Published:Updated:

`அவர்களைப் பகைத்துக்கொண்டு வாழ முடியாது!' - உடலில் பாய்ந்த புல்லட்டுடன் 9 நாள்களாக அலைந்த துப்புரவுப் பணியாளர்

எஸ்.மகேஷ்

`நான் வீட்டுக்குச் சென்றபோது, சிலர் அங்கு தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதைத் தட்டிக்கேட்டபோது, துப்பாக்கியை எடுத்த ஒருவர், சுட்டுவிடுவதாக மிரட்டியதோடு துப்பாக்கியின் விசையை அழுத்தினார். இடுப்பில் ஏதோ ஒன்று துளைத்தது போல இருந்தது. ஆனால், அதை நான் பெரிதுபடுத்தவில்லை' என புல்லட்டுடன் சிகிச்சைபெறும் செந்தில்குமார் தெரிவித்தார். 

`அவர்களைப் பகைத்துக்கொண்டு வாழ முடியாது!' - உடலில் பாய்ந்த புல்லட்டுடன் 9 நாள்களாக அலைந்த துப்புரவுப் பணியாளர்

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், இடுப்பில் புல்லட்டுடன் (தோட்டா) ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் அந்தப் புல்லட்டை டாக்டர்கள் எடுத்துள்ளனர். என்ன நடந்தது என்று செந்தில்குமாரிடம் பேசினோம். 

 ``அன்றைய தினம் நான் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதன்பிறகு, ஒருவரை மற்றவர்கள் தாக்கினர். அதை நான் தட்டிக்கேட்டேன். அப்போது துப்பாக்கியை எடுத்த ஒருவர், என்னைப் பார்த்து சுட்டுவிடுவதாக மிரட்டினார். அதனால் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அப்போது என் சட்டையில் ரத்தக் கறை இருந்ததை வீட்டில் உள்ளவர்கள் பார்த்து என்னவென்று கேட்டனர். அதன்பிறகுதான் இடுப்பில் காயம் இருப்பதைப் பார்த்தேன். 

`அவர்களைப் பகைத்துக்கொண்டு வாழ முடியாது!' - உடலில் பாய்ந்த புல்லட்டுடன் 9 நாள்களாக அலைந்த துப்புரவுப் பணியாளர்

அன்றைய தினம் எனக்கு எதுவும் தெரியவில்லை. அதன்பிறகு, எனக்கு அந்த இடத்தில் வலி ஏற்பட்டது. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது புல்லட் இருந்தது. போலீஸார் என்னிடம் விசாரித்தனர். அவர்களிடம் நடந்த தகவலை தெரிவித்துள்ளேன்" என்றார். 

 இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``எண்ணூர் சிவகாமி நகரில், சில தினங்களுக்கு முன் சில ரவுடிகள் மதுஅருந்தியுள்ளனர். அப்போது, ரவுடி ரமேஷ் என்பவர் துப்பாக்கி வைத்திருந்திருக்கிறார். அவர் பாத்ரூம் செல்லும்போது, அலெக்ஸாண்டர் என்பவரிடம் துப்பாக்கியைக் கொடுத்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் செந்தில்குமாரை துப்பாக்கியை காட்டி அலெக்ஸாண்டர் மிரட்டியுள்ளார். குடிபோதையில் துப்பாக்கியின் விசை அழுத்தப்பட்டு, செந்தில்குமாரின் இடுப்பில் குண்டு துளைத்துள்ளது. ஆனால், செந்தில்குமாரும் அதைக் கவனிக்கவில்லை. `

`அவர்களைப் பகைத்துக்கொண்டு வாழ முடியாது!' - உடலில் பாய்ந்த புல்லட்டுடன் 9 நாள்களாக அலைந்த துப்புரவுப் பணியாளர்

வலியால் துடித்த செந்தில்குமாரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீஸிக்குத் தகவல் தெரிந்தால் சிக்கல் என அந்த ரவுடிக் கும்பல் கருதியுள்ளது. ஆனால், மருத்துவமனையிலிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினோம். இந்தச் சம்பவம் தொடர்பாக அலெக்ஸாண்டர், ரமேஷ் உட்பட 3 பேரை கைதுசெய்துள்ளோம். அவர்களிடமிருந்து துப்பாக்கி, புல்லட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``ரமேஷ், அலெக்ஸாண்டர் மற்றும் அவரின் கூட்டாளிகள்மீது காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சமயத்தில், ரவுடி கும்பல் ஒன்றாகச் சேர்ந்து மதுஅருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முதலில், இந்தச் சம்பவத்தை மறைக்க அந்தக் கும்பல் முயன்றுள்ளது. ஆனால், இடுப்பில் துளைத்த புல்லட்டை அறுவைசிகிச்சைமூலம் எடுக்க செந்தில்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், எங்களிடம் சிக்கிக் கொண்டனர். அவரின் இடுப்பில் 9 நாள்களாக புல்லட் இருந்துள்ளது. ரமேஷுக்கு எப்படி துப்பாக்கி, புல்லட் கிடைத்தன என்று விசாரித்துவருகிறோம்" என்றார். 

`அவர்களைப் பகைத்துக்கொண்டு வாழ முடியாது!' - உடலில் பாய்ந்த புல்லட்டுடன் 9 நாள்களாக அலைந்த துப்புரவுப் பணியாளர்

செந்தில்குமாரின் நண்பர் ஒருவர் ரவுடி கும்பலுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அவரை ரவுடி கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதை செந்தில்குமார் தட்டிக் கேட்டுள்ளார்.  இடுப்பில் குண்டு பாய்ந்தபோதும் செந்தில் குமார் அதை ஏன் கவனிக்கவில்லை என்பது போலீஸாரின் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து செந்தில்குமாரிடம் விசாரித்தபோது, `அவர்களை எல்லாம் பகைத்துக்கொண்டு வாழ முடியாது' என்று மட்டும் பதில் அளித்துள்ளார். 

வடசென்னையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Vikatan