Published:Updated:

ரூ.10 லட்சம் கேட்ட காதலி; திருடச் சென்ற காதலன்! - போலீஸிடம் சிக்கியது எப்படி?

எஸ்.மகேஷ்
ரூ.10 லட்சம் கேட்ட காதலி; திருடச் சென்ற காதலன்! - போலீஸிடம் சிக்கியது எப்படி?
ரூ.10 லட்சம் கேட்ட காதலி; திருடச் சென்ற காதலன்! - போலீஸிடம் சிக்கியது எப்படி?

சென்னை தாம்பரம் போலீஸாரிடம் சிக்கிய திருடர்களிடம் விசாரித்தபோது ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. காதலிக்காக நண்பர்களுடன் திருடச் சென்ற காதலன் போலீஸாரிடம் வசமாக சிக்கியுள்ளார். 

ரூ.10 லட்சம் கேட்ட காதலி; திருடச் சென்ற காதலன்! - போலீஸிடம் சிக்கியது எப்படி?

சென்னை, தாம்பரம் - முடிச்சூர் சாலையில் சௌந்திரபாண்டியன் என்பவரின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீஸார் விசாரணை நடத்தினர். உதவி கமிஷனர் அசோகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஷாலினி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சையத், சேகர், தலைமைக் காவலர் மதன் மற்றும் போலீஸார் முனுசாமி, தண்டபாணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை நடந்த சமயத்தில் அதிகாலை நேரத்தில் நீண்ட நேரமாக கால்டாக்ஸி ஒன்று வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அடுத்தடுத்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கால் டாக்ஸியில் வந்தவர்கள்தான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை போலீஸார் உறுதி செய்தனர். 

இதையடுத்து, கால்டாக்ஸி பதிவு எண்ணை போலீஸார் சேகரித்து விசாரித்தனர். சேலையூரைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான காரை குரோம்பேட்டை, ஜெய் நகர் முதலாவது குறுக்குத்தெருவைச் சேர்ந்த டிரைவர் ஆண்டனி என்பவர் ஓட்டி வருவது தெரியவந்தது. அவரிடம் கார் வாடகைக்கு வேண்டும் எனப் பேசிய போலீஸார் தாம்பரம் காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். அதை நம்பி ஆண்டனியும் அங்கு வந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது முதலில் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆண்டனியிடம் காண்பித்தனர். அதன்பிறகுதான் அவர் நடந்த விவரங்களை முழுமையாக போலீஸாரிடம் தெரிவித்தார். ஆண்டனியின் நண்பர்களான சிட்லபாக்கம் திருவள்ளூவர் நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (24), குரோம்பேட்டை, ஜெய் நகர், 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை போலீஸார் பிடித்தனர். விசாரணையில் ருசிகரத் தகவல்கள் வெளியாகின. 

ரூ.10 லட்சம் கேட்ட காதலி; திருடச் சென்ற காதலன்! - போலீஸிடம் சிக்கியது எப்படி?


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், ``செல்லத்துரை வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஓராண்டாக உயிருக்கு உயிராகக் காதலித்துள்ளார். அவரைத் திருமணம் செய்ய காதலி வீட்டுக்குச் சென்றார் செல்லத்துரை. அங்கு காதலியின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், 10 லட்சம் ரூபாய் சம்பாதித்துவிட்டு வா, அப்போது பெண்ணைத் தருகிறோம் என்று கூறியுள்ளனர். காதலியின் பெற்றோர் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட செல்லத்துரை, பணம் சம்பாதிப்பது குறித்து நண்பர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் திருடத்தான் வேண்டும் என்று நண்பர்கள் செல்லத்துரையிடம் சொல்லியுள்ளனர். இதையடுத்து, செல்லத்துரை தாம்பரம் பகுதியில் உள்ள பணக்கார வீடுகளை நோட்டமிட்டுள்ளார். அப்போதுதான் சௌந்திரபாண்டியனின் வீட்டில் ஆள் இல்லாமல் பூட்டப்பட்டதை அறிந்த செல்லத்துரை நண்பர்களுடன் அந்த வீட்டுக்கு திருடச் சென்றார். இதற்காக கடப்பாரைக் கம்பியைக் கையோடு எடுத்துக்கொண்டு செல்லத்துரை, நண்பன் ஆண்டனியின் காரை புக் செய்துள்ளார். அவரிடம் ஒருநாள் இரவுக்கு 20,000 ரூபாய் தருகிறேன் என்று செல்லத்துரை கூறியுள்ளார்.

ரூ.10 லட்சம் கேட்ட காதலி; திருடச் சென்ற காதலன்! - போலீஸிடம் சிக்கியது எப்படி?

செல்லத்துரை, ஆண்டனி, விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். வீட்டிலிருந்த லாக்கரில் நகை, பணம் இருந்துள்ளது. ஆனால், அதை செல்லத்துரையால் உடைக்க முடியவில்லை. இதனால் திருட வந்த வீட்டில் வெறுங்கையோடு செல்லக் கூடாது என்று டிவி மற்றும் கடிகாரத்தைத் திருடிக்கொண்டு செல்லத்துரை மற்றும் அவரின் நண்பர்கள் தப்பிவிட்டனர். சிசிடிவி கேமரா உதவியால் மூன்று பேரையும் கைது செய்து டிவி, கடிகாரத்தைப் பறிமுதல் செய்துள்ளோம். திருடப் பயன்படுத்திய காரையும் கடப்பாரையையும் கைப்பற்றியுள்ளோம். செல்லத்துரை மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. மேலும், செல்லத்துரையின் நண்பர்கள் மீது பைக் திருட்டு வழக்கும் உள்ளது" என்றார். 

செல்லத்துரை போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``என் காதலியை திருமணம் செய்ய வேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. இதனால்தான் திருடச் சென்றேன். முதல் திருட்டு சம்பவத்திலேயே சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார். 

ரூ.10 லட்சம் கேட்ட காதலி; திருடச் சென்ற காதலன்! - போலீஸிடம் சிக்கியது எப்படி?

காதலியை கரம்பிடிப்பதற்காக திருடச் சென்ற செல்லத்துரை மற்றும் அவருக்கு உதவிய நண்பர்கள் சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். செல்லத்துரையின் காதல் கதையைக் கேட்ட போலீஸார், அந்தப் பெண்ணின் வீட்டினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது பெண் வீட்டினர், `செல்லத்துரை வேலைக்குச் சென்று சமூகத்தில் மதிக்கத்தக்க ஒருவராக உயர்ந்தால் அவருக்கு பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அவரோ மீண்டும் தவற்றுக்கு மேல் தவற்றை செய்து சிக்கலில் மாட்டிவருகிறார்' என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் சிக்கிய காமெடி காதலனின் கதை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.