Published:Updated:

நிரம்பியது வீராணம் ஏரி; சென்னைக்குதான் தண்ணீர் வரல! - அலட்சியத்தில் அதிகாரிகள்

துரை.நாகராஜன்
நிரம்பியது வீராணம் ஏரி; சென்னைக்குதான் தண்ணீர் வரல! - அலட்சியத்தில் அதிகாரிகள்
நிரம்பியது வீராணம் ஏரி; சென்னைக்குதான் தண்ணீர் வரல! - அலட்சியத்தில் அதிகாரிகள்

சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் முக்கியமான ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. கடலூர் மாவட்டம், கீழணை கோயில் பகுதியில் 4 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரும். தற்போது போதிய மழை இல்லாததால், மற்ற ஏரிகளைப் போலவே வீராணம் ஏரியும் வறண்டுபோகும் நிலையில் இருந்தது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து கடந்த மார்ச் 30-ம் தேதி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்தத் தண்ணீர், மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. அதன் பின்னர் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அதிகாலை முதல் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்தொடங்கியது. இதன் காரணமாக, வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

நிரம்பியது வீராணம் ஏரி; சென்னைக்குதான் தண்ணீர் வரல! - அலட்சியத்தில் அதிகாரிகள்

இப்போது, இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளளவான 47.5 அடியை வீராணம் ஏரி எட்டியது. இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டு மன்னார் கோயில் தாலுகாவில் 48,856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம்பெற்றுவருகின்றன. இதுபோக, சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்திசெய்துவருகிறது. சென்னை ஏரிகள் வற்றிவிட்டதால், குடிநீரைக் கொண்டுவரும் நோக்கில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்போதைக்கு சென்னைக்கு இருக்கும் ஒரே ஆறுதல் வீராணம் ஏரி மட்டும்தான். ஆனால், சென்னையில் இருக்கும் ஏரிகளின் நிலைதான் கொஞ்சம் கவலையளிப்பதாக இருக்கிறது. சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள், கிட்டத்தட்ட வறண்டுபோகும் சூழலில் இருக்கிறது. ஆனால், வீராணம் ஏரியில் இருந்து இன்னும் சென்னைக்கு குடிநீரை எடுத்துவர அதிகாரிகளின் தரப்பில் எந்தவிதமான துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த மாதம் 7-ம் தேதி நிரம்பிய வீராணம் ஏரி நீர் அப்படியே இருக்கிறது. இதை எடுத்துவந்து சென்னைக்குக் கொடுத்தால், வறட்சியின் பிடியிலிருந்து சென்னை ஓரளவு தப்பிக்கலாம்.

Vikatan