Published:Updated:

`கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டுங்கள்; தண்ணீர் பஞ்சம் வராது!'‍ - காவிரி உரிமை மீட்புக்குழு

கு. ராமகிருஷ்ணன்
`கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டுங்கள்; தண்ணீர் பஞ்சம் வராது!'‍ - காவிரி உரிமை மீட்புக்குழு
`கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டுங்கள்; தண்ணீர் பஞ்சம் வராது!'‍ - காவிரி உரிமை மீட்புக்குழு

``கூட்டுக்குடிநீர் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த தடுப்பணைகள் அவசியம்'' என்று காவிரி உரிமை மீட்புக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஆனால், கிராமங்களுக்குள் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேதனையில் தவிக்கிறார்கள். இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற அவலம் நிகழாமல் இருக்க, காவிரி டெல்டா நீர் மேலாண்மையில் மாபெரும் மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் எனக் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் வலியுறுத்தி வந்தார்கள். தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்குவதற்காக, பல குழுக்களாகச் சென்று பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

காவிரி உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த குடந்தை அரசன், பழ.ராஜேந்திரன், முருகையன், ராமதாஸ், தங்கராசு உள்ளிட்டவர்களைக் கொண்ட ஆய்வுக்குழுவினர் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடியிலிருந்து வீராணம் வரை ஆய்வு மேற்கொண்டார்கள். இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகள் நடத்தினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இக்குழுவினர், ``கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் நிலத்தடிநீர் மட்டம் 200 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டது. போர்வெல்லை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். கொள்ளிடத்தில் தடுப்பணைகள் அமைத்தால் நிலத்தடிநீர் மட்டம் உயரும். இதனால் விவசாயிகளும் பலன் அடைவார்கள். கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும். விளாங்குடி பாலத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில்தான் மணல் அள்ள வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் 50 மீட்டர் தூரத்தில் மணல் அள்ளுவதால் பெரும் பள்ளம் ஏற்பட்டு தண்ணீரின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்கள்.