Published:Updated:

`கவுன்ட் டவுன்' ஸ்டார்ட் - அண்ணா பல்கலைக்கழக அடுத்த பதிவாளர் யார்?

எஸ்.மகேஷ்
`கவுன்ட் டவுன்' ஸ்டார்ட் - அண்ணா பல்கலைக்கழக அடுத்த பதிவாளர் யார்?
`கவுன்ட் டவுன்' ஸ்டார்ட் - அண்ணா பல்கலைக்கழக அடுத்த பதிவாளர் யார்?

அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவியைப் பெற கடும் போட்டி நிலவுகிறது. பதிவாளர் பதவிக்கான ரேஸில் அ.தி.மு.க, பா.ஜ.க தலையீடு இருப்பதாகப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. 

`கவுன்ட் டவுன்' ஸ்டார்ட் - அண்ணா பல்கலைக்கழக அடுத்த பதிவாளர் யார்?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவாளர் (பொறுப்பு) குமார். இவர், இந்த மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். இதனால் இந்தப் பதவியைப் பெற பல்கலைக்கழகத்தில் கடும் போட்டி நிலவுகிறது. தகுதியான பேராசிரியர்கள், அரசியல் பலம் ஆகியவற்றுடன் பதவியைக் கைப்பற்ற காய் நகர்த்தப்பட்டுவருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா நியமனத்தில் ஆளுங்கட்சியினர் அதிருப்தியடைந்தனர். இதனால் சூரப்பாவுக்கும் ஆளுங்கட்சியினருக்கும் சுமுகமான உறவு ஆரம்பத்திலிருந்தே இல்லை.

இந்நிலையில் சூரப்பாவின் அதிரடி நடவடிக்கைகளால் பல்கலைக்கழகத்தில் தவறு செய்தவர்கள் பீதியில் உள்ளனர். தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். ஆனால், துணைவேந்தர் சூரப்பாவின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகத்தில் வரவேற்பு இருந்தாலும் அவரின் சில அணுகுமுறை சிலருக்குப் பிடிக்கவில்லை. 

குறிப்பாக, பதிவாளர் நியமனத்தில் துணைவேந்தர் சூரப்பா அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில்கூட பதிவாளர் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கல்விக் கட்டண உயர்வு குறித்தும் தண்ணீர் பிரச்னை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் வலம்வரும் விநாயகா பிரதர்ஸ் டீம் வைப்பதுதான் சட்டமாக உள்ளது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். இந்த டீமுக்கு வேண்டப்பட்டவர்கள்தாம் உயர்பதவியில் உள்ளனர். பதிவாளர் பதவியில் தங்கள் டீமைச் சேர்ந்த ஒருவரை அமர்த்திவிட வேண்டும் என விநாயகா பிரதர்ஸ் ஆளுநர், அமைச்சர், துணைவேந்தர் அலுவலகம் ஆகியவற்றில் காயை நகர்த்திவருகின்றனர். 

பதிவாளர் பதவி ரேஸில் எம்.ஐ.டி-யில் பணியாற்றும் ஆனந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் மற்றும் கந்தபாபு, பட்நாயக், கருணாமூர்த்தி, ரேமென்ட் உதித்ராஜ் தற்போதைய பதிவாளர் குமார் (பணிநீட்டிப்பு மூலம்) ஆகியோர் உள்ளனர். இதில் விநாயகா பிரதர்ஸ் டீமின் ஆசி மூன்று பேருக்கு உள்ளது. கடும் போட்டி காரணமாகப் பதிவாளரை நியமிக்க காலதாமதம் ஏற்பட்டுவருவதாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர். 

`கவுன்ட் டவுன்' ஸ்டார்ட் - அண்ணா பல்கலைக்கழக அடுத்த பதிவாளர் யார்?

இதுகுறித்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூறுகையில், ``பதிவாளர் பதவிக்கு நிரந்தரமாக யாரும் நியமிக்கப்படுவதில்லை. பதிவாளர் பொறுப்பில்தான் குமார் பணியாற்றினார். அதுபோல பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் என முக்கியமான பதவிகளுக்குக்கூட நிரந்தரமாக யாரும் நியமிக்கப்படவில்லை. இது, பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. துணைவேந்தர் சூரப்பா இந்த முறையாவது நிரந்தர பதிவாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பதிவாளர் பதவிக்கான ரேஸில் ஆனந்தகுமார் முன்னிலையில் இருந்துவருகிறார். 18 பிஹெச்.டி மாணவர்களை உருவாக்கியவர் ஆனந்தகுமார். டெல்லியில் நீண்ட காலமாகப் பணியாற்றிய பட்நாயக் என்பவர் மீது குறிப்பிடும் வகையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லை. ஆனால், இவரை பதிவாளராக நியமிக்க ஒருதரப்பு ஆட்சேபனை தெரிவித்துவருகிறது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக உள்ள வெங்கடேசன்,  பதிவாளர் பதவியைக் குறி வைத்துள்ளார். வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டுகளும் துணைவேந்தர் அலுவலகத்தில் வரிசை கட்டிநிற்கின்றன. ஐ.ஐ.டி படித்த கந்தபாபு, பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்த ஃபைலை சிலர் தூசி தட்டி எடுத்து துணைவேந்தர், ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். பதிவாளராக (பொறுப்பு) மைனிங் துறையைச் சேர்ந்த நாகராஜை நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர், ஏற்கெனவே வகித்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த பதிவாளர் நாகராஜா என்ற தகவல் விநாயகா பிரதர்ஸ் டீமுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 நிரந்தர பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நியமிக்கப்பட்டால் சிக்கல் என ஒருதரப்பு கருதுகிறது. இதனால்தான் தொடர்ச்சியாக இந்தப் பதவிகள் வேண்டப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பதிவாளர் பதவியை ஆளுங்கட்சி, டெல்லி லாபி (பா.ஜ.க) மூலம் கைப்பற்ற போட்டியாளர்கள் முட்டி மோதிவருகின்றனர்" என்றனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பவுண்டர்ஸ் கோட்டா உள்ளது. இந்தக் கோட்டா மூலம் நடக்கும் மாணவர்கள் சேர்க்கையில் கடந்த கல்வி ஆண்டு முதல் துணைவேந்தர் சூரப்பா விசாரணை நடத்திவருகிறார். இது, அண்ணா பல்கலைக்கழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட கல்விக்கட்டணம் மாணவர்களையும் பெற்றோர்களையும் பாதித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் அடுத்த பதிவாளர் (பொறுப்பு) யார் என்பது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 

Vikatan