Published:Updated:

ஆட்டோவில் பயணிகள் போல் வந்து பயங்கர தாக்குதல்: பேருந்தில் ஏறி உயிர் தப்பிய பா.ஜ.க. பிரமுகர்!

இரா.மோகன்

ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் பா.ஜ.க.பிரமுகரின்  ஆட்டோவில் பயணிகள் போல்வந்த கும்பல் ஒன்று பயரங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டார். தாக்குதலுக்குள்ளான  அவர் கவலைக்கிடமான நிலையில் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆட்டோவில் பயணிகள் போல் வந்து பயங்கர தாக்குதல்: பேருந்தில் ஏறி உயிர் தப்பிய பா.ஜ.க. பிரமுகர்!
ஆட்டோவில் பயணிகள் போல் வந்து பயங்கர தாக்குதல்: பேருந்தில் ஏறி உயிர் தப்பிய பா.ஜ.க. பிரமுகர்!

ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் பா.ஜ.க.பிரமுகரின்  ஆட்டோவில் பயணிகள் போல் வந்த கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. தாக்குதலுக்குள்ளான பா.ஜ.க பிரமுகர் கவலைக்கிடமான நிலையில் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


 

ராமநாதபுரம் எஸ்.எம்.அக்ரஹாரம் அருகே சுப்பையா சேர்வை சந்து பகுதியில் வசித்து வருபவர் ராமன் மகன் வீரபாகு(48).  ஆட்டோ டிரைவரான இவர் பா.ஜ.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ராமநாதபுரம் பேரூந்து நிலையத்தில் ஆட்டோவுடன் இருந்த  இவரை வியாழக்கிழமை இரவு இருவர் 'பேராவூரில் உள்ள ஒருவரை அழைத்து வர ஆட்டோ தேவைப்படுகிறது' என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்டோவில் ஏறிய நபர்கள் இருவரும் பேராவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் இருளில் ஆட்டோவை நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர்.

ஆட்டோ நிறுத்தியதும் ஆட்டோவில் இருந்த இருவருடன் மேலும் 3 பேர் அங்கு வந்த நிலையில் அரிவாள், கத்தி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களால்  ஆட்டோ ஓட்டுநரான வீரபாகுவை சரமரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து தப்பிய வீரபாகு அவ்வழியாக வந்த நகர் பேருந்தில் ஏறி ரத்த சொட்ட சொட்ட  அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார்.

மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் வீரபாகு தலை, கை, கால்கள் ஆகியனவற்றில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வீரபாகு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தகவல் அறிந்த ராமநாதபுரம் டி.எஸ்.பி.எஸ்.நடராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சிவசக்தி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று வீரபாகுவிடம் விசாரணை நடத்தினார்கள். சம்பவம் தொடர்பாக வீரபாகுவின் மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

வீரபாகு தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் துரை.கண்ணன், மாவட்ட செயலாளர் குமார், ஆத்ம கார்த்திக், இளைஞரணி நிர்வாகி மணிமாறன் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க.வினர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். இச்சம்பவம் காரணமாக ராமநாதபுரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.