Published:Updated:

கக்கன் படித்த பள்ளியை விரைந்து சீரமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !

அருண் சின்னதுரை
கக்கன் படித்த பள்ளியை விரைந்து சீரமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !
கக்கன் படித்த பள்ளியை விரைந்து சீரமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !

மதுரை மாவட்டம், மேலூர் தும்பைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தரப்போராட்ட தியாகி கக்கன் . காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த தலைவர்தான் கக்கன் என்பது பெருமைக்குரிய விஷயம். காமராஜர் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராகவும் இருந்தார் கக்கன். ஆனால் அவர் படித்த பள்ளியின் நிலையோ சொல்ல முடியாத அளவுக்கு வீழ்ந்து கிடக்கிறது . தும்பைபட்டியில் அவர் படித்த பள்ளியை சீரமைக்கக்கோரி கக்கனின் பேரன் சரசுக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ''தும்பைப்பட்டியில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் சுமார் 150 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளி கட்டடங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட, விரிசலடைந்த நிலையில், மேற்கூரையும் சேதமடைந்து காணப்படுகிறது. கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து வருவதாகக் கூறுகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்த கட்டடத்தை சீரமைக்கவும், முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்'' என் கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கக்கன் பயின்ற பள்ளியை சீரமைக்க  7 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவாகும் என செலவு மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரின் செலவு மதிப்பீட்டை பரிசீலனை செய்து,  4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும், அதனைத் தொடர்ந்து விரைவில் பள்ளிக்கட்டடத்தை சீரமைக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.