Published:Updated:

``நீ அங்கே போ மச்சி!” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி

எஸ்.மகேஷ்
``நீ அங்கே போ மச்சி!” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி
``நீ அங்கே போ மச்சி!” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சொகுசு கார், விபத்துக்குள் சிக்கியது. காரிலிருந்த ஏர் பேக் ஓப்பனானதால் காரை ஓட்டியவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆனால், அவர் செய்த ரகளையால் போலீஸார் தர்மசங்கடத்துக்குள்ளாகினர். 

``நீ அங்கே போ மச்சி!” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, நீலாங்கரை காவல் நிலையம் அருகே வேகமாகச் சென்ற சொகுசு கார், பிளாட்பார கடை, ஆட்டோ, காம்பவுனட் சுவர் என அடுத்தடுத்து மோதி நேற்றிரவு விபத்துக்குள் சிக்கியது. விபத்து நடந்தவுடன் காரிலிருந்த ஏர் பேக் ஓப்பனானது. காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவர் உளறிக்கொண்டிருந்தார். காவல் நிலையத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் இந்த விபத்து நடந்ததால் உடனடியாக போலீஸார் அங்கு சென்றனர். 

காரின் கதவைத் திறந்த போலீஸார், டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவரைக் காப்பாற்றினர். வெளியில் வந்த நபர், போலீஸாரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார். அவரை போலீஸார், சமரசப்படுத்தினார். ஆனால், அவரோ போலீஸாரைப் பார்த்து `டேய், நீ ஆம்பளையா, நீ ஏன் என்னை வீடியோ எடுக்கிறாய்?, நீ என்ன ரிப்போர்ட்டரா?' என்று போதையில் நடுரோட்டில் ரவுண்ட் கட்டினார். அவரை போலீஸாரால் சமரசப்படுத்த முடியவில்லை. 

``நீ அங்கே போ மச்சி!” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி

போலீஸார், ஒரு மணி நேரம் போராடி அந்த நபரை போலீஸ் வாகனத்தில் அமர வைத்தனர். அப்போதும் அந்த நபர் அமைதியாகவில்லை. திடீரென போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய அந்த நபர், போலீஸாரைப் பார்த்து நீ அங்கே போ மச்சி என ஆவேசமாகக் கூறினார். இதனால் போலீஸார் தர்மசங்கடத்துக்குள்ளாகினர். ஒருவழியாக அந்த நபரைப் பிடித்த போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரின் டிரைவிங் லைசென்ஸை போலீஸார் ஆய்வு செய்தபோது அவரின் பெயர் நவீன் (30) விளாங்குடி, மதுரைமாவட்டம் என்ற முகவரி இருந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில், நவீன் திருவான்மியூரில் தங்கியிருக்கும் தகவல் தெரியவந்தது. போதையில் இருப்பதால் நவீன் என்ன வேலை பார்க்கிறார் போன்ற முழுவிவரங்களை போலீஸார் சேகரிக்க முடியவில்லை. விபத்து ஏற்படுத்தியதற்காக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரும், போதையில் போலீஸ்கார்களை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக நீலாங்கரை போலீஸாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

``நீ அங்கே போ மச்சி!” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நீலாங்கரை, கிழக்குக்கடற்கரை சாலையில் நள்ளிரவில் சொகுசு கார், காம்பவுன்ட் சுவரில் மோதி நிற்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நவீன் என்பவரை காருக்குள் இருந்து மீட்டோம். நடுரோட்டில் போலீஸாரைத் திட்டிய நவீன், அநாகரிகமாக நடந்து கொண்டார். போதையில் இருந்த அவரை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீஸாரை வம்புக்கு இழுத்தார். ஒரு போலீஸ்காரரைப் பிடித்து அடித்தார். அவர், நிதானமாக இல்லாததால் அமைதியாக இருந்தோம். அதன்பிறகு நவீனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்துவருகிறோம்.

நவீன் செய்த ரகளையால் நேற்றிரவு நாங்கள் நிம்மதி இழந்தோம். போதையில் காரை ஓட்டிய நவீன், திருவான்மியூரிலிருந்து மதுரைக்குச் சென்றதாக உளறினார். அவரின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். இந்த விபத்தில் பிளாட்பாரத்தில் உள்ள கடைகள், ஆட்டோ ஆகியவை சேதமடைந்துள்ளன. நல்லவேளை உயிர்சேதம் ஏற்படவில்லை. சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால்தான் ஏர் பேக் ஓப்பனாகியுள்ளது. அதனால்தான் அவரும் உயிரோடு தப்பித்துள்ளார்" என்றனர். 

``நீ அங்கே போ மச்சி!” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி

சமீபகாலமாக சென்னை போலீஸாருக்கு நேரம் சரியில்லை போல. பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரை சொகுசு காரில் போதையில் இருந்த 4 பேர் சரமாரியாகத் தாக்கினார். அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்தக் காவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துக்கு முன் ரவுடி வல்லரசுவைப் பிடிக்கச் சென்ற தலைமைக் காவலர் பவுன்ராஜ், காவலர் ரமேஷ் ஆகியோரை ரவுடி கும்பல் தாக்கியது. இதில் பவுன்ராஜ் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ரவுடி வல்லரசுவை போலீஸார் என்கவுன்டர் செய்தனர். மூன்றாவது சம்பவமாக நேற்று நள்ளிரவு போதை ஆசாமியால் நீலாங்கரை இரவுப் பணி போலீஸார் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியுள்ளனர். பணியிலிருக்கும் போலீஸாருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்புடன் ரோந்துப் பணியை போலீஸார் மேற்கொள்வது தொடர்பாக கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசித்துவருகின்றனர். 

Vikatan