Published:Updated:

வீட்டு வாசலில் கணவன்- மனைவி; குறி வைத்த 3 கொள்ளையர்கள்- இரவில் பதறிய மகன்

ஜெ.முருகன்
வீட்டு வாசலில் கணவன்- மனைவி; குறி வைத்த 3 கொள்ளையர்கள்- இரவில் பதறிய மகன்
வீட்டு வாசலில் கணவன்- மனைவி; குறி வைத்த 3 கொள்ளையர்கள்- இரவில் பதறிய மகன்

புதுச்சேரியில் கணவன் கண் எதிரிலேயே 3 பேர் கொண்ட மர்மக் கும்பல் மனைவியின் 12 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வீட்டு வாசலில் கணவன்- மனைவி; குறி வைத்த 3 கொள்ளையர்கள்- இரவில் பதறிய மகன்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரிலுள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் விநாயகம். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் தனது மனைவி பிரேமாவுடன் உறவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருமண நிகழ்ச்சி என்பதால் தாலி செயினுடன் கூடுதலாக ஒரு செயின், நெக்லஸ் சுமார் 12 பவுன் நகைகளை பிரேமா அணிந்துகொண்டிருந்தார். அதைக் கவனித்த மர்ம நபர்கள் அவர்களைப் பின் தொடர்ந்துவந்தனர். விநாயகம் தனது வீட்டு வாசலில் நின்று இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கும் நேரத்தில், அந்த மர்ம நபர்கள் பிரேமா கழுத்தில் இருந்த நகைகளைத் பறிக்க முயற்சி செய்தனர். அப்போது கடுமையாகக் கூச்சலிட்டு அலறிய பிரேமா தனது கழுத்தில் கையை வைத்துப் பிடித்துக்கொண்டார்.

வீட்டு வாசலில் கணவன்- மனைவி; குறி வைத்த 3 கொள்ளையர்கள்- இரவில் பதறிய மகன்

அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த அவரது மகன், தனது தந்தையுடன் அந்த மர்ம நபர்களைப் பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் தாலி செயின், நெக்லஸ் உள்ளிட்ட நகைகளைப் பறித்துக் கொண்ட அந்தக் கும்பல் கையில் வைத்திருந்த அரிவாளால் பிரேமாவின் மகனைத் தாக்கிவிட்டு அசுர வேகத்தில் அங்கிருந்துத் தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் உருளையன்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், தனிப்படை காவல்துறை களம் இறங்கியிருக்கிறது. புதுச்சேரியில் செயின் பறிப்பு நிகழ்ச்சி தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 6 வழிப்பறி செயின் பறிப்பு சம்பவம் நடந்திருக்கிறது.

2 தினங்களுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், “வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்டக் குற்றங்களைத் தடுக்க கூடுதல் நடவடிக்கை வேண்டும். குறிப்பாக ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும்” என்று முதல்வர் நாராயணசாமி பேசியிருந்தார். அவர் பேசிய 2வது நாளே இந்த செயின் பறிப்புச் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த செயின் பறிப்புச் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியிருப்பதால் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர் புதுச்சேரி மக்கள்.