Published:Updated:

தாகத்தில் தவிக்கும் வனவிலங்குகள் - குற்றாலம் மலையில் பசியால் உயிரிழந்த கரடி!

பி.ஆண்டனிராஜ்
தாகத்தில் தவிக்கும் வனவிலங்குகள் -  குற்றாலம் மலையில் பசியால் உயிரிழந்த கரடி!
தாகத்தில் தவிக்கும் வனவிலங்குகள் - குற்றாலம் மலையில் பசியால் உயிரிழந்த கரடி!

உரிய நேரத்தில் பருவமழை பெய்யாததால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வனவிலங்குகள் தாகத்திலும் பசியிலும் தவிக்கின்றன. குற்றாலம் மலைப்பகுதியில் கரடி ஒன்று பசியால் மடிந்த சம்பவம் வன ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

தாகத்தில் தவிக்கும் வனவிலங்குகள் -  குற்றாலம் மலையில் பசியால் உயிரிழந்த கரடி!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, யானை, மான், மிளா, பறக்கும் அணில், சிங்கவால் குரங்கு என பல்வேறு அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் வனப் பகுதிகள் அனைத்தும் வாடிக்கிடக்கின்றன. காட்டு விலங்குகள் உணவுக்காகவும் தண்ணீர் தேடியும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வரத்தொடங்கியுள்ளன. 

அணைகளின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டதால், குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய இயலுமா என்கிற கவலையில் அதிகாரிகள் உள்ளனர். தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில் ஓரிரு நாளிலேயே மிண்டும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. 

குற்றாலம் அருவிகளில் இரு தினங்கள் தண்ணீர் விழுந்த நிலையில் தற்போது பாறைகளை ஒட்டியபடியே குறைவான தண்ணீரே விழுகிறது. அதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பயணிகளின் வருகை குறைந்ததால் தற்காலிகக் கடைகளை அமைத்துள்ள வணிகர்களும் பெரும் இழப்பைச் சம்பாதிக்கின்றனர். 

தாகத்தில் தவிக்கும் வனவிலங்குகள் -  குற்றாலம் மலையில் பசியால் உயிரிழந்த கரடி!

இந்த நிலையில், குற்றாலம் மலைப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வுக்குச் சென்றபோது அங்கு கரடி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டனர். குற்றாலம் வனவர் பாண்டியராஜ், கால்நடை மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வனக்காவலர்கள் அந்த இடத்துக்குச் சென்று கரடியை உடற்கூறு ஆய்வுசெய்து அங்கேயே புதைத்தனர். 

இது பற்றி வனத்துறையினரிடம் கேட்டதற்கு, ``வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. அதனால் வன விலங்குகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. உயிரிழந்த கரடிக்கு 16 வயது இருக்கலாம். மிகவும் வயதான அந்தக் கரடிக்கு பற்கள் இல்லாததால் உணவுகளை உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கக் கூடும். 

கரடியின் உடற்கூறு ஆய்வு செய்ததில் அதன் இரைப்பையில் உணவுப் பொருள்கள் எதுவும் இருக்கவில்லை. தற்போது மரங்கள் மற்றும் செடிகளில் பழங்கள் எதுவும் இல்லாததால் கரடி பசியில் இறந்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.   

Vikatan