Published:Updated:

போக்கு காட்டும் தென்மேற்குப் பருவமழை - நீலகிரியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

ரா.சதீஸ்குமார்
போக்கு காட்டும் தென்மேற்குப் பருவமழை - நீலகிரியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
போக்கு காட்டும் தென்மேற்குப் பருவமழை - நீலகிரியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

நீலகிரியில் பருவமழை தாமதமாகும் நிலையில், முக்கிய அணைகளில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே செல்வதால், மின் உற்பத்திக்காக அணைகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மின் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போக்கு காட்டும் தென்மேற்குப் பருவமழை - நீலகிரியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாகத் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரண்டு பருவமழையும் கடந்த சில ஆண்டுகளாகப் போதிய அளவு பொழிவதில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் பல பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த ஆண்டும் உறைபனியின் தாக்கத்துக்குப் பிறகு ஜனவரி மாதங்களில் கடுமையான வறட்சி நிலவியது. வன விலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்தன. வனப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக கோடை மழை அவ்வப்போது பெய்து வறட்சி மெள்ள நீங்கியது. ஆனால், குன்னூர் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை. இந்தச் சூழ்நிலையில் தென்மேற்குப் பருவமழை கைகொடுக்கும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

போக்கு காட்டும் தென்மேற்குப் பருவமழை - நீலகிரியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்குப் பருவமழை நீலகிரியில் 9-ம் தேதி சாரலுடன் தொடங்கியது. ஆரம்பத்தில் நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர்பவானி போன்ற பகுதிகளில் மழை பெய்தது. ஆனால், மழை அப்படியே குறைந்து காற்று மட்டுமே வீசும் நிலைதான் இருக்கிறது. தற்போது மழை அறிகுறியே இல்லாமல் வெயில் நிலவிவருகிறது. இதனால், பருவமழையை எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படுவதோடு நீர் மின் உற்பத்தியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு முக்குருத்தி, அப்பர்பவானி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா மற்றும் பில்லூர் அணைகள் ஆகியன பயன்பட்டு வருகின்றன. இதில், அப்பர்பவானி அணையே பிரதான அணையாகத் திகழ்கிறது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லூர் ஆகிய 5 நீர்மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன.

பைக்காரா, கிளன்மார்கன் அணைகளைக் கொண்டு சிங்காரா மின் நிலையம் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பார்சன்வேலி மற்றும் போர்த்தி மந்து அணை நீரைக் கொண்டு காட்டுக்குப்பை மின் நிலையம் இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள நீர் அவலாஞ்சி அணையில் கலக்கிறது. நீலகிரியில் தற்போது, 12 நீர்மின் நிலையங்கள் உள்ளன. நீலகிரியில் உள்ள மின் நிலையங்களை முழுமையாக இயக்கினால், ஒரு நாளுக்கு 845 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நீலகிரியில் பருவமழை தாமதமாகி வரும் நிலையில், மின் உற்பத்திக்குப் பயன்படும் அனைத்து அணைகளிலும் தண்ணீர் இருப்பு நாளுக்குநாள் குறைந்துகொண்டே செல்கிறது.

போக்கு காட்டும் தென்மேற்குப் பருவமழை - நீலகிரியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

அப்பர்பவானி -  கொள்ளளவு 210 அடி - நீர் இருப்பு 137 அடி

பைக்காரா -  கொள்ளளவு 100 அடி - நீர் இருப்பு - 79 அடி 

போர்த்தி மந்து - கொள்ளளவு 130 அடி - நீர் இருப்பு  73 அடி

அவலாஞ்சி - கொள்ளளவு - 171 அடி - நீர் இருப்பு  87 அடி

எமரால்டு - கொள்ளளவு 184 அடி - நீர் இருப்பு 85 அடி

தற்போது பீக் அவர்ஸ் எனப்படும் மாலை 6 முதல் இரவு 11 வரை மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அணைகளிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதால்  நீர் மட்டம்  நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. இதனால், மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், ``நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாகிவருகிறது. கோடையில் கிடைத்த மழை ஓரளவுக்கு ஈடு செய்தது. தென்மேற்குப் பருவமழை பொய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் நீர் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்படும்” என்கின்றனர்.

Vikatan