Published:Updated:

`இப்போது ஒருவர்கூட இல்லை!'- மத்திய அமைச்சரவையில் சரிந்த தமிழர்கள் ஆதிக்கம்

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
`இப்போது ஒருவர்கூட இல்லை!'- மத்திய அமைச்சரவையில் சரிந்த தமிழர்கள் ஆதிக்கம்
`இப்போது ஒருவர்கூட இல்லை!'- மத்திய அமைச்சரவையில் சரிந்த தமிழர்கள் ஆதிக்கம்

மோடி அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடபெறவில்லை. கடந்த மோடி அமைச்சரவையில்கூட பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தார். இப்போது ஒருவர்கூட இல்லை. அதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்த காலம் போய், இப்போது ஒருவர்கூட இல்லை என்கிற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. 

`இப்போது ஒருவர்கூட இல்லை!'- மத்திய அமைச்சரவையில் சரிந்த தமிழர்கள் ஆதிக்கம்

1996-ம் ஆண்டு வரையில், தமிழகத்தில் இருந்து ஓரிருவர்தான் மத்திய அமைச்சர்களாக அங்கம் வகித்துவந்தார்கள். 1996-ல் ‘ஐக்கிய முன்னணி’ அரசு அமைந்த பிறகு, தமிழகத்தின் ஆதிக்கம் மத்திய அமைச்சரவையில் அதிகரிக்கத் தொடங்கியது.

1996 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க-வும் மூப்பனாரின் த.மா.கா-வும் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்து, மகத்தான வெற்றிபெற்றது. அப்போது மத்தியில் அமைந்த 'ஐக்கிய முன்னணி' அரசில், தி.மு.க-வைச் சேர்ந்த முரசொலி மாறன், என்.வி.என்.சோமு, டி.ஆர்.பாலு, டி.ஜி.வெங்கட்ராமன் த.மா.கா-வை சேர்ந்த ப.சிதம்பரம், எம்.அருணாசலம், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், தனுஷ்கோடி ஆதித்தன், ஜெயந்தி நடராஜன் என தமிழகத்தில் இருந்து 9 பேர் அமைச்சர்கள் ஆனார்கள்.

1999-ல் அமைந்த வாஜ்பாய் தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ அரசில், அதிகபட்சம் 10 தமிழர்கள் அமைச்சர்களாக இடம்பெற்றனர்.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக, மத்திய அமைச்சரவையில் 12 பேர் அமைச்சர்கள் ஆனது 2004 நாடாளுமன்றத் தேர்தலில்தான். இதில், 6 பேர் கேபினட் அமைச்சர்கள், 6 பேர் இணை அமைச்சர்கள். மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ அரசில், தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க-வைச் சேர்ந்த ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, வேங்கடபதி, வேலு ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். சிறிது காலம் கழித்து ஜி.கே.வாசனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. 2007-ல் தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, தி.மு.க-வைச் சேர்ந்த ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சர் ஆனார்.

`இப்போது ஒருவர்கூட இல்லை!'- மத்திய அமைச்சரவையில் சரிந்த தமிழர்கள் ஆதிக்கம்

2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில், தமிழகத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. தி.மு.க-வில் தயாநிதி மாறன், ஆ.ராசா, மு.க.அழகிரி ஆகிய 3 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் பழனிமாணிக்கம், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன் ஆகிய நான்கு பேர் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். காங்கிரஸில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் இருவரும் கேபினட் அமைச்சர்களாக இடம் பெற்றனர். 2009-ல் அமைந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்ற மொத்த அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை ஒன்றாகச் சரிந்தது. பி.ஜே.பி-யைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் இணை அமைச்சர் ஆனார். இப்போது நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் பி.ஜே.பி கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதனால், தமிழகத்தில் யாருக்கும் மந்திரி சான்ஸ் அடிக்கவில்லை. நிர்மலா சீதாராமனும் ஜெய்சங்கரும் தமிழர்கள் என்றபோதும், தமிழகத்தின் பிரதிநிதிகளாக அவர்களைக் கருத முடியாது. ''அவர்கள், தமிழர்களோடு சேராதவர்கள்'' என்று சொல்லியிருக்கிறார், தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.