Published:Updated:

ஆசிரியர்கள் சாப்பிட்ட எச்சில் பாத்திரத்தைக் கழுவும் மாணவி! - கும்பகாேணத்தில் அவலம்

கே.குணசீலன்
ஆசிரியர்கள் சாப்பிட்ட எச்சில் பாத்திரத்தைக் கழுவும் மாணவி! - கும்பகாேணத்தில் அவலம்
ஆசிரியர்கள் சாப்பிட்ட எச்சில் பாத்திரத்தைக் கழுவும் மாணவி! - கும்பகாேணத்தில் அவலம்

கும்பகோணம் அருகே ஆசிரியர்கள்  தாங்கள் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளைக் கொண்டு கழுவ வைத்து வருகின்றனர். மாணவி பாத்திரம் கழுவும் படம் சமூக வலைதளத்தில் வைரலானது. சமத்துவம் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களே ஏழை மாணவர்களை ஏழைகளாக நடத்துவது பெரும் கொடுமை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

ஆசிரியர்கள் சாப்பிட்ட எச்சில் பாத்திரத்தைக் கழுவும் மாணவி! - கும்பகாேணத்தில் அவலம்

கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடியில் சுந்தர கணேசா என்ற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆசிரியர்கள் பணி புரியும் இந்தப் பள்ளியில் சுமார் 45 மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் டீச்சர்கள் சாப்பிட பயன்படுத்திய பாத்திரங்களைக் கழுவுகின்ற போட்டோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. வறுமையில் அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் ஏழை மாணவர்களை கள் நெஞ்சம் படைத்த ஆசிரியர்கள் பாடம் படிக்கின்ற நேரத்தில் பாத்திரம் கழுவ வைப்பது எந்த விதத்தில் நியாயம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து சிலரிடம் பேசினோம். ``சுந்தர கணேசா தொடக்கப்பள்ளியில்  இருபாலர் படிக்கும் பள்ளி. ஏழை மாணவர்கள் அதிகம் படித்து வரும் இந்தப் பள்ளியில் இரண்டு டீச்சர்கள் பணி புரிந்து வருகின்றனர். மேலும், அவர்கள் வரும்போதே வீட்டில் இருந்து மதியத்துக்கான உணவை கேரியரில் எடுத்து வருவது வழக்கம். பின்னர், அவர்கள் மதியம் சாப்பிடத் தொடங்கும்போதே ஒரு மாணவி உதவிக்கு நின்று சாப்பாட்டை எடுத்து வைக்க வேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் அந்தப் பாத்திரங்கள் மற்றும் டீ குடித்த கிளாஸ், பிளாஸ்க் உள்ளிட்ட பாத்திரங்கள் அனைத்தையும் உதவிக்கு நின்ற மாணவி எடுத்துச் செல்வதோடு தண்ணீர் எடுத்து வந்து அந்தப் பாத்திரங்களைக் கழுவி காய வைத்து எடுத்து வைக்க வேண்டும். இது தினமும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. வீட்டில் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் தங்கள் பிள்ளைகளின் பெற்றோர்கள் எந்த வேலையும் வாங்க மாட்டார்கள். ஆனால், பாடம் படித்து ஓடியாடி விளையாட வேண்டிய சிறு குழந்தைகளைத் தாங்கள் சாப்பிட்ட எச்சில் பாத்திரத்தை கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் ஆசிரியர்களே கழுவ வைப்பது பெரிய வேதனை.

இதனால், இந்தப் பணியைச் செய்யும் மாணவி மன ரீதியாகப் பாதிக்கப்பட வாய்புள்ளது தன்னையறியாமலேயே அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். மேலும், அவர்களுடைய குழந்தைகளாக இருந்தால் இது போன்று நடந்துகொள்வார்களா. ஏழைகளின் வீட்டு பிள்ளைகள்தாம் அரசுப் பள்ளிகளுக்கு படிக்க வருகின்றனர். ஆனால், அவர்கள் சமத்துவமாக இருக்க வேண்டிய இடத்திலும் ஏழையாக நடத்தப்படுவது எவ்வளவு பெரிய கொடுமை. இனி இது போன்று எந்த ஆசிரியர்களும் நடந்துகொள்ளாமல் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாக நினைத்து கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும்'' என்றனர்.

இது குறித்து கும்பகோண அளவிலான கல்வி அதிகாரியான பாப்பம்மாள் என்பவரிடம் பேசினோம். ``சமூக வலைதளத்தில் வந்த போட்டோவை நானும் பார்த்தேன். ஆசிரியர்கள் செய்தது தவறு. உடனே இது குறித்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அதன் பிறகு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Vikatan