Published:Updated:

`மிரட்டல்கள் வருகின்றன!' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்

குருபிரசாத்
`மிரட்டல்கள் வருகின்றன!' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்
`மிரட்டல்கள் வருகின்றன!' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்

பல்வேறு தரப்பில் இருந்து தங்களுக்கு மிரட்டல் வருவதாக, மேட்டுப்பாளையத்தில் ஆணவத் தாக்குதலுக்கு ஆளான இளம் பெண்ணின் தாய் கூறியுள்ளார்.

`மிரட்டல்கள் வருகின்றன!' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர், கருப்பசாமி. அவரது மகன் கனகராஜ், உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்துவந்துள்ளனர். இதனிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து, இரண்டு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து பிரித்துவைத்துள்ளனர். இந்நிலையில்  கனகராஜ், வர்ஷினி பிரியாவை கடந்த வாரம் தனது தந்தை கருப்பசாமியிடம் அழைத்துச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, கனகராஜின் தந்தை அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பதாக உறுதி அளித்துள்ளார். இதற்காக, அவர்கள் இருவரையும் வெள்ளிப்பாளையம் அருகே ஓர் இடத்தில் தங்கவைத்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களாக, கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதனிடையே,  நேற்று மாலை கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்குச் சென்ற அவரது அண்ணன் வினோத், பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது எனத் தம்பி கனகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து, கை மற்றும் தலை பகுதியில் பலமாக வெட்டுப்பட்ட கனகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், வர்ஷினி பிரியாவையும் வினோத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், வர்ஷினி சிகிச்சை பெற்றுவருகிறார். வர்ஷினி உயிர் பிழைப்பதற்கு, 10 சதவிகிதம்தான் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆணவக்கொலை செய்த வினோத், மேட்டுப்பாளையம் போலீஸிடம் இன்று காலை சரணடைந்தார். 

`மிரட்டல்கள் வருகின்றன!' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்

இதுகுறித்து வர்ஷினி பிரியாவின் தாய் அமுதா, "இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்துவந்தனர். சாதியைச் சொல்லி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரையும் பிரித்து வைத்தோம். என் மகளைப் பாட்டி வீட்டில் வைத்திருந்தோம். நான்கு நாள்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார்.  நேற்று கனகராஜின் தரப்பில் இருந்து ஒருவர், அழைத்துச் சொன்னபோதுதான் எனக்கு விஷயமே தெரிந்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக, தனி வழக்கறிஞர் குழு அமைக்க வேண்டும். குற்றவாளிகளைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பல்வேறு தரப்பில் இருந்து எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றார் கண்ணீருடன்.

"தமிழகத்தில் ஆணவக் கொலை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால், தமிழக அரசு இதை ஒப்புக்கொள்வதே இல்லை. தமிழகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 185 ஆணவக் கொலைகள் நடந்ததுள்ளன. மேற்கு மண்டலத்தில் சாதியக் கொலைகள் அதிகரித்துள்ளன. அதேபோல, ஆணவ சித்தரவதைகளும், தாக்குதல்களும் நடந்துவருகின்றன. எனவே, ஆணவக் கொலைகள் மற்றும் தாக்குதல்களைத் தடுக்க தனி போலீஸ் பிரிவு அமைக்க வேண்டும். வர்ஷிணி பிரியாவின் குடும்பத்துக்கு  50 லட்ச ரூபாய் நிதி உதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும்" என்று சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கூறியுள்ளார்.

`மிரட்டல்கள் வருகின்றன!' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அரசு மருத்துவமனைக்கு வந்து, வர்ஷினி பிரியாவின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். வர்ஷினி பிரியா குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஆட்சியர் ராசாமணி உறுதியளித்துள்ளார். 

Vikatan