Published:Updated:

`தங்க தமிழ்ச்செல்வன் வேண்டாம்!' − தேனி மாவட்ட அ.தி.மு.க தீர்மானம்

எம்.கணேஷ்
`தங்க தமிழ்ச்செல்வன் வேண்டாம்!' − தேனி மாவட்ட அ.தி.மு.க தீர்மானம்
`தங்க தமிழ்ச்செல்வன் வேண்டாம்!' − தேனி மாவட்ட அ.தி.மு.க தீர்மானம்

தங்க தமிழ்ச்செல்வனை அ.தி.மு.க-வில் சேர்க்க வேண்டாம் எனk கூறி, தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் இன்று கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

`தங்க தமிழ்ச்செல்வன் வேண்டாம்!' − தேனி மாவட்ட அ.தி.மு.க தீர்மானம்

அ.ம.மு.க கொள்கைப் பரப்பு செயலாளராகவும் தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்தவர், தங்க தமிழ்ச்செல்வன். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அக்கட்சியின் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரனை கடுமையாக வசைபாடி, அக்கட்சியின் செல்வபாண்டியனுடன் பேசிய ஆடியோ வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டிவருகின்றனர் அ.தி.மு.க-வினர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பாக மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில், தேனி அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் என அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 'தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-விற்கு வேண்டாம். அவரை கட்சிக்குள் இணைக்க வேண்டாம்' எனத் தீர்மானம் போட்டதாகத் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், ``தங்க தமிழ்ச்செல்வனால்தான் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள், பிரச்னைகள் ஏற்பட்டன. அவரை மீண்டும் கட்சிக்குள் இணைத்தால் அது விபரீதமாக ஆகிவிடும். எனவே, தங்க தமிழ்ச்செல்வனை கட்சிக்குள் விடக்கூடாது' எனத் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்மானத்தை முதல்வர் மற்றும் துணைமுதல்வரிடம் கொடுப்பதற்காக மாவட்ட கட்சி நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்'' என்றனர்.

தங்க தமிழ்ச்செல்வனை அ.தி.மு.க-வில் இணைக்கக் கூடாது என தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னால், ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில், எடப்பாடி பழனிசாமியிடமே தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாகவும், கட்சியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதற்குப் பின்னால், ஓ.பன்னீர்செல்வம் இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.