Published:Updated:

`கோடை வந்தாலே சில பேருக்குக் குழப்பம் வந்துவிடும்; அதில் பொன்னாரும் ஒருவர்!' - கே.பாலகிருஷ்ணன்

இரா.மோகன்
`கோடை வந்தாலே சில பேருக்குக் குழப்பம் வந்துவிடும்; அதில் பொன்னாரும் ஒருவர்!' - கே.பாலகிருஷ்ணன்
`கோடை வந்தாலே சில பேருக்குக் குழப்பம் வந்துவிடும்; அதில் பொன்னாரும் ஒருவர்!' - கே.பாலகிருஷ்ணன்

``வெயில் தாக்கத்தால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குழம்பிப் போய் உள்ளார். எனவேதான், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தங்கள் சொத்தை விற்றாவது விவசாயக் கடனை அடைக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்'' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

`கோடை வந்தாலே சில பேருக்குக் குழப்பம் வந்துவிடும்; அதில் பொன்னாரும் ஒருவர்!' - கே.பாலகிருஷ்ணன்

ராமேஸ்வரத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் அகில இந்திய துணைத் தலைவர் வரதராஜன் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து பாதிக்கும் மேற்பட்ட நாள்கள் டெல்லியிலேயே முகாமிட்டு வரும் தமிழக முதல்வர், மாநிலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் ஜூன் 10-ம் தேதிக்குள் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால், மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் எனக் கர்நாடக அரசு கூறுகிறது. இதனால் குறுவை விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. இது தவிர குடிநீருக்காகத் தமிழக மக்கள் அகதிகள்போல் அலையும் நிலை உள்ளது. மேலும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. இது பற்றியெல்லாம் விவாதிக்கச் சட்டமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பயத்தால் சட்டமன்றத்தைக் கூட்ட மறுக்கின்றனர்.

மக்கள் விரும்பாத திட்டங்களான ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை, உயர் மின்கோபுரம் போன்றவை குறித்து பேசுவதற்குக்கூட தடை விதிக்கும் அடக்குமுறை தமிழகத்தில் நிலவி வருகிறது. கருத்துரிமையை மறுக்கும் மாநில அரசின் இந்த செயலை ஏற்க முடியாது. மேலும் தமிழகத்தில் நிலவும் சாதிய மற்றும் ஆணவக் கொலைகள் குறித்து அரசுக்குச் சரியான புரிதல் இல்லை. இது போன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகைகூடப் பல ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படாத நிலை உள்ளது. எனவே, இது குறித்து கண்காணிக்க தனிக் குழு அமைக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னை இன்றி தங்கள் தொழிலைத் தொடர இந்திய - இலங்கை அரசுகள் மற்றும் இரு நாட்டு மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையினை மீண்டும் தொடங்க வேண்டும். மாற்று திட்டமான ஆழ்கடல் மீன்பிடிப்பு பெயரளவிற்கே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, திசை திருப்பும் திட்டங்கள் அறிவிப்பதைக் கைவிட்டு உரிய தீர்வுகாண வழி காணப்பட வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தின்போது எல்லாக் கட்சித் தலைவர்களும் தேர்தல் வாக்குறுதிகள் வழங்குவது வழக்கம்தான். அதற்காக வெற்றி பெற்றவர்கள் தங்கள் சொத்துகளை விற்றாவது அதை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. கோடைக் காலம் வந்தால் சில பேருக்குக் குழப்பம் வந்து விடும். அதுபோல் பொன்.ராதாகிருஷ்ணனும் குழம்பி போய் உள்ளார்'' என்றார்.

செய்தியாளர் சந்திப்பின் போது, மாநில விவசாய சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, சண்முகம், பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் முத்துராமு, மயில்வாகனன், சி.பி.எம்.மாவட்டச் செயலாளர் காசிநாததுரை மற்றும் கருணாகரன், சிவா, கருணாமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Vikatan