Published:Updated:

`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா?!' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்

இரா.கோசிமின்
`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா?!' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்
`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா?!' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்

சிவகாசியில் காவலர் மனைவியின் இருசக்கர வாகனத்துக்கு பஞ்சர் ஒட்டி கூலி கேட்டதால் டூவீலர் மெக்கானிக்கைக் காவல்துறையினர் கடுமையாக தாக்கினர்.

`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா?!' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் சிவகாசி பிள்ளையார் கோயில் அருகே இருசக்கர வாகன ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். நேற்று (14.06.2019) காவலர் ஒருவருடைய மனைவியின் இருசக்கர வாகனத்துக்கு பஞ்சர் ஒட்டி பணம் கேட்டுள்ளார். இதனால் கடுமையாக தாக்கப்பட்ட டூவீலர் மெக்கானிக் மயக்கமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவரது சகோதரர் முருகன் கூறும்போது, ``என் தம்பி சில மாதங்களுக்கு முன்புதான் சிவகாசியில் சொந்தமாக கடையைத் தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று திருத்தங்கல் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் தில்லை நடராஜன் என்பவரது மனைவி தன் இருசக்கர வாகனத்தை பஞ்சர் ஒட்டுவதற்காக கடையில் கொடுத்துள்ளார். பஞ்சர் ஒட்டியபின் குருசாமி அதற்கான கூலி கேட்டுள்ளார். ஆனால், `என் கணவர் போலீஸ். எனவே, பணம் தர முடியாது' என அந்தப் பெண் கூறியுள்ளார். `செய்த வேலைக்குக் கண்டிப்பாகப் பணம் கொடுக்க வேண்டும்' என என் தம்பி கூறியுள்ளார். அப்போது வண்டியில்தான் பணம் இருந்தது. நீ திருடிவிட்டாய் எனக் கூறி தகராறு செய்துள்ளார். ஆனால் வண்டியின் சாவியை அந்தப் பெண்தான் வைத்திருந்தார். அவர் கண் முன்னால்தான் பஞ்சர் ஒட்டப்பட்டது.

சிறிது நேரத்தில் கணவருக்கு போன் செய்ததால் அவரும் கடைக்கு வந்து போலீஸின் மனைவி எனத் தெரிந்தும் பணம் கேட்பாயா என்று கூறி என் தம்பியிடம் தகராறு செய்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த என் தம்பி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்நிலையில் இரவில் மருத்துவமனைக்கு வந்த தில்லை நடராஜன் மற்றும் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் முத்துமாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் மிரட்டியுள்ளனர்.

`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா?!' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்

மேலும், மருத்துவமனையில் இருந்து இரவோடு இரவாக டிஸ்சார்ஜ் ஆகிவிட வேண்டும். இல்லையெனில் கஞ்சா வழக்கு, திருட்டு பைக்குகளை விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் செய்த உழைப்புக்குப் பணம் கேட்டதால் இவ்வளவு பிரச்னையா என்ற மனவேதனையில் உள்ளார். எனவே கொலைமிரட்டல் விடுத்த காவலர் தில்லை நடராஜன், அவரது மனைவி மற்றும் முத்துமாரியப்பன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து விவரம் கேட்க காவலர் தில்லை நடராஜனை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசனிடம் கேட்டபோது, ``இந்தப் புகார் குறித்து டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புகாரில் உண்மை இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

Vikatan