Published:Updated:

போதைப் பாக்குகளை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது -ராமதாஸ்

விகடன் விமர்சனக்குழு
போதைப் பாக்குகளை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது -ராமதாஸ்
போதைப் பாக்குகளை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது -ராமதாஸ்
போதைப் பாக்குகளை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது -ராமதாஸ்

தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப் பாக்குகளை ஒழிப்பதில் அரசு தோல்வியடைந்துவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக புற்றுநோய் நாளையொட்டி தமிழகத்தில் புகையிலைப் பொருட்களின் நுகர்வு குறித்து சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் கிடைத்த முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் போதைப்பாக்குகளுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகும் அவற்றின் விற்பனை தடையின்றி நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ள உண்மை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 28.64 லட்சம் பேர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

போதைப்பாக்கு மட்டுமின்றி, கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை குறிவைத்தே இந்த வணிகம் நடக்கிறது. இதுகுறித்த அனைத்துத் தகவல்களும் காவல்துறையினருக்கு நன்றாகத் தெரியும் என்ற போதிலும் இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் மாணவ சமுதாயம் தொடர்ந்து சீரழிகிறது.புகையிலைப் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் இந்திய அளவில் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் ஒரு லட்சம் பேரும் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் போதைப் பாக்குகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தடையை மீறி போதைப்பாக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். கல்லூரி வளாகங்களில் போதைப் பொருட்கள் விற்கப்படும் கலாசாரத்துக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.