Published:Updated:

சத்தியமங்கலம் காட்டுக்குள்ள இனி `ஃப்ரீயாக’ போக முடியாது! - வனத்துறையினரின் புதுத் திட்டம்!

நவீன் இளங்கோவன்
சத்தியமங்கலம் காட்டுக்குள்ள இனி `ஃப்ரீயாக’ போக முடியாது! - வனத்துறையினரின் புதுத் திட்டம்!
சத்தியமங்கலம் காட்டுக்குள்ள இனி `ஃப்ரீயாக’ போக முடியாது! - வனத்துறையினரின் புதுத் திட்டம்!
சத்தியமங்கலம் காட்டுக்குள்ள இனி `ஃப்ரீயாக’ போக முடியாது! - வனத்துறையினரின் புதுத் திட்டம்!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரிஅம்மன் கோயில் முதல் ஆசனூர் காரப்பள்ளம் வனச் சோதனைச்சாவடி வரை அடர்ந்த `சத்தியமங்கலம் புலிகள் காப்பக’ வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான் போன்ற பல வனவிலங்குகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியினுள் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை இருக்கிறது. சத்தியமங்கலத்திலிருந்து இந்தத் திம்பம் மலைப்பாதையைக் கடந்துதான் கர்நாடக மாநிலத்திற்குச் செல்ல முடியும்.

திம்பம் மலைப்பாதையில் அதிகபாரம் ஏற்றிச்செல்லும் சரக்கு லாரிகள் மற்றும் பெரிய பெரிய கனரக வாகனங்கள் வளைவுகளில் திரும்ப முடியாமல் அடிக்கடி பழுதாகி நிற்பதால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பலமணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுக்கும் வகையில், மாலை 6 மணிக்கு மேல் திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதித்தும், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களைக் கண்டறிய எடைமேடை அமைத்து அளவு சரிபார்த்து அனுப்புவது என நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் மேற்கொண்டது. 

சத்தியமங்கலம் காட்டுக்குள்ள இனி `ஃப்ரீயாக’ போக முடியாது! - வனத்துறையினரின் புதுத் திட்டம்!

அந்தவரிசையில், நேற்று முதல் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பகுதி வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்திருக்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் அருண்லால் இந்தத் திட்டத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்திருக்கிறார். கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் மற்றும் மினி லாரிகளுக்கு 20 ரூபாயும், 6 சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும், 8 சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும், 10 சக்கர வாகனங்களுக்கு 80 ரூபாயும், 12 சக்கர வாகனங்களுக்கு 100 ரூபாயும் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் 10 நாள்களுக்குக் கட்டணமில்லா ரசீது வழங்கப்பட உள்ளதாகவும், ஜூலை 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகப் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 அரசு பேருந்துகள் மற்றும் அரசுத்துறை வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தினந்தோறும் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் சத்தியமங்கலம், ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் மற்றும் மாவள்ளம் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மாதாந்திரக் கட்டணம் நிர்ணயம் செய்து பாஸ் வழங்கத் திட்டமிட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Vikatan