Published:Updated:

`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது!’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு

நவீன் இளங்கோவன்
`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது!’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு
`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது!’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு
`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது!’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு

உயர்மின் கோபுரங்களுக்குக் கீழே வசிக்கக்கூடிய மக்களுக்கு, மின்காந்த அலைகளால் பாதிப்பு ஏற்படுவது உண்மையென ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி ஆய்வு ஒன்றை மேற்கொண்டு உறுதிப்படுத்தியிருக்கிறார்.

விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்வதை எதிர்த்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இதனால், விவசாய நிலங்கள் பறிபோவது மட்டுமல்லாமல், இந்த மின்கோபுரங்களுக்குக் கீழே கடந்துசெல்லும் மனிதர்கள் மற்றும் விலங்குகள்மீது மின்காந்த அலைகளின் தாக்கம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர். 

இந்தப் பிரச்னை குறித்து ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி சமீபத்தில் நேரடியாகச் சென்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே மூனாம்பள்ளி பகுதியின் வழியாகச் செல்லும் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் 400 கிலோவாட் உயர்மின் கோபுரத்தின் கீழ் அந்த ஆய்வை நடந்திருக்கிறது. உயர்மின் கோபுரத்தின் கீழே எம்.பி கணேசமூர்த்தி நின்றுகொண்டிருக்க, அவர்மீது மின்சாரத்தைப் பரிசோதிக்கும் டெஸ்டர் ஒன்றை உடலில் வைக்க அது ஒளிர்ந்திருக்கிறது. உடலில் பல பகுதிகளில் டெஸ்டரை வைத்து, உடலில் மின்காந்த அலைகளின் தாக்கம் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

`கையில் டியூப்லைட் எரிந்தது, தலையில் டெஸ்டர் ஒளிர்ந்தது!’- எம்.பி கணேசமூர்த்தியின் மின் ஆய்வு

அதேபோல, உயர்மின்கோபுரங்களில் இருந்து செல்லும் மின்கம்பிகளின் கீழ் எம்.பி கணேசமூர்த்தி நின்றுகொண்டு இரண்டு ட்யூப் லைட்டுகளைத் தாங்கி நிற்க, அது எந்தவிதமான மின் இணைப்புகளும் இன்றி எரிந்திருக்கிறது. மின்காந்த அலைகள் பரவுவதினால்தான் இது நடந்ததாக உறுதிப்படுத்திக்கொண்ட கணேசமூர்த்தி, இந்தப் பிரச்னை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என அப்பகுதி விவசாயிகளிடம் கூறியிருக்கிறார். 

இந்த ஆய்வு குறித்து ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியிடம் பேசினோம். ``உயர்மின்கோபுரத்தின் கீழ் வசிக்கக் கூடியவர்களுக்கு மின்காந்த அலைகளால் பாதிப்பு ஏற்படும் என்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. நான் மேற்கொண்ட ஆய்விலும் அது உறுதியாகியிருக்கிறது. இதுசம்பந்தமாக நான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். மழைக்காலங்களில் இந்தமின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியின் வழியாகச் சென்றால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதற்குத் தரைவழி கேபிள் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்வதுதான் ஒரே தீர்வு என்பது குறித்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன் வைப்பேன்” என்றார்.  

Vikatan