Published:Updated:

கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு!

துரை.வேம்பையன்
கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு!
கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு!

 கந்துவட்டி கொடுமையால், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு!


 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, ஆட்சியரின் கார் நிற்கும் இடத்தின் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரெனத் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். ஆட்சியர் அலுவலக வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், பதறியடித்துக்கொண்டு வந்து அவரை தடுத்துநிறுத்தினர். உடனடியாகத் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீரை அவர் மீது பீய்ச்சி அடித்து, அந்த நபரைக் காப்பாற்றினர்.

கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு!

தொடர்ந்து நடந்த விசாரணையில், தீக்குளிக்க முயன்ற நபர், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அறிவானந்தம் என்பதும், அவர் அந்தப் பகுதியில் ஹோட்டல் நடத்திவருகிறார் என்பதும் தெரியவந்தது. இவர், வியாபாரச் செலவுக்காக கரூரில் உள்ள கந்துவட்டிக்கு  பணம் கொடுக்கும் ஒருவரிடம், ரூபாய் 4 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். அதற்காக, அவரிடம் அதிக வட்டியுடன் பல லட்சம் ரூபாய் கேட்டு கந்துவட்டிகாரர் மிரட்டியதால், மனமுடைந்துபோன அறிவானந்தம் தீக்குளிக்க முயற்சித்திருக்கிறார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 
 

கரூரில் நடைபெறும் இதுபோன்ற கந்துவட்டிக் கொடுமைகளைத் தடுக்க, கரூர் மாவட்டத்தில் புதிதாக காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள விக்ரமன், பல்வேறு தடுப்பு முயற்சிகளை எடுத்துவருகிறார். சமீபத்தில், கரூரில் உள்ள தனியார் அரங்கில், கரூர் மாவட்டம் முழுக்க அரசு அனுமதிபெறாமல் விதிமுறைகளை மீறி வட்டித்தொழில் செய்யும் நபர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 'முறைபடி அரசு தரப்பில் அனுமதி வாங்கியே இந்தத் தொழிலை நடத்தணும். அனுமதி வாங்காமல் மக்களிடம் கந்துவட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என்ற பெயரில் வட்டியை வசூலித்தால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை பாயும்' என்று எச்சரிக்கைசெய்தார்.

கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு!

இந்நிலையில்தான், கந்துவட்டிக் கொடுமையால் அறிவானந்தம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குள்ளிக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். "கரூர் மாவட்டத்தில் நிலவிவரும் கந்துவட்டிக் கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மாவட்ட எஸ்.பி விக்ரமன் வெறும் பேச்சில்மட்டும் இல்லாமல், செயலிலும் இறங்கி கந்துவட்டிக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்" என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Vikatan