Published:Updated:

'பழைய திருப்பூரை இப்படித்தான் மீட்கப்போகிறோம்!' 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்

கௌசல்யா ரா
'பழைய திருப்பூரை இப்படித்தான் மீட்கப்போகிறோம்!' 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்
'பழைய திருப்பூரை இப்படித்தான் மீட்கப்போகிறோம்!' 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்

திருப்பூர் என்று சொன்னாலே அனைவருக்கும் பின்னலாடை தொழில், ஜவுளித் தொழில், சாயப்பட்டறை, அதிக வருவாய் ஈட்டும் ஏற்றுமதி / இறக்குமதி தொழில்கள் போன்றவைதான் நினைவுக்கு வரும். இவையெல்லாம் ஒரு சிலருக்கு வரம் என்றால், அங்கு வசிப்பவர்களுக்கு சாபம்தான். அதிகப்படியான வளர்ச்சி, ஆபத்து என்பது திருப்பூர் மக்களைக் கண்டாலே தெரிந்துகொள்ளலாம். அசுரவளர்ச்சியின் காரணமாக ஓர் ஆற்றையே தொலைத்து நிற்கிறார்கள். அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வெற்றி என்ற தன்னார்வ அமைப்பு. இவர்களுடன் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள முதலாளிகள், சமூக ஆர்வலர்கள், திருப்பூர் மக்கள் என அனைவரும் கைகோத்து 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற திட்டத்தை ஏற்படுத்தி, அவர்கள் வாழும் பகுதியைப் பசுமையாக்க முயற்சி செய்து வருகின்றனர். ஒரு சிலர் மரம் நடுவார்கள், தண்ணீர் விடமாட்டார்கள், ஒழுங்காகப் பராமரிக்க மாட்டார்கள். ஆனால் இந்த அமைப்பு, செடிகளை நட்டு, அதை நீர் ஊற்றி ஒழுங்காகப் பராமரித்தும் வருகிறது. அதிவிரைவில் வளரக்கூடிய மரங்களையும் நாற்றுகளையும் சொந்த தோட்டக்கலை பண்ணையிலே உற்பத்தி செய்துவருகிறார்கள்.

இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள இவ்வமைப்பின் தலைவர் சிவராமைச் சந்தித்துப் பேசினோம். "அவர் கூறுகையில் 70-களில் திருப்பூர் பருத்தி விளையும் பூமியாகவும், விவசாயம் செய்யும் நிலமாகவும்தான் இருந்தது. அதன் பின்னர் நாகரிகமும் தேவையையும் வளரவே 90-களில் தொழிற்சாலைகள் வர ஆரம்பித்தன. பல மக்களின் வாழ்வாதாரமும் இந்தத் தொழிற்சாலைகளை நம்பியே இருந்தது. ஆனால், என்ன பயன்? காலங்கள் செல்லச் செல்ல வளம்செழித்த நொய்யலை மாசுபடுத்தி சாக்கடையாக மாற்றிவிட்டோம். அதை மாற்றவே இந்த சிறிய முயற்சி. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு தினத்தில் 1 லட்சம் மரங்களை நட முடிவு செய்தோம். ஆனால், அதையும் தாண்டி மரக்கன்றுகளை நடவுசெய்திருக்கிறோம். அதன்பின் சிறு தோல்விகள். நாங்கள் நட்ட சில மரக்கன்றுகள் வராமலும் அழுகியும் போயின. அதை அடுத்த ஆண்டில் சரிசெய்து மறுபடியும் மண்ணின் தரம், காலநிலை போன்றவற்றை அறிந்துகொண்டு பணியாற்றினோம். இறுதியில் 10 லட்சத்தை நெருங்கிவிட்டோம். வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின்கீழ் பாரம்பர்ய மரக்கன்றுகளை மீட்டுவருகிறோம். எப்போதும் எங்களின் தேர்வாக வேம்பு, தேக்கு, மலை வேம்பு, செம்மரம், ஈட்டி, தூங்குவாகை, இலுப்பை, பூவரசம், ஆலமரம், பீயன், இலவம், புளியன், புங்கன் போன்ற மரக்கன்றுகள்தான். முதலில் வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையிடம்தான் மரங்களை வாங்கிவந்தோம். செலவுகளைக் குறைக்கும் விதத்தில் நாங்களே தோட்டக்கலை பண்ணையை ஊருவாக்கி செடிகளை வளர்த்துவருகிறோம். இது மட்டுமல்லாமல் குறைந்த இடத்தில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகளை உருவாக்கி வருகிறோம். இந்த மாவட்டத்தில் எந்த இடம் காலியாக உள்ளதோ அந்த நிலத்தின் உரிமையாளருடன் பேசி மரக்கன்றுகளை நடவுசெய்கிறோம். தொழிற்சாலை வைத்திருக்கும் நண்பர்களும் சிறுகுறு விவசாயிகளும் இந்தப் பயணத்தில் பங்கெடுப்பது மகிழ்ச்சி தரக்கூடியவையாக இருக்கிறது" என்கிறார்.

