Published:Updated:

'ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்' – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சி.ய.ஆனந்தகுமார்
'ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்' –  முதல்வர் எடப்பாடி பழனிசாமி
'ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்' – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடந்த நான்கு நாள்களாக, அ.தி.மு.க எம்.ஜி.ஆர், இளைஞர் அணி சார்பில், அகில இந்திய சாம்பியன்ஷிப் கபடிப்போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசளிக்க, தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி திருச்சி வந்திருந்தார்.

முன்னதாக டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவரை, த.மா.கா விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையிலான விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து, ஆடிப்பெருக்குக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் தண்ணீர் விட வேண்டும், விவசாய சங்கக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இறுதியாக, திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த கபடிப்போட்டியின் இறுதிநாள் விழாவில், அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, துரைக்கண்ணு, எம்பி-க்கள் ரத்தினவேலு, விஜிலா சத்தியானந்த், எம்எல்ஏ-க்களான முருகுமாறன், பரமேஸ்வரி, செல்வராஜ் ஆகியோருடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினார்.

மேடையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அகில இந்திய அளவில் 29 மாநிலங்களிலிருந்து 58 அணிகளாக,1200 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகின்ற இந்நன்னாளிலே, இந்தக் கபடிப் போட்டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். 

கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்றும் அழைக்கப்படும்.  கை+பிடி = கபடி, இது தெற்கு ஆசிய நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது. தமிழ்க்குடிகளான ஆயர்களால் பல காலமாக விளையாடப்படும் தமிழர் விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. அப்படிப்பட்ட விளையாட்டு, இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  

சடுகுடு உலகக் கோப்பை முதன்முதலாக 2004-ம் ஆண்டில் ஆடப்பட்டது.  பின்னர் 2007, 2010-ம் ஆண்டிலும், 2013-ம் ஆண்டிலும் ஆடப்பட்டன.  இதுவரை வெல்லப்படாத உலகக்கோப்பையை இந்தியாவே தக்கவைத்துள்ளது. 

ஆசியா மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூ.50 லட்சமாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.30 லட்சமாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.20 லட்சமாகவும் உயர்த்தியவர்  அம்மா. திருச்சியில், 6 கோடி ரூபாய் செலவில் செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்க ஆணையிட்டவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.  சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கை 33.60 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, தமிழகத்தில் விளையாட்டுத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தியவர்.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டினை தமிழகத்தில் மேம்படுத்தும் விதமாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.7 கோடி செலவில் உலகத்தரத்தில்  ஹாக்கி ஸ்டேடியம் திறக்கப்பட்டது.

புரட்சித்தலைவி அம்மா, திருச்சி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தவர்.  ஏனென்றால், திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீரங்கத்திலே போட்டியிட்டு, இந்த மாவட்டத்திலே தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த மாவட்டத்துக்குப் பெருமை தேடித்தந்தவர். அவர் முதலமைச்சராக இருக்கின்ற காலத்திலேதான்  தேசிய சட்டக்கல்லூரி, தொழிற்சாலைகள், பல்வேறு பாலங்கள், சாலைகள் இன்னும் பல்வேறு திட்டங்கள்  திருச்சிக்கு வந்தன. அம்மா, கண்ட கனவை நாம் இன்றைக்கு நனவாக்கிக்கொண்டிருக்கின்றோம். அம்மா இருக்கின்றபொழுதே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஓராண்டு  தமிழகத்திலே கொண்டாட வேண்டுமென்று ஆணையிட்டார்கள்.அவரின் ஆணைக்கிணங்க, நாம், கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். 

இதன் தொடர்ச்சியாகத்தான், இந்த மைதானத்திலே, இன்றைக்கு அகில இந்திய கபடிப் போட்டியை கிட்டத்தட்ட 58 அணிகளாக 1200 வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை நான் தொடங்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.