாது என்பதில் ஆளும் தரப்பினர் உறுதியாக இருந்தனர். அந்த எண்ணத்தின் அடிப்படையிலான அ.தி.மு.க-வினரின் கோரதாண்டவம் டிசம்பர் 24-ம் தேதி, ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அறை வரைக்கும் பாய்ந்தது.

இத்தொகுதியில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 24-ம் தேதியன்று, சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற ஹாலில், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர், மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், உதவி தேர்தல் அதிகாரி திவ்யதர்ஷினி, கூடுதல் அதிகாரி லலிதா மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முன்னிலையில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை நடந்த அறையில் தேர்தல் அதிகாரிகளுக்கு இடதுபுறமாக, தினகரனின் முகவர்களாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆதரவாளர்கள் அமர்ந்திருந்தனர். அதேபோல் தேர்தல் அதிகாரிகளுக்கு வலது புறம் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட இ.மதுசூதனின் முகவர்கள், ராஜேஷ் தலைமையில் அமர்ந்திருந்தனர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தி.மு.க வேட்பாளர் மருது கணேஷூக்கு ஒரு ஓட்டு கிடைத்தது. பின்னர் தொடங்கிய முதல் சுற்று எண்ணிக்கை முடிவிலிருந்தே சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன், இரண்டாம் இடத்தில் வந்த மதுசூதனனைவிட முன்னிலையில் இருந்தார். முதலாவது மற்றும் இரண்டாம் சுற்று முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் மதுதனனைவிட தினகரன் முறையே 1,783 - 5,082 ;  2,738 - 5,339 என்ற கணக்கில் ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முன்னணியில் இருந்துவந்தார். 

இதனால், தினகரன் ஆதரவாளர்கள் ராணி மேரி கல்லூரிக்கு வெளியே கரகோஷம் எழுப்பியதுடன், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தினகரன் பெற்ற வாக்குகள் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மதுசூதனன் ஆதரவாளர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த தினகரனின் ஆதரவாளர்களைப் பார்த்து தகாதவார்த்தைகளில் பேசத் தொடங்கியதால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை சரியாக 9.05 மணிக்கு இந்த மோதல் உருவானதால் சுமார் ஒரு மணி நேரம் வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் இருந்தவர்கள் தேர்தல் அதிகாரியிடம் மோதல் குறித்து முறையிட்டனர். அதற்குள் மதுசூதனன் ஆதரவாளர்கள், அங்கிருந்த நாற்காலிகளைக் கொண்டு எதிர்தரப்பினர் மீது தாக்கினார்கள். தன்னை நோக்கி வீசப்பட்ட நாற்காலி தன் மீது படாமல் இருக்க, செந்தில் பாலாஜி அதிர்ஷ்டவசமாக ஒதுங்கிக்கொண்டார்.

சமரசம் செய்து வைக்க வந்த காவலர்களை மதுசூதனன் தரப்பினர், கீழே தள்ளிவிட்டதால், நிலைமையைக் கட்டுப்படுத்த உடனடியாகத் துணை ராணுவப்படையினர் ஓட்டு எண்ணும் அறைக்குள் வரவழைக்கப்பட்டனர். அறையின் கதவுகள் மூடப்பட்டன. அறையில் நடந்த இந்த மோதல்களைச் செய்தி சேகரிக்கத் திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் சிலர், தங்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர். அப்போது மதுசூதனன் தரப்பினர், செய்தியாளர்களுக்கு மிரட்டல்விடும் வகையில் பேசினர். "ஒழுங்கு மரியாதையா படம் பிடிப்பதை நிறுத்துங்கள். மக்களுக்கு மோதலை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் உங்களை சும்மா விடமாட்டோம்" என்று கூறி, பத்திரிகையாளர்களின் மொபைல் போனைப் பிடுங்க முற்பட்டனர். எனினும், காவலர்களும் தேர்தல் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்து அறைக்கு வெளியே வைத்துவிட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர், சமரசத்தில் ஈடுபட்டபோதிலும் மதுசூதனின் ஆட்கள் அதைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. இதையடுத்தே வாக்கு எண்ணிக்கையைத் தற்காலிகமாக நிறுத்த அவர் உத்தரவிட்டார். காலை 9.22 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 

