Published:Updated:

`நீராவி சோதனையால் சத்தம் ஏற்படும்; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!' - கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்

பி.ஆண்டனிராஜ்
`நீராவி சோதனையால் சத்தம் ஏற்படும்; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!' - கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்
`நீராவி சோதனையால் சத்தம் ஏற்படும்; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!' - கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்

'கூடங்குளம் அணுஉலையில் நீராவி பரிசோதனை நடக்க இருப்பதால் சத்தம் ஏற்படும். அதனால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை' என அணுஉலை நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூடங்குளத்தில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இரு அணுஉலைகள் செயல்படுகின்றன. அத்துடன், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களின் எதிர்ப்புகளையும் மீறி, மேலும் இரு அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. முதல் அணுஉலைக்கான உதிரிப்பாகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரஷ்யாவில் நடந்த அணுஉலை மாநாட்டில் பங்கேற்ற இந்திய அணுசக்திக் கழகத் தலைவரும் அணுசக்தித் துறை செயலாளருமான கமலேஷ் நில்கந்த் வியாஸ், ’வழக்கத்துக்கு மாறாக முதல் அணுஉலையில் அடிக்கடி பழுது ஏற்படுவதை ஒப்புக்கொள்கிறேன் ’ எனத் தெரிவித்து சர்ச்சையை  ஏற்படுத்தினார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி, பராமரிப்புப் பணிக்காகவும் எரிபொருள் நிரப்புவதற்காகவும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, முதலாவது அணுஉலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. கடந்த 8 மாத காலமாக மூடப்பட்டுக்கிடந்த முதலாவது அணுஉலை இதுவரை செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில், முதலாவது அணுஉலையில் அடுத்த இரு தினங்களுக்கு நீராவி வெளியேற்றும் சோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இது தொடர்பாக,  அணுஉலை நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ’’கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அதனால், அணுஉலையில் சோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி, நீராவி வெளியேற்றும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இந்தச் சோதனை, மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. சோதனையின்போது, பாதுகாப்பு வால்வுகளின் தரத்தைச் சோதனை செய்கையில் மெதுவாக சத்தம் ஏற்பட்டு, தொடர்ந்து அந்த ஒலி அதிகரித்துக்கொண்டே செல்லும். சில நிமிட நேரங்களுக்கு இந்த ஒலி இருக்கும்.  பகலில் மட்டுமே இந்தச் சோதனையை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இது, வழக்கமான சோதனை என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை’’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது.