Published:Updated:

`மரத்தடியில் வகுப்பறை, தெரு பைப்பில் குடி நீர்!' - அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்

ஜி.சதாசிவம்
`மரத்தடியில் வகுப்பறை, தெரு பைப்பில் குடி நீர்!' - அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்
`மரத்தடியில் வகுப்பறை, தெரு பைப்பில் குடி நீர்!' - அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. குடி நீர், சுற்றுச் சுவர் என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்படுகிறது அரசுப் பள்ளி.

விருத்தாசலம் அருகே கம்மாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் போதுமான வகுப்பறை வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வெயில் காரணமாக மாணவ மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணிக்காகப் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சீர் அமைக்கப்படவில்லை. இதனால் வகுப்பறைகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகத் திகழ்கிறது.

`மரத்தடியில் வகுப்பறை, தெரு பைப்பில் குடி நீர்!' - அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்

மேலும், மாணவ மாணவிகளுக்கு குடி நீர் வசதி இல்லை. இதனால் அவர்கள் சாலையோரம் அமைந்துள்ள மினி டேங்கில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தும் நிலை உள்ளது. அதிக மாணவ மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியில் போதுமான வகுப்பறைகள், சுற்றுச்சுவர், குடி நீர் என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இரண்டு பேர் இன்று பள்ளிக்குச் சென்று மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுவதை வீடியோ எடுத்தபோது ஆசிரியர்கள் சிலர் அங்கு வந்து அனுமதியில்லாமல் எப்படி எடுக்கலாம் எனக் கூறி அவர்களைத் திட்டி, தாக்கி, அவர்களிடம் இருந்து கேமராவைப் பிடுங்கியுள்ளனர். இதனால் செய்தியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கம்மாபுரம் போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி ஆசிரியர்களிடமிருந்து கேமராவை வாங்கி செய்தியாளர்களிடம் கொடுத்துள்ளனர். பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவ, மாணவிகள் அவதிப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் ஆசிரியர்கள் கேமராவைப் பறித்து, தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Vikatan