Published:Updated:

ஏசி கேஸ் கசிவால் தூக்கத்திலேயே பறிபோன 3 பேரின் உயிர்! கோயம்பேட்டில் நடந்த சோகம்

எஸ்.மகேஷ்
ஏசி கேஸ் கசிவால் தூக்கத்திலேயே பறிபோன 3 பேரின் உயிர்! கோயம்பேட்டில் நடந்த சோகம்
ஏசி கேஸ் கசிவால் தூக்கத்திலேயே பறிபோன 3 பேரின் உயிர்! கோயம்பேட்டில் நடந்த சோகம்

சென்னை கோயம்பேட்டில் இன்வெட்டரிலில் இயங்கிய ஏ.சி. இயந்திரத்திலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூன்றுபேரும் பலியாகினர்.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மனைவி கலையரசி. இவர்களுக்கு 8 வயதில் கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் சரவணனின் வீடு இன்று காலை நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சரவணனின் வீட்டைத் தட்டினர். அதன்பிறகும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்தவர்கள் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், சரவணனின் வீட்டுக் கதவை உடைத்தனர். அப்போது, படுக்கையறையில் 3 பேரும் படுத்திருந்தனர். உடனே அவர்களை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் எப்படி இறந்தனர் என்று போலீஸார் விசாரித்தனர். 

முதற்கட்ட விசாரணையில் நேற்றிரவு சரவணன் வீடு, அமைந்துள்ள பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்வெட்டரில் ஏ.சி. இயங்கியுள்ளது. அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏ.சி. இயந்திரத்திலிருந்து கேஸ் வெளியானதாக தெரியவந்துள்ளது. அந்தக் காற்றை சுவாசித்த 3 பேரும் தூக்கத்திலேயே இறந்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்கின்றனர் போலீஸார். ஒரே குடும்பத்தில் 3 பேரும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக விபத்து என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.