Published:Updated:

குளிர்ச்சியில் கோடியக்கரை: மகிழ்ச்சியில் வனவிலங்குகள்!

விகடன் விமர்சனக்குழு
குளிர்ச்சியில் கோடியக்கரை: மகிழ்ச்சியில் வனவிலங்குகள்!
குளிர்ச்சியில் கோடியக்கரை: மகிழ்ச்சியில் வனவிலங்குகள்!

நாகை மாவட்டம், கோடியக்கரையில் 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமை மாறா காடுகள் உள்ளன.  இங்கு அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சுமார் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள், வெளிமான்கள், நூற்றுக்கணக்கான குரங்குகள், நரிகள், முயல்கள், பன்றிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மட்ட குதிரைகள் உள்ளன.  இவைகளுக்கு நீர்அருந்த 56 இடங்களில் இயற்கையாக அமைந்த குளங்களும், 17 செயற்கையாக அமைக்கப்பட்ட தொட்டிகளும் உள்ளன.  சென்ற ஆண்டு பருவமழை தவறியதால் நீர்நிலைகள் வறண்டு வனவிலங்குகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்தன.  

இந்த அவலநிலையைப்போக்க வனத்துறையினர் டேங்கர் லாரிமூலம் நாள்தோறும் வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம் செய்தும் அது போதுமானதாக இல்லை. தாகத்தை தீர்த்துக்கொள்ள காடுகளிலிருந்து வெளிவரும் மான்களுக்கு நாய்களால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட மான்கள் இறந்தன.

இந்நிலையில், கடந்த வாரம் இந்த வனப்பகுதியில் தொடர்ந்து 25 செ.மீ-க்கு மேல் மழை பொழிந்ததால் வறண்டு கிடந்த குளங்களெல்லாம் நீர்நிரம்பி காட்சியளிக்கின்றன. இதுபற்றி கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானிடம் பேசியபோது, ”பருவமழை தவறியதால் நீர்நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது உண்மைதான். தற்போது பெய்த மழையால் எல்லா குளங்களும் நிரம்பியுள்ளதோடு, புள்வெளிகளிலும் நீர் தேங்கி நிற்கிறது. மேலும், சரணாலயத்தில் உள்ள 8 செயற்கை தொட்டிகளுக்கும் பைப்லைன் மூலம் நாள்தோறும் தண்ணீர் விடப்படுகிறது. மழைபொழிவால் புற்கள் வளர்ந்து விலங்குகளுக்கு உணவு குறைபாடும் நீங்கியுள்ளது. வளமான இந்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரத்தொடங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதருகிறோம். வனவிலங்குகளைக் காணவரும் சுற்றுலாப் பயணிகள் வனத்தை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதேபோல் குரங்குகளுக்கு தின்பண்டம் கொடுப்பதையும் நிறுத்தவேண்டும்” என்றார்.