Published:Updated:

112 சிசிடிவி கேமராக்கள்.. 150 போலீஸ் - 3 அடுக்கு பாதுகாப்பில் கோவை வாக்குப்பதிவு இயந்திரங்கள்

குருபிரசாத்
112 சிசிடிவி கேமராக்கள்.. 150 போலீஸ் - 3 அடுக்கு பாதுகாப்பில் கோவை வாக்குப்பதிவு இயந்திரங்கள்
112 சிசிடிவி கேமராக்கள்.. 150 போலீஸ் - 3 அடுக்கு பாதுகாப்பில் கோவை வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றன. கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தன. இதில், கோவை நாடாளுமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அடுத்த மாதம் 23-ம் தேதி எண்ணப்படும். இந்நிலையில், கோவை நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட, கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்கப்பட்ட இயந்திரங்கள் நேற்று இரவு முதலே, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டன. பின்பு, அவை ஒதுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் (Strong room) வைக்கப்பட்டன. இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

இதுகுறித்து ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``இங்கு மொத்தம் 2,045 இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவத்தினர், 150 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி அடிப்படையில் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணிகளில் இருப்பார்கள். குறிப்பாக, 112 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள, கன்ட்ரோல் ரூமில் இருந்து அனைத்து அறைகளும் தொடர்ந்து கண்காணிப்படும்" என்றார்.