காவல்துறை இணை ஆணையர் சந்தோஷ்குமார், மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், மக்கள் தொடர்பு அதிகாரி உமாபதி ஆகியோர் மதுசூதனின் ஆதரவாளர்களிடம், "அமைதியாக இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கையைத் தொடர முடியும். இல்லையென்றால் மீண்டும் வாக்கு எண்ணும் பணியைத் தொடங்க முடியாது" என்றனர். துணை ராணுவப்படையினரும் காவல்துறையினரும் மதுசூதனின் ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர், காலை 10.20 மணிக்கு, அதாவது, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. அதன் பின்னர் பிற்பகல்வரை, அந்த அறைக்குள் பத்திரிகையாளர்களைத் தவிர வேறு யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், அங்கு நடந்த மோதல்கள் பற்றிய ஓரிரு சம்பவங்களைத் தவிர வேறு எதையும் பதிவு செய்ய முடியாமல்போனது. 

வாக்கு எண்ணும் மையத்துக்குள் நடந்த அனைத்து அமளி துமளிக்கும் காரணம் மதுசூதனன் தரப்பைச் சேர்ந்த 31 பேர். இவர்களில் இரண்டுபேர் பெண்கள். ஒருவர் வழக்கறிஞர். இதற்கிடையே, பி.ஜே.பி-க்கு கிடைத்த வாக்குகள் நோட்டாவை விடவும் குறைவாக இருந்ததால், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன் நண்பகல் 12.10 மணியளவில், வாக்கு எண்ணும் அறையைவிட்டு வெளியேறினார். எட்டாவது சுற்று முடிவிலும் தினகரனே முன்னணியில் இருந்ததால் கடுப்பாகிப்போன மதுசூதனன் ஆதரவாளர்கள், ஒவ்வொருவராக அந்த அறையைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள். 10 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அடுத்த சுற்று தொடங்கியதும் 14 வது வாக்குப்பதிவு இயந்திரத்தில் சற்றே கோளாறு ஏற்பட்டு, சில நிமிடத்தில் அது சரி செய்யப்பட்டது. 

தொடர்ந்து தினகரன் முன்னிலை வகித்ததால், "வாக்கு எண்ணிக்கையில் எப்படியாவது குழப்பம் விளைவிக்க வேண்டும்" என்று காத்திருந்த மதுசூதனின் ஆதரவாளர்கள் 10 வது சுற்று முடிவடைந்ததும், தினகரனின் வெற்றி உறுதியானதை அடுத்து, 'அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது' என்பதால் அமைதி காக்கத் தொடங்கினர். அதே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி வளாகத்துக்கு வெளியே தினகரனின் ஆதரவாளர்கள் வெற்றியைக் கொண்டாடி டி.டி.வி வாழ்க என்ற. அந்த நேரத்தில் மதுசூதனின் ஆதரவாளர்கள் அம்மா வாழ்க என்று கத்தினார்கள். இதனால் மதுசூதனின் ஆதரவாளர்கள் செருப்புகளைக்கொண்டு  தினகரன் தரப்பு ஆதரவாளர்களை தாக்கினர். இதில் தினகரன் ஆதரவாளர்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினார்கள். அதன்பின்னே தினகரன் தரப்புக்கும் மதுசூதனன் தரப்புக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் காவலர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரிக்கு வெளியே நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

பிறகு, மாலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. தினகரன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாலை சரியாக 6.45 மணிக்கு வாக்கு எண்ணும் அறைக்குள் வந்த தினகரன், தேர்தல் அதிகாரியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.