Published:Updated:

தடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்!

ஆ.பழனியப்பன்

"அம்மா கொண்டுவந்த திட்டமாயிற்றே, அப்படியொரு சிறந்த திட்டத்தைத் தற்போதைய ஆட்சியாளர்கள் அக்கறையுடன் செயல்படுத்தியிருந்தால், இந்தளவுக்கு தண்ணீர்ப் பஞ்சம் வந்திருக்காது!" என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள்.

தடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்!
தடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்!

ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டிருந்தாலே, தமிழகத்தில் பெரியளவுக்குத் தண்ணீர்ப் பஞ்சம் வந்திருக்காது என்று நீரியல் வல்லுநர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தற்போது கூறிவருகிறார்கள்.

தற்போது, தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரத்திலும் தண்ணீருக்காக மக்கள் அலைந்து திரிகிறார்கள். `இன்னும் இரண்டு நாள்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது’ என்று கடந்த சில நாள்களாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொல்லிவருகிறார்கள். ஆனால், கத்தரி வெயில் முடிந்துவிட்ட பிறகும், வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு உக்கிரமாக வெயில் அடிக்கிறது. தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தமிழக ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுவரும் நிலையில், `இன்னும் சில தினங்களில் தண்ணீர்ப் பிரச்னை சரியாகிவிடும்’ என்று கூலாகப் பேட்டி கொடுக்கிறார்கள் அமைச்சர் பெருமக்கள்.

தடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்!

‘இது அம்மாவின் அரசு’ என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே, அம்மாவுக்கு எதிராகவே இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, ஜெயலலிதாவால் மிகுந்த அக்கறையுடன் கொண்டுவரப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீது தற்போதைய ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை 2001-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். தமிழகத்தில் நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதில், திட்டம் மிகப்பெரிய அளவுக்குப் பங்கு வகித்தது. அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீரைச் சேகரிக்கும் அமைப்புகளை உருவாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புதிய கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மாநகராட்சி விதி 1920 மற்றும் சட்ட விதிகள் 1973-ன்படி புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. வீடுதோறும் சென்று நடவடிக்கை எடுத்து, மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்படாத கட்டடங்களுக்குச் சீல் வைக்கப்பட்டது. இதனால், அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு வசதிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பலரும் இத்திட்டத்தைப் பாராட்டினார்கள். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்தது என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிசெய்தன.  

தடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்!

ஆனால், இத்திட்டத்தைத் தற்போதைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அம்மா கொண்டுவந்த திட்டமாயிற்றே, அப்படியொரு சிறந்த திட்டத்தைத் தற்போதைய ஆட்சியாளர்கள் அக்கறையுடன் செயல்படுத்தியிருந்தால், இந்தளவுக்கு தண்ணீர்ப் பஞ்சம் வந்திருக்காது என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள்.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்கிற விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது.

மதுரையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ``தமிழகத்தில் 2001-ம் ஆண்டு மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கட்டடங்களின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகள் அமைக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் கண்காணிக்கப்படவில்லை. இதனால், தமிழகத்தில் இத்திட்டம் கேள்விக்குறியாகிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்தும், மழைநீரை முறையாகச் சேமிக்காததால், நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இத்திட்டம் முறையாக இருந்து மழைநீரைச் சேகரித்திருந்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். எனவே, தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்தி, முறையாகக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டது.

இந்த மனுவைக் கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. அதன் பிறகும்கூட, இதில் தமிழக அரசு உரிய அக்கறை காட்டவில்லை. அதன் விளைவைத் தமிழக மக்கள் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Vikatan