'பழைய திருப்பூரை இப்படித்தான் மீட்கப்போகிறோம்!' 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்

ஜி.பி.எஸ் பொருத்திய வாகனங்கள்

மரம் நடுபவர்கள் பெரும்பாலும் தண்ணீர் ஊற்றுவதற்குக் கவலைப்படுவார்கள். இவற்றுக்குத் தீர்வு காணவே தொழில் அமைப்பினர், உள்ளாட்சி அமைப்பினர், அரசுத்துறையினர், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்தோம். பசுமை கொடையாளர்கள் மூலம் 30 டிராக்டர்கள் மூலம் மரக்கன்றுகளுக்கு நீர்விட்டுப் பராமரிக்கப்படுகிறது. டிராக்டர்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு நீர்விடும் பணி கண்காணிக்கப்படுகிறது, தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுநீரைச் சேகரித்து மறுசுழற்சி செய்து செடிகளுக்கு விடப்படுகிறது. இதன்மூலம் திருப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் மரக்கன்று நடவு அதிகரித்து வருகிறது.

மழைநீர் சேகரிப்பு /வேளாண் கல்வி

தொழிற்சாலைகளில் கட்டாய மழைநீர் சேகரிப்புத் தொட்டி நிறுவிவருகிறோம். இதனால் நிலத்தடிநீர் மட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இவ்வூரில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வேளாண் சார்ந்த கல்வி, அறிவுரைகள் போன்றவை தலைசிறந்த குழுவினர்கள் மூலம் அளித்துவருகிறார்கள்.

'பழைய திருப்பூரை இப்படித்தான் மீட்கப்போகிறோம்!' 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்

அணைகளை மீட்டெடுத்தல்

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் மூலம் ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரச் செய்து மழைப்பொழியும் காலங்களில் நீரைச் சேமிக்க திட்டமிட்டு வருகிறார்கள். ஏரிப்புறங்களில் விரைவில் வளரக்கூடிய மரக்கன்றுகளை நட்டு இயற்கை சூழலுக்கும் வழிவகை செய்கிறார்கள்.

இயற்கை காக்கும் பணியில் மற்றவர்களுக்குத் திருப்பூர் முன்மாதிரி என்ற சூழல் உருவாகியுள்ளது. தரிசு நிலங்களாகக் கடந்த நிலம், வீணாகக் கிடந்த நிலம் இன்று மரக்கன்றுகளால் நிறைந்துவழிகிறது. இது இயற்கைக்கு மட்டுமல்லாமல் பறவைகளுக்கும் வாழ்விடமாக மாறிவருகிறது என்கிறார்கள் அக்குழுவில் உள்ள தன்னார்வலர்கள்.

Vikatan